கேள்வி 7: ‘நோய் சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டது’ என்பதினை உதாரணங்கள் மூலமாக விளக்குக.
அறிமுகம்
‘நோய் சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டது’ என் கருத்தானது, சமூகவியல் கோட்பாடுகளிலொன்றான சமூக கட்டுமானவாத கோட்பாட்டிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இந்த கோட்பாடு, ஆரோக்கியம் மற்றும் நோய் நிலையானது உயிரியல் அடிப்படையானதோ, இயற்கையானதோ மாத்திரமானது அல்ல, அவை சமூகத்தின் செல்வாக்கிற்கும் உட்டபட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதாவது,மக்கள் எதனை ;நோய்’ என நோக்குகின்றார்கள் என்பது அவர்களின் நம்பிக்கைகள், கலாச்சாரம், மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் சூழல், அதிகார கட்டமைப்பு என்பவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டதாகும் என்பதினை விளக்குகின்றது. எனவே, ‘நோய் சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்டது’ எனக் கூறும் போது, நோயானது உடல் வெளிப்படுத்தும்; அறிகுறிகளுக்கு இடப்படும் நாமம் மாத்திரம் அல்ல, அவ் அறிகுறிகள் ஒரு சமூகத்தின் மக்களால் எவ்வாறு புரிந்துக் கொள்ளப்படுகின்றது, எவ்வாறு வரையறுக்கப் படுகின்றது, அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றப்படுகின்றது என்பதினாலும் வரையறுக்கப் படுகின்றது எனப் பொருள்படும். இத்தகைய கண்ணோட்டமானது ஒரு நோய் நிலை வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு விதமாகப் புரிந்துக் கொள்ளப்படுவதற்கும், நோக்கப்படுவதற்குமான காரணத்தை விளங்கப்படுத்துவதாக அமைகின்றது.
நோயை சமூக கட்டுமானமாக இனங்காணல்
நோயை வரையறுப்பதில் மனித உடல் வெளிப்படுத்தும் நோயறிகுறிகள் வகிப்பாகத்தை கொண்டிருப்பினும், சமூகமே எது நோய் என்பதை வரையறுக்கின்றது என சமூககட்டுமானவாதமும், குறியீட்டு இடைவினைவாதமும் எடுத்துக்காட்டுகின்றது. அதாவது, மனித உடல் நோயறிகுறிகளை வெளிக்காட்டினால் மாத்திரம் ‘நோய்’ ஏற்பட்டுள்ளதாக அடையாளப்படுத்தப் படுவதில்லை. குடும்பம், சமூகம், மருத்துவர் எனப் பிறரால் அவ் அறிகுறிகள் நோய்நிலையாக பார்க்கப்பட்டு, நோய் என அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே ஒருநபர் நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக அங்Pகரிக்கப்படுகின்றது. அதாவது மக்கள் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை எவ்வாறு புரிந்துக் கொள்கின்றார்கள், அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பதால் தீர்மானிக்கப்படுகின்றது. மக்களின் புரிதலும், எதிர்வினையும் கலாச்சாரம், மொழி, அரசியல் போன்ற சமூக காரணிகளின் செல்வாக்கினால் வடிவமைக்கப்படுகின்றது.
எனவே, சமூக கட்டுமானவாதத்தின் பிரகாரம், நோய் எனப்படுவது அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படுவது மாத்திரமல்ல, சமூகத்தால் அர்த்தப்படுத்தப்படுவதும் ஆகும். ஆகவே, ஒரு சமூகத்தில் நோய் என அங்கீகரிக்கப்படுவது, பிறிதொரு சமூகத்தில் நோயாக அங்கீகரிக்கப்படாது காணப்படலாம். மேலும், மருத்துவ அறிவானது சமூக நெறிமுறைகள் மற்றும் வரலாற்று அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது.
உதாரணமாக, 1970கள் வரை பல மேற்கத்திய நாடுகளின் மனநல மருத்துவர்களால் ஓரினச்சேர்க்கை ஒரு மனநோயாகக் கருதப்பட்டது. இன்று, இது மனித பாலுணர்வின் இயல்பான மாறுபாடாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த மாற்றமானது மருத்துவ வரையறைகள் காலத்துடனும்; கலாச்சார மாறுதல்களுடனும் மாற்றமடைவதைக் காட்டுகிறது.
சமூகம் நோயைக் கட்டமைக்கும் விதம்
1. கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகள்
மக்கள் கொண்டுள்ள கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகள் ஒரு நிலைமையை நோயாக வரையறுப்பதைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக சில கலாச்சாரங்களில் கால் - கை வலிப்பு, மனக்கோளாறுகள் போன்ற நிலைமைகள் ஆன்மீக ரீதியாக ஏற்பட்டுள்ள சிக்கல்களாக நோக்கப்படுகின்றன. எனவே, இவை நோயாக அங்கீகரிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவர் நாடபடாமல், ஆன்மீகவாதிகள் அல்லது மதகுருமார்களிடம் தீர்வு தேடப்படுகின்றது.
2. மொழியும் குறியீடுகளும்
மக்கள் மத்தியில் ஒரூ நோய் நிலையைப் பற்றி எவ்வாறான உரையாடல்கள் வலம் வருகின்றன என்பதும், அவை சமூகத்தில் எவ்வாறான அர்த்தப்பாடுகளை கொள்கிறது என்பதை தீர்மானிக்கின்றது. உதாரணமாக மனகோளாறு அல்லது எச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளானவர்கள், சமூக வழக்கில் “பைத்தியக்காரர்கள்”, “அருவருப்பானவர்கள்” போன்ற வார்த்தைகளால் விளிக்கப்படுவதானது, அது குறித்த சமூக இழிவை உருவாக்கவும், சமூக பாகுபாட்டை ஏற்படுத்தவும் வழிவகுக்கும். இவ்வாறான அடையாளப்படுத்தல்கள் பாதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் குறித்து எப்படியான எண்ணங்களைக் கொள்கின்றார்கள் என்பதனையும், மற்றவர்கள் அவர்களை நடத்தும் விதத்தினையும் பாதிப்பதாகவும் , தீர்மானிப்பதாகவும் அமையும்.
3. மருத்துவர்களின் அதிகாரம்
எதனை நோயாகக் கருதுவது என்பதிலும், நோய்வாய்ப்பட்ட நிலைமையைத் தீர்மானிப்பதிலும் மருத்துவர்கள் மிக முக்கியமான வகிப்பாகத்தை கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முன்பு நோயாகக் கருதப்படாத நிலைமைகள் கூட மருத்துவர்களால் நோய் என வரையறுக்கப்படலாம். உதாரணமாகப் பிரசவம், மாதவிடாய் நிறுத்தம், மனச்சோர்வு போன்ற நிலைமைகள் முன்னர் நோய் நிலையாகக் கருதப்படா விட்டாலும், தற்காலத்தில் நோய் நிலைமையாகக் கருதப்பட்டு மருத்துவச் சிகிச்சைகள் முன்மொழியப் படுகின்றமையைக் குறிப்பிடலாம்.
4. ஊடகங்களின் தாக்கம்
ஒரு நோய் நிலைமையை சமூகம் எவ்வாறு பார்க்கிறது என்பது தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்றவற்றின் தாக்கத்தினால் மாறுபடலாம். உதாரணமாக கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், ஊடகங்கள் வாயிலாக வைரசைப் பற்றிய பயத்தையும் தவறான புரிதல்கள் பரப்பப்பட்டமையானது, சில மத சமூகங்கள் மீதான பாகுபாட்டிற்கு வழிவகுத்தமையை குறிப்பிடலாம்.
‘நோய் ஒரு சமூகக் கட்டுமானம்’ என்பதற்கான எடுத்துக்காட்டுகள்
1. இலங்கை சூழலில் மனநல பிரச்சினைகள்
இலங்கை சமூகத்தில், மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மனநல நிலைமைகள் பெரும்பாலும் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை. அவை சில நேரங்களில் பலவீனம் அல்லது அவமானத்துடன் கூட தொடர்புடையவை. சமூக விலக்கு பயம் மக்கள் மத்தியில் இருக்கலாம், எனவே அவர்கள் தங்கள் அறிகுறிகளை மறைக்கிறார்கள் அல்லது உதவி தேடுவதைத் தவிர்க்கிறார்கள். இதன் விளைவாக, இந்த நோய் உயிரியல் ரீதியாக உள்ளது, ஆனால் சமூக ரீதியாகக் கண்ணுக்குத் தெரியாதது அல்லது மறுக்கப்படுகிறது.
2. தொழுநோய் மற்றும் எச்.ஐ.வி
தொழுநோயும், எச்.ஜ.வியும் உயிரியல் ரீதியாக ஏற்படும் நோய்கள் ஆயினும், அவை சமூக இழிவாக நோக்கப்படுகின்றன. சில சமூகங்களில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்களாக அல்லது தூய்மையற்றவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருந்துகளால் குணப்படுத்தவோ, நோயை கட்டுப்படுத்தவோ இயலுமானதாக இருப்பினும் கூட, சமூகம் கொண்டுள்ள பார்வை காரணமாகத் தனிமைப்படுத்தப்படுவதும், வெறுப்புடன் நடத்தப்படுவதும் நடைபெறுகின்றது.
3. மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நிறுத்தம்
சில சமூகங்களில், மாதவிடாய் என்பது தூய்மையற்ற தன்மையாகக் கருதப்பட்டு, பெண்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் அல்லது மத தளங்கள் போன்ற சில இடங்களுக்குள் செல்வதிலிருந்து தடுக்கப்படுகின்றார்கள். இங்கு, மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான உயிரியல் செயல்முறையாகக் காணப்பட்டாலும், அது சமூக விலக்காக கட்டமைக்கப்படுகின்றது. இது சமூக விதிமுறைகளால் ஒரு நிலைமை எதிர்மறையான கட்டமைக்கப்படுவதற்கு எடுத்துக் காட்டாகும்.
4. மாற்றுத்திறனாளிகள் மீது சுமத்தப்படும் சமூக அடையாளம்
உடல் குறைபாடுகள் உள்ள சிலர் தங்களை நோய்வாய்ப்பட்டவர்களாகக் கருதாமல் இருக்கலாம், ஆனால் சமூகத்தால் அவர்கள் பிறரில் தங்கி வாழ்பவர்கள் அல்லது இயலாமையுடையவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். இங்கு அவர்களின் "நோய்" பற்றிய சமூக அனுபவமானது, அவர்களது உண்மையான ஆரோக்கிய நிலைமைகளால் அல்லாது, ஏனையோரின் எதிர்வினைகளால் திணிக்கப்படுவதாக அமைகின்றது.
‘நோய் ஒரு சமூகக் கட்டுமானம்’ எனும் கருத்தின் முக்கியத்துவம்
நோயை ஒரு சமூகக் கட்டுமானமாகப் புரிந்துகொள்வது பல முக்கியமான தாக்கங்களையும், விளைவையும் ஏற்படுத்துவதாகும்.
• நோய்கள் தொடர்பில் சமூக இழிவு கற்பிக்கப்படுவதையும், மக்கள் சிகிச்சை பெறுவதைத் தவிர்ப்பதற்கான பின்னணி காரணங்களையும் எடுத்துக்காட்டுகின்றது.
• மருத்துவ நிபுணர்களைச் சுகாதாரம் சார் விடயங்களை உணர்வு ரீதியாகவும், பரந்துபட்ட வகையிலும் அணுகுவதையும் ஊக்குவிக்கின்றது.
• சுகாதார கொள்கைகளை வகுக்கும் போது கலாச்சார மற்றும் சமூக காரணிகளையும் யதார்த்தங்களையும் கருத்திலெடுப்பதினை சாத்தியமாகின்றது.
முடிவுரை
நோய் எனப்படுவது மனித உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளைக் கொண்டு வரையறுக்கப்படுவது மாத்திரமல்ல, மக்கள் தமது கலாச்சார மற்றும் சமூகச் சூழலின் அடிப்படையில் அவ் அறிகுறிகளை எவ்வாறு புரிந்துக் கொள்கின்றார்கள், விளங்கிக் கொள்கின்றார்கள், அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பதாலும் வரையறுக்கப்படுவதும் ஆகும். சமூகக் கட்டுமானக் கண்ணோட்டத்தின் மூலம், ஆரோக்கியமும் நோய் நிலையும் மனித இடைத்தொடர்புகள், வரலாற்று மாற்றங்கள் மற்றும் அதிகார கட்டமைப்புகளால் வடிவமைக்கப்படுகின்றது என்பது எடுத்துக் காட்டப்படுகின்றது. இவ்வண்ணம், நோய் சமூக ரீதியாக கட்டமைக்கப் படுவதினை புரிந்துகொள்வதானது, நோய் நிலைமைகள் எவ்வாறு சமூக இழிவாக நோக்கப்படுவது நிகழ்கின்றது, சில நோய் நிலைமைகள் சில சமூகங்களில் நோயாகக் கருதப்படாமலிருப்பது எதனால், ஏன் சுகவாழ்வு வெவ்வேறு சமூகங்களால் வெவ்வேறுவிதமாக நோக்கப்படுகின்றது போன்ற விடயங்களை விளங்கிக் கொள்ளத் துணைசெய்யும். கலாச்சார பன்முகத்தன்மையையும், தனிநபர் எண்ணப்பாடுகளையும் மதிக்கும், பரிபூரணமானதும், மனிதநேயமிக்கதுமான சுகாதார முறைமையை உருவாக்க இப்புரிதல் மிகவும் இன்றியமையாததாகும்.
No comments:
Post a Comment