Post Top Ad

சுகாதாரமும் குறியீட்டு இடைவினைவாதமும்

கேள்வி 6: ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை குறித்த குறியீட்டு இடைவினைவாதக் கண்ணோட்டத்தை விவரித்து, அக்கண்ணோட்டம் நோய்வாய்ப்பட்ட நிலையின் போதான வாழ்வியல் அனுபவத்தை எவ்வாறு விளக்குகிறது எனக் கூறுக.



அறிமுகம்
குறியீட்டு இடைவிமனைவாதக் கோட்பாடு என்பது மனிதர்கள் வார்த்தைகள், சைகைகள், பொருட்கள், செயல்கள் போன்ற குறியீடுகளுக்கு பொருளும் அர்த்தப்பாடும் கொடுத்து ஒருவரோடு ஒருவர் எவ்வாறு; இடைத்தொடர்பு கொள்கின்றார்கள் என்பதை ஆராயும் சமூகவியல் கோட்பாடாகும். எனவே, இக்கோட்பாடு மனிதர்களின் நாளாந்த வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட அனுபவங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக காணப்படுகின்றது. அவ்வகையில் குறியீட்டு இடைவினைவாத கோட்பாடானது, ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை எனும் விடய நோக்கில், மக்கள் நோய்நிலையின் போது எவ்வாறான அனுபவங்களைப் பெறுகின்றார்கள், நோய் நிலையை எவ்வாறு புரிந்துக் கொள்கின்றார்கள், நோய் நிலை அவர்களில் எவ்வாறான அடையாளம் சார் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என ஆராய்கின்றது. இக்கோட்பாட்டின் பிரகாரம் நோய்நிலை என்பது உடல் சார்ந்த விடயமாக மாத்திரம் நோக்கப்படாமல், நபரொருவரின் சுயத்தையும், ஏனையோருடனான உறவுகளையும் பாதிக்கும் சமூக மற்றும் குறியீட்டு அனுபவமாகவும் பார்க்கப்படுகின்றது.

சுகாதாரம் தொடர்பிலான குறியீட்டு இடைவினைவாதத்தின் முக்கிய கருத்துக்கள்
1. நோய் எனப்படுவது சமூகத்தால் அடையாளமிடப்படுவதாகும்.
குறியீட்டு இடைவினைவாத கருத்தாளர்கள் நோய்நிலையானது, உயிரியல் நிகழ்வாக அமைந்து விடுவதன் காரணமாக மாத்திரம் நோய் எனக் குறிக்கப்படுவதில்லை, அந்நிலையை சமூகம் நோய் என வரையறுத்தால் மாத்திரமே நோய் எனப்படும் என்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, மனநலன் சார்ந்த பிரச்சினைகள் மருத்துவரால் நோய் நிலை குறிக்கப்படாத பட்சத்தில் அது சாமானிய வாழ்வியல் உணர்வாகவே கொள்ளப்படுகின்றது.

2. நோய்வாய்ப்பட்ட போது ஆள்சார் அடையாள மாற்றம் ஏற்படல்
நபரொருவர் நோய்நிலைக்கு ஆளாகி இருப்பது இனங்காணப்படும் போது, அந்நபர் தன்னை தானே நோக்கும் விதமும், ஏனையோர் அவரை நோக்கும் விதமும் மாற்றமடைகின்றது. இம்மாற்றமானது அந்நபரின் அடையாளம்சார் மாற்றத்துக்க வழிகோலுகின்றது. இதனை ‘ நோய்வாய்ப்பட்ட போதான அடையாளம் (sick identity)’ என்பர். இதன் போது நோய் நிலைக்கு ஆளானவர் பொதுச் சமூகத்தில் எந்தளவிற்கு ஊடாட இயலும், அல்லது தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற பல விடயங்களை எதிர்கொண்டு கையாள வேண்டிய சூழலும் ஏற்படும்.

3. சமூக இழிவுபடுத்தலுக்கு ஆளாதல்
எச்.ஐ.வி, தொழுநோய், மனநலன் பிரச்சினைகள் போன்ற சமூகத்தால் இழிவுபடுத்தப்படும் நோய்கள் ஏற்படும் போது, நோயாளர் மீது எதிர்மறையான முத்திரை சுமத்தப்படல் நடந்து விடுகின்றது. இதன் காரணமாகக் குறித்த நோய்கள் தொற்றக் கூடியதாக இல்லாத போதும், உடல்ரீதியான ஊனங்களை ஏற்படுத்தியிராத போதும் கூட, நோயாளரை தனிமைப்படுத்தலுக்கும் அவமானப்படுத்தலுக்கும் ஆளாகலாம்.

4. சுகாதார நிபுணர்களுடனான தொடர்புகள்
குறியீட்டு இடைத்தொடர்புகளில் மருத்துவர் - நோயாளர் உறவு முக்கியமானதொன்றாகும். நோயாளர் தனது நோய்நிலையை விளங்கிக் கொள்வதில், மருத்துவர் அவரிடம் தொடர்பாடும் விதம், மருத்துவம் சார்ந்த சொற்களைப் பயன்படுத்தும் விதம், ஆலோசனைகள் கூறும் போது வெளிப்படுத்தும் உடல் மொழி போன்ற விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. எனவே, தவறான தொடர்பாடல்கள் நோயாளருக்கு நம்பிக்கையின்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்திவிடும். அதேவேளை இரக்க உணர்வு, தெளிவாக விளக்கமளித்தல் போன்றன சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

5. கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள்
மக்களின் நோய்களைப் பற்றிய புரிதல் அவர்களின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளாலும் வடிவமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சில சமூகங்களில், நோய் என்பது கர்மாவின் பலன், தெய்வத்தின் தண்டனை அல்லது துர் ஆவிகளால் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றது. எனவே, மக்களின் கலாச்சார, மத நம்பிக்கைகள் அவர்கள் நோய் அறிகுறிகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றார்கள், சிகிச்சைகளை எவ்வாறு எதிர் கொள்கின்றார்கள் என்பதில் தாக்கம் செலுத்துகின்றது.

நோய்வாய்ப்பட்டிருக்கும் போதான வாழ்க்கை அனுபவம்
குறியீட்டு இடைவினைவாதமான நோய் நிலையை, நோய் அறிகுறிகளின் ஊடாக மாத்திரம் நோக்காமல், நோய்வாய்ப்பட்டிருக்கும் போது மனிதர்கள் எவ்வாறான உணர்வைக் கொண்டிருக்கின்றார்கள், எவ்வாறு சிந்திக்கின்றார்கள், எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பதைக் கவனத்தில் எடுத்து விளங்கப்படுத்துகின்றது. ஒவ்வொருவரின் நோய் நிலை தொடர்பிலான அனுபவங்கள், அவர்களின் நோய் பற்றிய கடந்த கால அனுபவங்கள், கலாச்சார பின்புலம், சமூக அந்தஸ்து, அவர்களுக்குக் கிட்டும் ஆதரவுகள் என்பவற்றின் காரணமாக வேறுபடுகின்றன.

உதாரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வாழ்வதற்கு முற்படலாம், அதேவேளை மற்றொருவர் தோல்வி மனப்பான்மையில் தான் தனிமைப்படுத்தப் பட்டதாக உணரலாம். மேலும், நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது நிலை மற்றவர்களுக்குப் புரியவில்லை, அதனை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என விரக்தியடைந்தவராகக் காணப்படலாம். இவ் மனவுணர்வுகளும் அதன் சமூக பரிமாணங்கள் நோயுற்ற போதான வாழ்க்கை அனுபவங்களில் முக்கியமானதாகும்.

எனினும், ஒருவர் தன்மீது சுமத்தப்படும் ‘நோய்’ முத்திரையை நிராகரிக்கவோ, எதிர்க்கவோ இயலும். உதாரணமாக, மனநல பிரச்சினை கொண்டவராக குறிப்பிடப்படும் ஒருவர், தன்மீது சுமத்தப்படும் ‘மன நோயாளர்’ என்ற அடையாளத்தை மறுத்து, தன்னை வித்தியாசமான சிந்தனை அல்லது நடத்தை கொண்டவர் என அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

இலங்கை சூழலிலிருந்தான எடுத்துக்காட்டுகள்
1. மன நலன்சார் பிரச்சினைகள் சமூகத்தால் இழிவாக நோக்கப்படல்
இலங்கையில், பெரும்பாலும் மனநலன் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசுவதில்லை. மனநலன் பிரச்சினைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் போது, தாம் இழிவு படுத்தப்படலாம், ‘பைத்தியக்காரர்;’ என முத்திரை குத்தப்படலாம், தொழிலிலிருந்து நீக்கப்படலாம், திருமண வாழ்வு சீர்குலையலாம் போன்ற பல காரணங்களால் அவ்வாறு மறைத்துக் கொள்கின்றார்கள். இது சிகிச்சையை நாடுவதைத் தாமதப்படுத்தி, மனவுணர்வு சார் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.

2. மருத்துவர் - நோயாளர் இடைத்தொடர்பு
பொதுத்துறை மருத்துவமனைகளில், நோயாளர்களுக்கான சிகிச்சைகள் அவசரகதியில், மருத்துவ சொற்களை போதியளவில் விளக்கமாகக் கூறாது, மிககுறைந்த அளவிலான உரையாடல்களுடன் , முடிகின்றது. இது நோயாளர்கள் தாம் மரியாதையாக நடத்தப்படவில்லை எண்ணி விடவோ, குழப்பமான மனநிலையை அடையவோ வழிவகுக்கும். அதே வேளை மருத்துவர்கள், நோயாளர்களின் நிலை மற்றும் சிகிச்சை தொடர்பாகத் தெளிவாகவும், மரியாதையாகவும் விளக்கி கூறும் போது, நோயாளர்கள் தமது நிலையை சரிவர புரிந்துக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் சிகிச்சையில் பங்கெடுப்பர்.

3. நோய்கள் தொடர்பான கலாச்சார ரீதியான பார்வைகள்
சில நேரங்களில் நோய் நிலைமைகள் ஏற்படும் போது மருத்துவ ரீதியாக எதிர்கொள்ளாமல், அதனை மத அல்லது ஆன்மீக நம்பிக்கைகள் ரீதியாக விளக்க முற்படுகின்றார்கள். உதாரணமாக, உடல் வலிப்புகள் அல்லது மனப்பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை மருத்துவ பிரச்சினையாக அணுகாமல், ஆன்மீக ரீதியான சிக்கல்களாக நோக்கி, மருத்துவரிடம் செல்லாமல், மதக்குருக்களிடம் தீர்வு நாடிச் செல்வதினை குறிப்பிடலாம்.

4. அங்கயீனம் தொடர்பான சமூகத்தின் பார்வை
பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்கள் தங்களை "நோய்வாய்ப்பட்டவர்களாக" உணராமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் சமூகத்தால் பிறரில் தங்கியிருப்பவர்களாகவோ, ஆற்றல் குறைந்தவர்களாகவோ நடத்தப்படுகிறார்கள். இது ஒரு நபர் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும்போது கூட, சமூகம் பார்க்கும் விதம் காரணமாகத் தாம் நோய் நிலையில் இருப்பவராகவா அல்லது வேறு விதமாகவா உணர்கின்றார் என்பது மாறுகின்றமைக்கு எடுத்துக் காட்டாகும்.

குறியீட்டு இடைவினைவாதத்தின் சாதக, பாதக அம்சங்கள்
சாதக அம்சங்கள்
• நோயாளர்களின் நிஜவாழ்க்கை அனுபவங்களில் கவனம் செலுத்துகிறமை.
• தொடர்பாடலையும் நோயாளர் நேய சுகாதார பராமரிப்பையும் மேம்படுத்த உதவுகிறது.
• உயிர் மருத்துவ கண்ணோட்டங்கள் பெரும்பாலும் புறக்கணித்துவிடும் சமூகத்தால் இழிவுபடுத்தப்படும் விடயத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றமை.

பாதக அம்சங்கள்
• சமூக ஏற்றத்தாழ்வுகளை (எ.கா., வறுமை, வர்க்கம் அல்லது பராமரிப்புக்கான அணுகல்) முழுமையாக விளங்கப் படுத்தாமை.
• தனிநபர் ரீதியாக அதிக கவனத்தைக் குவிப்பதனால், சமூக ரீதியான முறைசார் காரணிகளை எடுத்துக்காட்டாமை.

முடிவுரை
குறியீட்டு இடைவினைவாதமானது, மனிதர்கள் நோய்வாய்ப்படும் போதான அகவுணர்வு மற்றும் அதன் சமூக பரிமாணம் தொடர்பாக ஆராய்வதன் வாயிலாகச் சுகாதாரத் துறையில் ஆரோக்கியமானதொரு கருத்தோட்டத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வகையில் இக் கண்ணோட்டம் நோய்வாய்ப்பட்ட போதான மனிதர்களின் அனுபவங்களைப் புரிந்துக் கொள்ள உதவுகின்றது. மேலும், மனிதர்கள் நோய் நிலையை எவ்வாறு புரிந்துக் கொள்கின்றார்கள், எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கு இக்கண்ணோட்டம் முக்கியமானதாக காணப்படுகின்றது. எனவே, பிறக் கண்ணோட்டங்களுடனும் இணைந்து பிரயோகிக்கும் போது குறியீட்டு இடைவினைவாதமானது ஆரோக்கியம் மற்றும் நோய்நிலை தொடர்பான முழுழமையானதொரு பார்வையைத் தருவதாக அமைகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram