Post Top Ad

3:13 PM

மருத்துவ மயமாக்கல்

by , in
கேள்வி 11: மருத்துவ மயமாக்கல் என்றால் என்ன என்பதைக் கூறி, சமூகப் பிரச்சினைகள் எவ்வாறு மருத்துவப் பிரச்சினைகளாக மாற்றப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகள் மூலமாகக் கலந்துரையாடவும்.



அறிமுகம்
மருத்துவ மயமாக்கல் எனப்படுவது, அடிப்படையில் மருத்துவ பிரச்சினைகளாக அமையாத பிரச்சினைகளை, மருத்துவம் சார் பிரச்சினைகளாகப் புரிந்துக் கொள்தல், வரையறுத்துக் கூறுதல், சிகிச்சை அளித்தல் மூலமாக மருத்துவ பிரச்சினைகளாக அணுகும் செயன்முறையை குறித்து நிற்கும் மருத்துவ சமூகவியல் கருத்தாக்கமாகும் (concept). இக்கருத்தாக்கம் நாளாந்த வாழ்வில் சாமான்ய விடயங்களாகக் கருதப்பட்ட அல்லது சமூக, கலாச்சார வாழ்வியலில் முறைகளுடாகவோ, அல்லது தார்மீக நெறிமுறைகள் மூலமாகவோ கையாளப்பட்டு வந்த விடயங்களை மருத்துவ பிரச்சினையாக்கி, அவற்றின் மீது மருத்துவத் துறையின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதை விவரிக்கின்றது. மருத்துவ மயமாக்கல் செயன் முறையானது, தற்கால நவீன சமூகங்களில் அதிகார கட்டமைப்புக்கள், சமூக நெறிமுறைகள் மற்றும் கலாச்சார மாற்றங்களில் எவ்வாறான தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதினை இர்விங் சோலா, இவான் இல்லிச் மற்றும் பீட்டர் கான்ராட் போன்ற சமூகவியலாளர்கள் தமது ஆய்வுகள் மூலமாக எடுத்துக்காட்டி உள்ளார்கள். குறிப்பாக உயிர் மருத்துவத்தின் வளர்ச்சியும், செல்வாக்கும் காரணமாகப் பிரசவம், முதுமையடைதல், மனவழுத்தம் போன்ற வழக்கமான வாழ்க்கை நிகழ்வுகள் இன்று மருத்துவ ரீதியாக அணுகப் படவேண்டிய மருத்துவ பிரச்சினைகளாக்கப்பட்டுள்ளன. இப்பத்தியானது மருத்தவமயமாக்கலையும் அதன் விளைவுகள் மற்றும் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகளுடன் ஆராய்கின்றது.

மருத்துவ மயமாக்கலின் வரையறையும் முக்கிய அம்சங்களும்
மருத்துவ மயமாக்கல் என்பது இயற்கையான மனித வாழ்வியல் நிலைமைகளை அல்லது சமூகப் பிரச்சினைகளை மருத்துவ ரீதியாக அடையாளம் கண்டறிந்து, சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நிலைமைகளாக மாற்றும் செயன்முறைகள் ஆகும். குறிக்கிறது.

மருத்துவ மயமாக்கலானது மருத்தவ நிபுணர்களும், மருத்துவ முறைமைகளும் சமூக பிரச்சினைகளில் தமது ஆதிக்கத்தினை பரப்புதல், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தமது வியாபார நோக்கத்திற்காக புதிய புதிய விடயங்களைச் சிகிச்சை எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையாக பிரச்சார படுத்தல், ஊடகங்கள் வழக்கமான விடயங்களை உயிர் மருத்துவ கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தி வருதல், அரசாங்கங்களும் காப்புறுதி நிறுவனங்களும் பிரச்சினைகளை மருத்துவ ரீதியானதாக வகைப்படுத்திக் கூறுவதற்கு ஊக்கப்படுத்துகின்றமை போன்ற பல காரணங்களால் ஏற்பட்டு வருகின்றது.

மருத்துவ மயமாக்கலின் முக்கிய அம்சங்கள்
வழக்கமான வாழ்வியல் அனுபவங்களை விபரிக்க மருத்துவ சொற்களைப் பயன்படுத்துதல்
சாமன்ய வாழ்வில் ஏற்படக்கூடிய வழக்கமான, இயல்பான நிகழ்வுகள், மாற்றங்களை மருத்துவ கலைச்சொற்களைக் கொண்டு அழைப்பது மருதத்துவமயமாக்கல் செயன்முறையில் அவதானிக்கக் கூடிய அம்சமாகும். உதாரணமாக, தயக்கம் சுபாவம் கொண்ட அல்லது அதிகமான உணர்வுவயப்படக் கூடிய நபர்களை, ‘சமூக பதற்ற கோளாறு’ உடையவர்கள் அல்லது ‘மனநிலை கோளாறு’ உடையவர்கள் என அழைப்பதைக் குறிப்பிடலாம். அதாவது, மனிதர்களில் ஏற்படக்கூடிய சமான்யமான மாற்றங்களாக அடையாளப்படுத்தப்பட்ட விடயங்கள், 'நோய் அறிகுறிகள் - ளுலசெழஅந’ , ‘கோளாறு - னுளைழசனநச, ‘செயலிழப்பு - னுலளகரnஉவழைn’ போன்ற சொற்களால் விபரிக்கப்படுதல் பொதுவழக்காக மாறியிருக்கும்.

நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ செயல்முறைகளில் அதிக கவனம் செலுத்தப்படல்
உடல், மனம் சார்ந்த நிலைமைகளை அல்லது மாற்றங்களை நோய் நிலை என அடையாளப்படுத்துவதிலும், மருந்து வழங்குதல், சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளைப் பரிந்துரைப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படுவதினை மருத்துவ மயமாக்கலில் காணலாம். இதன் காரணமாக சமூக மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உளவியல் சார் நடவடிக்கைகள் மூலமாகத் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட மருத்துவ பிரச்சினைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, அதிகப்படியான நோய் கண்டறிதல் நடவடிக்கைகள், தேவையற்ற மருந்து பாவனை மற்றும் சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுதல் போன்றவற்றை மருத்துவ மயமாக்கலில் காணலாம்.

மருத்துவ மயமாக்கலிற்கான எடுத்துக்காட்டுகள்
1. பிரசவம்
பாரம்பரிய ரீதியாகவே சமூக அல்லது குடும்ப நிகழ்வாகக் காணப்பட்ட பிரசவம், தற்போது முழுமையாக மருத்துவ மயமாக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலம் முழுவதும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து வழங்கல் மயமாகியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமாக நடத்தப்படுகின்றது. நிலையான ஸ்கேனிங் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன, தெற்காசியா பிராந்தியங்களில் அவசியமற்ற நிலையில் கூட, அறுவை சிகிச்சை மூலமான பிறப்புக்கள் தற்காலத்தில் பொதுவான நடைமுறையாகி உள்ளது.

உதாரணம்: இலங்கை மற்றும் இந்தியாவில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில், வருவாய் நோக்கம், வைத்தியர்களின் பரிந்துரை மற்றும் பிரசவம் குறித்த பிரச்சாரங்கள் காரணமாக, அறுவை சிகிச்சை மூலமான பிரசவத்தைத் தேர்ந்தெடுப்பது 40 சதவீதத்தையும் அதிகரித்த வகையில் காணப்படுகின்றது.

2. மனநல பிரச்சினைகள்
சோகம், பதற்றம், மன அழுத்தம் போன்ற மன உணர்வுகள் தற்காலத்தில் மனநலன் சார்ந்த கோளாறுகளாக இனம்காணப்படுகின்றன. இத்தகைய நிலைமைகள் இயல்பானவையாகவோ அல்லது கரிசனைக்குரிய வகையில் கடுமையானதாகவோ காணப்படலாம். எனினும், இவை அதிகப்படியாக மருத்துவ பிரச்சினையாக முத்திரைகுத்தப்படுவதன் காரணமாக, இவற்றுக்குக் காரணமாக அமையும் வேலையின்மை, குடும்ப பிணக்குகள் போன்ற சமூக காரணிகள் கருத்திலெடுக்கபடாத நிலைமை ஏற்படுகின்றது.

உதாரணமாக இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில், பல்கலைக்கழக மாணவர்கள் முகங்கொடுக்கும் பரீட்சை காரணமான மனவழுத்தம் அல்லது காதல் உறவு முறிவுகள் போன்ற பிரச்சினைகளுக்கு சமூக ரீதியாக அல்லது உளவியல் ரீதியான தீர்வுகள் வழங்கப்படாமல், மனவழுத்தத்தை சரிசெய்யும் மருந்துகள் தீர்வாக நடைமுறைப்படுத்தப் படுகின்றமையைக் குறிப்பிடலாம்.

3. மாதவிடாய் நிறுத்தமும் வயோதிபமும்
இயற்கையாகவே நடக்கும் வாழ்வியல் மாற்றங்களான மாதவிடாய் நிறுத்தமும், முதுமையடைதலும் சரிசெய்யப்பட வேண்டிய ஹோர்மோன் பிரச்சினை அல்லது உடல்ரீதியான பிரச்சினையாகக் கட்டமைக்கப் படுகின்றது.

உதாரணமாக, பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு ஹார்மோன் பிரதீயீடு செய்யும் சிகிச்சை (ர்ழசஅழநெ சநிடயஉநஅநவெ வாநசயில - ர்சுவு) மேற்கொள்ளவும், வயதடையும் நபர்கள் “வயதடைதலை தாமதப்படுத்தும்” சிகிச்சைகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இதன் காரணமாக இவ் மாற்றங்களை எதிர்கொள்ள வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்தும், சமூக ரீதியான வலுவூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலிருந்தும் மக்கள் திசைதிருப்பப் படுகின்றார்கள்.

4. யுவவநவெழைn னுநகiஉவை ர்லிநசயஉவiஎவைல னுளைழசனநச (யுனுர்னு) – அவதானக் குறை மிகையியக்க கோளாறு
தற்காலத்தில் குழந்தைகள் அவதானக்குறைவாக இருக்கின்றமை அல்லது அளவுக்கு மீறிய இயங்குதன்மையை வெளிக்காட்டல் அவதானக் குறை மிகையியக்க கோளாறாக இனங்காணப்பட்டு, மருத்துவச் சிகிச்சைகள் பரிந்துரைக்கப் படுவது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளில் குழந்தைகள் கற்றல் செயல்பாடுகளில் மந்த தன்மையை வெளிக்காட்டும் போது அல்லது அளவுக்கு அதிகமாகச் சேட்டைகளில் ஈடுபடுபவர்களாக இருக்கும் போது, பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துதல், வாழ்வியல் முறை மாற்றம் போன்ற வழிமுறைகளைக் கையாள்வதற்குப் பதிலாக மருத்துவச் சிகிச்சை பெற அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

மருத்துவ மயமாக்கலுக்கான காரணங்கள்
மருத்துவ அதிகாரத்தின் விரிவாக்கம்:
ஒரு நபர் இயல்பான நிலையில் இருக்கின்றாரா, அல்லது நோய் நிலைக்கு ஆளாகியுள்ளாரா என்பதைத் தீர்மானிப்பதில் மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும் வகிக்கும் பங்கும், செலுத்து வரும் அதிகாரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவர்கள் கொண்டிருக்கும் இத்தகைய அதிகாரம் காரணமாக சாமான்ய வாழ்வியல் அனுபவங்களைக் கூட மருத்துவ பிரச்சினையாக அடையாளப்படுத்தும் வாய்ப்பை அதிக அதிகமாகப் பெற்று மருத்துவ மயமாக்கலுக்கு வழிகோலுகின்றார்கள்.

மருந்து உற்பத்தி நிறுவனங்களின் செல்வாக்கு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிக இலாபமீட்டும் நோக்கில், சகலவற்றுக்கும் மருந்துகளைக் கண்டுபிடித்து சந்தைப்படுத்த முயல்கின்றார்கள். இதன்பொருட்டு சாதாரணமாக மனிதர்களில் ஏற்படக் கூடிய மாறுதல்களைக் கூட நோய்களாக அடையாளப்படுத்தி தாம் உற்பத்தி செய்யும் மருந்துகளை நுகர வேண்டிய நிர்ப்பந்தங்களை வலிந்து உருவாக்கின்றார்கள். இதன் காரணமாக மருந்து பாவனை அதிகரிக்கின்றது.

விஞ்ஞானம் மற்றும் மருந்துகளில் கொண்டுள்ள நம்பிக்கை
தற்கால மக்கள் பாரம்பரிய ரீதியான அல்லது சமூக ரீதியான புரிதல்களை விட, மருத்துவ விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் மிது அதிக நம்பிக்கை கொள்கின்றனர். எனவே, மருத்துவம் சாராத பிரச்சினைகளுக்குக் கூட மருத்துவர்கள் மற்றும்; மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை நாடுவது அதிகரித்து வருகின்றது. உதாரணமாகத் தமிழ்ச் சமூகத்தில் பாரம்பரிய சடங்காக இடம்பெற்று வந்த குழந்தைகளுக்குக் காதணி அணிவிக்கும் நிகழ்வு, இன்று வைத்தியர்களின் ஆலோசனையுடன் மருத்துவ மனைகளில் நிகழ்த்தப்படும் விடயமாகி உள்ளமையைக் குறிப்பிடலாம்.

ஊடக மற்றும் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
பொதுச் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள் விழிப்புணர்வையும், சுகாதார நிலைமைகளையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டாலும், சில சமயங்களில் சாதாரண அனுபவங்களையும் மருத்துவ பிரச்சினைகளாகப் பார்க்க வைத்து விடுகின்றது. உதாரணமாக, மனநலன் மேம்பாடு சார்ந்த பிரச்சாரங்கள் அவசியமானது எனினும், அதிகப்படியாக கவனமெடுத்தல் காரணமாக அனைத்து விதமான சோக உணர்வுகளும், பதற்றங்களும் மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டியவையாகக் கருதப்படுவது நடக்கின்றமையை குறிப்பிடலாம். மேலும், ஊடக பிரச்சாரங்களும் அனைத்துக்கும் மருத்துவச் சிகிச்சை பெறுவதே தீர்வு என்பதை ஊக்குவித்து வருகின்றது.

சுகாதார காப்புறுதி கொள்கைகளும் திட்டங்களும்
அநேகமான காப்புறுதி திட்டங்கள் மருத்துவச் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயங்களுக்கே வழங்கப்படுகின்றன. எனவே, மிகச் சிறியதான பிரச்சினைகளுக்குக் கூட முறைப்படியான மருத்துவச் சிகிச்சைகளை நாடி செல்ல மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இவ்வகையான காப்புறுதி கொள்கைகள் காப்புறுதி நலன்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தனிப்பட்ட அல்லது சமூக ரீதியான பிரச்சினைகளைக் கூட மருத்துவ பிரச்சினையாகச் சித்தரித்துக் காட்டும் போக்கைத் தூண்டி வருகின்றது.

மருத்துவ மயமாக்கல் மீதான விமர்சனங்கள்
சமூகவியலாளர்கள் மருத்துவ மயமாக்கல் மீது தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளார்கள். அவற்றில் இவான் இலீச் எனும் சமூகவியலாளர் முன்வைத்த விமர்சனங்கள் பிரதானமானதாகும். அவர் அதிகப்படியான மருத்துவ தலையீடு ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எனக் குறிப்பிட்டார். அவரின் விமர்சனங்களை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.

சிக்கலான மனித அனுபவங்களை எளிமைப்படுத்துகின்றமை
மருத்துவ மயமாக்கலானது மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சமூக, உளவியல் மற்றும் மனவுணர்வு பிரச்சினைகளை வெறும் மருத்துவ ரீதியான பெயரிடலுக்குச் சுருக்கி விடுவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, சோக உணர்வு, பதற்ற உணர்வு போன்றவற்றை மனவழுத்தம் எனப் பெயரிடப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது. ஆனால், அவற்றின் பின்புல காரணமாக இருக்கக் கூடிய நனவிலி, ஆழ்மன காரணிகள், தனிநபர் அனுபவங்கள், வாழ்க்கைச் சூழல் போன்ற விடயங்கள் புறக்கணிக்கப்பட்டு, வெறும் அறிகுறிகள் மட்டுமே கருத்திலெடுக்கப்டுகின்றது. இவ்வாறாகச் சிக்கலான பிரச்சினைகளை எளிமைப்படுத்தி மேலோட்டமாக அணுகுவது தொடர்பில் மருத்துவ மயமாக்கல் மீது சமூகவியலாளர்களால் விமர்சனம் முன்வைக்கப் படுகின்றது.

அதிகப்படியான சிகிச்சைகளும் மருந்துகளில் தங்கியிருத்தலும்
மருத்துவ மயமாக்கல் அன்றாட வாழ்க்கையில் அதிகப்படியான மருந்து பயன்பாட்டுக்கும், மருத்துவச் சிகிச்சைகளுக்கும் வழிவகுக்கின்றது. வாழ்க்கை முறையை மாற்றுதல், பழக்க வழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளல் மூலம் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளுக்குக் கூட மருந்து உட்கொள்ளல் அல்லது அறுவை சிகிச்சைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதன் காரணமாகச் சுகாதார விடயங்களுக்கான செலவு அதிகரித்தல், பக்கவிளைவுகள் ஏற்படல், நீண்ட கால அடிப்படையில் மருந்துகளில் தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படுதல் போன்ற பாதகமான விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது.

மனிதர்கள் ஆளுமையையும் சுயாதீன தன்மையையும் இழத்தல்
மருத்துவ மயமாக்கல் காரணமாக ஒருவர் தன்னை தானே நோயாளியாகப் பார்க்க ஆரம்பிக்கும் நிலை ஏற்படுகின்றது. மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல், ஆலோசனைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதன் காரணமாக ஒருவரி தன்னம்பிக்கை சிதைந்து, சவால்களைச் சந்திக்கும் ஆற்றல் குறைந்து போகலாம். காலப்போக்கில் தமது ஆரோக்கியம் , நல்வாழ்வு தொடர்பாகச் சுயாதீனமாக முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடலாம்.

சமூக காரணிகளையும் , நிர்ணயிப்பான்களையும் புறக்கணிக்கின்றமை
வறுமை, மனஅதிர்ச்சி(வுயசரஅய), பாலின அடையாள சிக்கல் போன்றவற்றை மருத்துவ பிரச்சினைகளா அணுகுவதால், அவற்றிற்கு மூலக் காரணமாக அமையுமட சமூக, பொருளாதார பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது, அல்லது புறக்கணிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஓரங்;கட்டப்பட்ட விளிம்பு நிலை சமூகங்களில் மனிதர்கள் அனுபவிக்கும் மனவழுத்த பிரச்சினையை மருத்துவ பிரச்சினையாக அணுகும் போது, மூலக்காரணமான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலிருந்து விலகிச் செல்லும் நிலையைக் குறிப்பிடலாம்.

முடிவுரை
மருத்துவ மயமாக்கல் காரணமாக ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை குறித்தும், நாளாந்த வாழ்க்கை குறித்தும் மக்கள் கொண்டுள்ள புரிதலையும், பார்வையையும் மாற்றமடைந்து வருகின்றது. மருத்தவமயமாக்கலானது மனிதர்கள் நோய்களால் அவதிப்படும் அவற்றைச் சரிவர இனங்கண்டு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதாக இருந்த போதிலும், மறுபுறம் சாமான்யமான வாழ்வியல் அனுபவங்களும் பிரச்சினைகளையும் கூட நோயாகக் கட்டமைத்து, அதற்கான சமூக காரணிகளை விடுத்து மருத்துவ ரீதியான சிகிச்சைகளில் தங்கியிருக்கும் ஆபத்துகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. எனவே, இலங்கை போன்ற பன்மைத்துவ கலாச்சாரம் காணப்படும் தெற்காசிய நாடுகளில், மருத்தவமயமாக்கலை விமர்சன ரீதியான கண்ணோட்டத்துடன் அணுகுதல் அவசியமாகின்றது. அதாவது, நாளாந்த வாழ்வின் மனித அனுபவங்களையும் பிரச்சினைகள் உண்மையில் மருத்துவ பிரச்சினையாக அல்லது பிற வகையான அல்லது சமூக ரீதியான பிரச்சினையா என்பதினை உயிர் மருத்துவ அறிவியலுடன், சமூக, கலாச்சார மற்றும் , மனவுணர்வு ரீதியான காரணிகளுடன் இணைந்த வகையில் ஆராய்ந்து இனங்காணல் வேண்டும்.






2:56 PM

மருத்துவ ஆதிக்கம்

by , in
கேள்வி 10: மருத்துவ ஆதிக்கத்தை வரையறுத்து, மருத்துவர்-நோயாளர் உறவுகளையும், சுகாதார அமைப்புகளையும் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை ஆராய்க.



அறிமுகம்
மருத்துவ ஆதிக்கம் எனப்படுவது சுகாதார பராமரிப்பு சேவையின் அமைப்பு வியூகம், வழங்கல் முறை, அதன் உள்ளடக்கம் என்பவற்றில் மருத்துவ தொழில் கொண்டிருக்கும் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் விபரிக்கும் சமூகவியல் கோட்பாடாகும். எலியட் ஃப்ரீட்சன என்ற சமூகவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கோட்பாடு நோய் நிலைகளைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் மருத்துவர்கள் கொண்டுள்ள கட்டுப்பாட்டுடன், ஏனைய சுகாதார தொழில்முறையாளர்கள் மற்றும் சுகாதார தெற்காசியா உட்படப் பல நாடுகளில் மருத்துவர்கள் உயர்ந்த சமூக கௌரவம், தமது சுகாதார நிறுவன கட்டமைப்பினுள் அதிகாரம், மருத்துவ அறிவு தொடர்பில் ஏகபோக உரிமை என்பவற்றை அனுபவிக்கின்றனர். இவ் ஏகபோக உரிமைகள் தொழில்முறையின் உயர் தரத்தையும், அறிவியல் உறுதிப்பாட்டையும் உறுதிப்படுத்த துணைப்புரியும் அதேவேளை அதிகார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தல், நோயாளர்களின் சுயாதீன தன்மையை மட்டுப்படுத்தல், மருத்துவர் - நோயாளர் கூட்டு ஒத்துழைப்பில் தடைகள் என்பவற்றுக்கும் காரணமாகின்றது. இப்பத்தியானது மருத்துவ ஆதிக்கத்தின் இயல்பையும், மருத்துவர் - நோயாளர் உறவு மற்றும் சுகாதார பராமரிப்பு சேவையில் அதன் தாக்கத்தையும் எடுத்துக்காட்டுகளுடன் ஆராய்கிறது.

மருத்துவ ஆதிக்கத்தின் வரையறையும் சிறப்பம்சங்களும்
மருத்துவ ஆதிக்கம் என்பது சமூகத்தில் மருத்துவத் தொழிலில் கட்டமைப்பு மற்றும் கலாச்சார ஆதிக்கத்தைக் குறிக்கிறது. எலியட் ஃப்ரீட்சனின் கூற்றுப்படி, மருத்துவ ஆதிக்கமானது மருத்துவர்கள் அவர்களும், சுகாதாரத்துறை சார்ந்த ஏனைய ஏனைய தொழில்முறையாளர்களதும் வேலைகள் மீதும், சுகாதார முறைமையின் விதிகள் மற்றும் கட்டமைப்பின் மீதும் கட்டுப்பாடுகளை நிலைநாட்டுவதின் வாயிலாகப் பிறக்கின்றது.

மருத்துவ ஆதிக்கத்தின் முக்கிய அம்சங்கள்
• மருத்துவ அறிவு மற்றும் முடிவெடுப்பதில் ஏகபோக உரிமை
• மருத்துவத் தொழிலுக்கான சட்டப் பாதுகாப்பும் அரசு ஆதரவும்
•பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருத்தலும் தொழில்முறை தன்னாட்சியும்
•சுகாதாரக் கொள்கைகள், கல்வி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மீதான செல்வாக்கு

சாராம்சத்தில், மருத்துவர்கள் நோய்க்கு சிகிச்சையளிப்பதில் நிபுணர்கள் மட்டுமல்ல - அவர்கள் நோய் என்று கருதப்படுவது, அது எவ்வாறு நடத்தப்பட வேண்டும், அந்த பராமரிப்பை வழங்க யார் தகுதியானவர்கள் என்பதற்கான வாயில் காவலர்கள்.

மருத்துவர் - நோயாளர் உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கம்
மருத்துவர்களும் நோயாளர்களும் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மருத்துவ ஆதிக்கம் மிகவும் வலுவான வகையில் வடிவமைக்கிறது. அவற்றினை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
• உறவு முறை படிநிலை கொண்டதாக அமைதல்.
மருத்துவ ஆதிக்கம் காரணமாக மருத்துவர் - நோயாளர் உறவு முறையில் வைத்தியர்கள் சர்வ அதிகாரம் கொண்டவர்களாகப் பார்க்கப்படுகின்றார்கள். நோயாளர்கள் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை எவ்வித கேள்வியுமின்றி பின்பற்ற வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றார்கள். இப்போக்கானது மருத்துவர்களும் - நோயாளர்களும் சுகாதார விடயங்களில் நோயாளர்களை வலுவூட்டி கூட்டாக முடிவெடுப்பதை மட்டுப்படுத்துகின்றது.

• நோயாளரின் கருத்துக்கான இடம் மட்டுப்படுத்தப்படுதல்
மருத்துவ ஆதிக்கம் காரணமாக நோயாளர்கள் தமது மனவுணர்வுகளையும் கலாச்சார மற்றும் சமூக ரீதியான விடயங்களையும் வெளிப்படுத்துவதற்கு உகந்த சூழல் இல்லாது காணப்படலாம். மேலும், வாழ்வியல் சூழல் அனுபவங்களை விட, மருத்துவ ரீதியான அறிகுறிகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படுகின்றது. இதன் காரணமாக மருத்துவர் - நோயாளர் உறவில் நோயாளரின் கருத்துகளும், நிலைகளும் வெளிப்படுத்தப்படுவது மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும்.

• கலாச்சார உணர்வுகள் புறக்கணிக்கப்படுகின்றமை
இலங்கை போன்ற பல் கலாச்சார சமூகங்களில் நோயாளர்களால் ஆழமாக மதிக்கப்படும் பாரம்பரியமான நோய் சிகிச்சை முறைகளும், ஆன்மீக நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. மருத்துவ ஆதிக்கமானது இவற்றினை புறக்கணிப்பதற்கு வழிகோலுகின்றது.

• நோயாளர்கள் மருத்துவரைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படல்
மருத்துவ ஆதிக்கம் காரணமாக, நோயாளர்கள் பெரும்பாலும் சுகாதார ரீதியான விடயங்களில் முடிவெடுக்கும் போது மருத்துவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதன் காரணமாக தமது சுய பராமரிப்பு தொடர்பிலும், சமூக மைய பராமரிப்பு தகவல்கள் தொடர்பாகவும் நம்பிக்கையின்மை ஏற்படலாம். 

உதாரணமாக, இலங்கையில், பெரும்பாலும் நோயாளர்கள் நோயறிதல் செயன்முறையை புரிந்து கொள்ளாமலோ அல்லது சிகிச்சை முறைகள் தொடர்பில் கேள்வி கேட்காமலோ மருத்துவர் கொடுக்கும் மருந்துச் சீட்டுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். சில நேரங்களில் நோயாளர்கள் அவசரகதியில் நடத்தப்பட்டாலோh, அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்ந்தாலோ தமக்கிருக்கும் முழு அறிகுறிகளையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

சுகாதார முறைமைகளில் ஏற்படுத்தும் தாக்கம்
மருத்துவ ஆதிக்கம் மருத்துவர் - நோயாளர் இடைத்தொடர்புகனை மாத்திரமல்லாது, சுகாதார சேவை கட்டமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு ஏற்படுத்தும் தாக்கத்தினை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
• சுகாதாரத் துறையின் பிற தொழில்முறையாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துதல்
தாதியர்கள், மருத்துவச்சிகள், சுகாதாரத்துறை துணை பணியாளர்கள் போன்ற சக சுகாதாரத்துறை தொழில்முறையாளர்களின் பங்களிப்பு சுகாதார சேவைகளை நடாத்திச் செல்வதில் அத்தியாவசியமானதாக இருந்த போதிலும், அவர்கள் துறை சார்ந்து முடிவெடுக்கும் அதிகாரம் மருத்துவர்களின் ஆதிக்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகின்றது. அவர்களின் நிலை மருத்துவர்களுக்குக் கீழ்நிலையில் உள்ளதாகவே இருந்து வருகின்றது.

• ஏனைய தொழில்முறையாளர்களின் பணி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல்
மருத்துவ ஆதிக்கத்தைத் தக்க வைப்பதற்காக மருத்துவ உதவியாளர்கள், தாதியர் பயிற்சியாளர்கள், சமூக சுகாதார ஊழியர்களுள் போன்றோர்களுக்கான பயிற்சியின் பரப்பெல்லையை விரிவுபடுத்தும் கொள்கைகளை மருத்துவர்களின் சங்கங்கள் எதிர்க்கின்றன.

• கொள்கை வகுப்பாக்கங்களில் செல்வாக்கு செலுத்துதல்
மருத்துவ வல்லுநர்கள் பெரும்பாலும் சுகாதாரக் கொள்கை வகுப்பாக்கக் குழுக்களில் பதவிகளை வகிக்கிறார்கள். இதன் காரணமாகச் சுகாதார கொள்கைகளில் மருத்துவமனை சார்ந்த நோய் குணப்படுத்தல் விடயங்களுக்கு அதிக முன்னுரிமையும், வளங்களும் ஓதுக்கப்படுவதுடன், சமுதாயத்தை மையப்படுத்திய நோய்த்தடுப்பு முன்னெடுப்புகளுக்கு அதிக கவனமும், முக்கியத்துவமும் கொடுப்பது தவிர்க்கப்படுகின்றது,

• பாரம்பரியமான மருத்துவ முறைகள் ஓரங்கட்டப்படல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் கூட, அவை பிரதான அரங்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டு நவீன அலோபதி மருத்துவ முறையே அதிக முக்கியத்துவம் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. மருத்துவ ஆதிக்கத்தின் இதில் முக்கியமான பங்கு வகிக்கின்றது.

எடுத்துக்காட்டு:
இந்தியாவில், இந்திய மருத்துவ சங்கமானது ஆயுஸ் மருத்துவர்கள் எனப்படும் ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவமுறை மருத்துவர்கள் தற்கால மருந்துகளை தமது நோயாளர்களுக்கு வழங்குவதை எதிர்கின்றார்கள். இது மருத்துவத்தின் தரத்தைக் குறைத்து விடுவதாக வாதிடும் அவர்கள், சுகாதார வசதிகள் குறைந்த அளவில் காணப்படும் பின்தங்கிய பிரதேசங்களில் கூட இந்நடைமுறையை அனுமதிக்க மறுக்கின்றார்கள்.

மருத்துவ ஆதிக்கத்தின் மீதான விமர்சனங்கள்
சமூகவியல் கண்ணோட்டத்தில், மருத்துவ ஆதிக்கம் மீது நேர்மறையான விமர்சனங்களும், எதிர் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அவற்றினை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

நேர்மறை விமர்சனங்கள்
தரநிர்யனம், பொறுப்புக்கூறல், விஞ்ஞான ரீதியான தகவல்களின் அடிப்படையிலான சிகிச்சைகள் என்பவற்றை உறுதிப்படுத்துகின்றது.

நோயாளர்களைப் போலிகள் மற்றும் தவறான மருத்துவ தகவல்களிலிருந்து பாதுகாக்கின்றது

தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கிறது

எதிர்மறை விமர்சனங்கள்
சுகாதாரப் பராமரிப்பு சேவையில் அதிகாரப் படிநிலைகளை ஏற்படுத்துகிறது
சுகாதார சேவையின் வெவ்வேறு துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மட்டுப்படுத்துகின்றது

சாதாரண வாழ்க்கை நிகழ்வுகளையும் அனுபவங்களையும் (எ.கா., பிரசவம், மாதவிடாய் நிறுத்தம்) மருத்துவ மயமாக்குவதை ஊக்குவிக்கிறது

நோய்களின் போது நோயாளர் எதிர்கொள்ளும் அனுபவங்கள், பாரம்பரிய ரீதியான அறிவு , நோய்த் தடுப்பு என்பவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

சமகால போக்குகளும்; எதிர்கால செல்நெறியும்
சுகாதாரப் பராமரிப்பு சேவையில் ஏற்பட்டுவரும் நவீனக்கால மாற்றங்களால் மருத்துவ ஆதிக்கம் சவால் சவாலுக்குப்படுத்தப்பட்டு வருகின்றது.
• நோயாளர் நேய சுகாதார பாரமரிப்பு சேவை மற்றும் நோயாளர்க்குத் தகவல் வழங்கி சம்மதம் பெறல் போன்ற போக்குகளின் வளர்ச்சி
• தாதியர்கள்யர்கள், மருத்துவச்சிகள், சமூக சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிக அங்கீகாரம் கிடைத்து வருதல்
• சமூக காரணிகளையும் கருத்திலெடுக்கும்; ஒருங்கிணைந்த பொதுச் சுகாதார அணுகுமுறைகளின் முன்னெடுப்பு
• தேசிய சுகாதார கொள்கை திட்டங்களில் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஒன்றிணைத்தல்

முடிவுரை
நவீன சுகாதாரப் பராமரிப்பு சேவைகளில் அதிகாரத்தின் இயங்கியலைப் புரிந்துகொள்வதற்குத் துணைபுரியும் முக்கியமானதொரு கோட்பாட்டு விளக்கமாக மருத்துவ ஆதிக்கம் காணப்படுகின்றது. மருத்துவ ஆதிக்கமானது சுகாதார பராமரிப்பு சேவையில் தொழில்முறைமயாக்கம், அறிவியல் வளர்ச்சி என்பவற்றினூடாக பாதுகாப்பு தன்மையையும், தரத்தையும் மேம்படுத்தும் அதே வேளை கூட்டாண்மை செயற்பாடுகள், நோயாளர்களை வலுவூட்டி முடிவெடுப்பதில் பங்கெடுக்கச் செய்தல், சுகாதாரத் துறை தொழில்முறையாளர்களிடையான சமத்துவம் என்பவற்றில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது. சுகாதார பராமரிப்பு சேவைகளுக்கான கேள்வியும், அவசியமும் அதிகரித்துச் செல்லும் சமகாலத்தில், மக்கள் நேயமிக்கதும், சுகாதாரத் துறையின் பிரிவுகளுக்கிடையேயான கூட்டாண்மை உடையதும், எதனையும் ஓரங்கட்டாததும் புறக்கணிக்காததுமான நியாயமானதும், சமநிலைப் படுத்தப்பட்டதுமான மருத்துவ அதிகார கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமானதாகும். அவ்வகையில் மருத்துவ ஆதிக்கத்தைச் சரிசெய்வது, மருத்துவர்களை குறை மதிப்புக்கு உள்ளாக்குவதாக அன்றி, அனைத்து சுகாதார செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒவ்வொரு நோயாளர்களையும் மதிப்பு மிக்கவர்களாக்கும் செயன்முறையாக அமையும்.






2:41 PM

மருத்துவ தொழில்முறை மயமாக்கல்

by , in
கேள்வி 9: சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தொழில்முறை மயமாக்கல் என்பதை விளக்கி, அதன் பிரதான அம்சங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு சேவை வழங்கலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்க.



அறிமுகம்
தொழில்முறை மயமாக்கல் எனப்படுவது வேலையொன்று துறைசார் அறிவு விருத்தி, முறையான துறைசார் பயிற்சிகள், சட்டரீதியான அதிகார கட்டமைப்பு, தொழில் அறநெறி முறைகள், தரநிர்ணயங்கள், சமூக கௌரவம் என்பவற்றை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக வளர்ச்சியடையும் செயன்முறையை குறிக்கின்றது. சுகாதார பராமரிப்பு சார் வேலைகளில், மிகத் தெளிவானதொரு தொழில்முறை மயமாக்கலை மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ளதைக் காண முடியும். குறிப்பாக, உயிர் மருத்துவ அல்லது அலோபதி மருத்துவர்கள் இன்றைய நவீன சுகாதார முறைமையில் பிரதான பாத்திரம் வகிப்பவர்களாக ஆகியுள்ளமையில் இதனை அவதானிக்கலாம். இவ் தொழில்முறை மயமாக்கல் செயற்பாடு சுகாதார பராமரிப்பு சேவைகள் கட்டமைப்பு செய்யப்படும் மற்றும் வழங்கப்படும் விதத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. அவ்வகையில் தொழில்முறை மயமாக்கல் காரணமாகச் சுகாதாரத் துறையில் தரநிர்ணய ஏற்பாடுகள், அறிவியல் வளர்ச்சி, பொதுமக்களின் நம்பகத்தன்மை என்பன ஏற்பட்டுள்ள போதும், மறுபுறம் ஏற்றத்தாழ்வுகளையும், அதிகார படிநிலைகளையும் உருவாக்கி விட்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பில் தொழில்முறையின் அம்சங்கள்
எலியட் ஃப்ரீட்சன,; டால்காட் பார்சன்ஸ் போன்ற சமூகவியலாளர்கள் ஒரு தொழிலை வரையறுக்கும் முக்கிய அம்சங்கள் எவை எனக் கோடிட்டுக் காட்டியுள்ளார்கள். அதனடிப்படையில் தொழில் என்ற வகையில் சுகாதார பராமரிப்பு சேவை, குறிப்பாக மருத்துவப் தொழில் கொண்டுள்ள முக்கிய அம்சங்களாகப் பின்வருவன அமையும்.
சிறப்பு அறிவு விருத்தியும் நிபுணத்துவமும்
மருத்துவ வல்லுநர்கள் உடற்கூறியல், நோயியல், மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிக்கலான துறைகளில் பயிற்சி பெற்றவர்கள். இவ் பிரத்தியேக அறிவுத் தளம் அவர்களைச் சாதாரண மக்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

முறைசார்ந்த கல்வியும் உரிமம் வழங்குதலும்
மருத்துவர்களுக்கு மருத்துவப் கல்விநிறுவனங்கள் மூலமாக முறையான தரப்படுத்தப்பட்ட கல்வி வழங்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டே மருத்து தொழில் உரிமம் வழங்கப்படுகின்றது. இவ்வாறு தேர்ச்சி பெறுபவர்கள் மாத்திரமே சட்டப்பூர்வமாக மருத்துவ தொழில் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.

நெறிமுறை விதிகளும் பொறுப்புக்கூறலும்
தொழில்முறை நிறுவனங்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தி, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவர்கள் நெறிமுறைகளையும் சட்டத் தன்மையையும்; பின்பற்றுவதை உறுதி செய்கின்றன.

தொழில்முறையில் தன்னாட்சி
நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் மருத்துவர்கள் முழு சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களின் முடிவுகள் நோயாளர்கள் அல்லது பிற சுகாதார ஊழியர்களால் மிக அரிதாகவே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.

தொழில்முறை அமைப்புகளினால் ஒழுங்குபடுத்தப்படல்
மருத்துவ தொழில்முறையாளர்களின் அமைப்புகளினால் தொழில்முறை சார்ந்த விடயங்கள் ஆளப்படுகின்றன. மருத்துவ தொழிலில் தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமச் சான்றிதழ் வழங்குதல், ஒழுங்கு நடவடிக்கைகளை இவ் அமைப்புகளே மேற்கொள்கின்றன. இலங்கை மருத்துவ சபை, இந்திய மருத்துவ சங்கம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

சமூக அந்தஸ்தும் கௌரவமும்
மருத்துவர்கள் குறிப்பாக தெற்காசியச் சமூகங்களில் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் தொழில்முறையாளர்களில் முக்கிய தரப்பினராகும். இதன் காரணமாக அதிகாரம், செல்வாக்கு என்பவற்றுடன் பொருளாதார நன்மைகளையும் அனுபவிக்கின்றார்கள்.

சேவை வழங்கலில் ஏகபோகம்
உரிமம் பெற்ற மருத்துவர்களால் மாத்திரமே அறுவை சிகிச்சைகளைச் செய்ய முடியும், மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும் நோய்கள் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்திச் சான்றளிக்க முடியும். இவ் ஏகபோக உரிமையானது அவர்களிற்கான தொழில்முறை அடையாளத்தை வடிவமைத்து, வருமான மார்க்கங்களை வலுப்படுத்துகின்றது.

சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்கலில் தொழில்முறை மயமாக்கல் ஏற்படுத்தும் தாக்கம்

நேர்மறையான தாக்கங்கள்
மருத்துவ தொழிலின் தரமும், சேவை பாதுகாப்பு தன்மையும் உயர்வடைதல்
ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிகள், மருத்துவ தொழிலுக்கான உரிமம் வழங்கும் முறைமை காரணமாக மருத்துவர்கள் தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களாகவும், நோயாளர்களால் நம்பகத்தன்மையுடன் நோக்கப்படுபவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

அறிவியல் முன்னேற்றம் ஏற்படுகின்றமை
மருத்துவ தொழில்முறை மயமாக்கமானது புதிய சிகிச்சைகள், தடுப்பூசிகள், மருத்துவ தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. இதன் காரணமாக மக்களின் ஆரோக்கியம் மேம்பாடு அடைகின்றது.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளமை
மருத்துவர்களுக்குக் கிடைத்திருக்கும் சமூக அந்தஸ்தும், உயர்ந்த மதிப்பும் , பொதுமக்களுக்கும் சுகாதார சேவை வழங்குநர்களுக்கும் இடையிலான நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்ப முக்கிய காரணமாகின்றது. இதன் காரணமாக, அவசியப்படும் போதெல்லாம் தயக்கமின்றி மருத்துவ உதவிகளை நாடும் வகையிலான நம்பகத்தன்மை பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

எதிர்மறையான தாக்கங்கள்
சுகாதாரப் பராமரிப்பு சேவையில் அதிகார படிநிலைகளை ஏற்படுத்துகின்றமை
சுகாதார பராமரிப்பு தொடர்பிலான முடிவெடுத்தல்களில் மருத்துவர்களே அதிகாரமும் ஆதிக்கமும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இதன் காரணமாக தாதியர்கள், மருந்தாளர்கள், மருத்துவச்சிகள், பாரம்பரிய வைத்தியர்களுக்கு சிறிய மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே கிட்டுகின்றது. இது சுகாதார பராமரிப்பில் கூட்டுச் செயற்பாட்டைப் பாதிக்கின்றது.

மருத்துவ ஆதிக்கம் தோன்றக் காரணமாகின்றமை
மருத்துவ தொழில்முறைமயமாக்கம் காரணமாக மருத்துவர்கள் அடையும் சிறப்பிடம், நோயாளிகளின் விருப்பு வெறுப்புகளையும், பிற சுகாதார பணியாளர்களின் கருத்துகளையோ புறக்கணித்துச் செயற்படுவதற்கு வழிகோலுகின்றது. இதன் காரணமாகச் சுகாதார பராமரிப்பு சேவை வழங்கலில் அதிகார சமத்துவமின்மை மேலும் வலுவடைகின்றது.

பாரம்பரிய மருத்துவமுறைகள் ஓரங்கட்டப்படுகின்றமை
மருத்துவ தொழில்முறை மயமாக்கல் காரணமாக தெற்காசிய நாடுகளில் ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் போன்ற மருத்துவ முறைமைகள் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பொருத்த பாடுடையதாகக் காணப்பட்ட போதிலும் கூட குறைமதிப்புடையதாகவும், ஓரங்கட்டப்படுவதாகவும் காணப்படுகின்றது.

அன்றாட வாழ்வை அதிகப்படியாக மருத்துவமயமாக்கின்றமை
தொழில்முறை மயமாக்கல் காரணமாக மருத்துவர்களுக்குக் கிடைத்துள்ள அதிகாரமும் கட்டுப்பாடும் பிரசவம், முதுமையடைதல், மனவுணர்வு மாறுதல்கள் போன்ற சாமான்ய வாழ்க்கை நிகழ்வுகள் கூட மருத்துவப் பிரச்சினைகளாகக் கருதப்பட வழிவகுக்கின்றது. இதன் காரணமாக அன்றாட வாழ்வில் தேவையற்ற மிதமிஞ்சிய மருத்துவ ரீதியான தலையீடுகள் ஏற்படுகின்றது.

எடுத்துக்காட்டுகள்
இலங்கை சூழலில் மருத்துவர்கள் சமூகத்தில் அதிகாரமிக்க நபர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்களின் பரிந்துரைகள் மிக அரிதாகவே கேள்விகளுக்கும், சவால்களுக்கும் உட்படுத்தப்படுகின்றன. மேலும், சுகாதாரத் துறை தொடர்புடைய கொள்கை வகுப்பாக்கங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால், நோயாளர் பராமரிப்பில் முக்கிய பங்காற்றும் தாதிமார்கள் சுகாதார துறை தொடர்பான முடிவெடுத்தல்களில் ஒரம்கட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

இந்தியாவில், இந்திய மருத்துவ சங்கம் போன்ற மருத்துவ தொழில்முறை அமைப்புகள் சுகாதாரக் கொள்கை வகுப்பாக்கத்தில் குறிப்பிடத்தக்கதான செல்வாக்கைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக ஆயுஸ் மருத்துவர்கள் என்றழைக்கப்படும் ஆயுர்வேத, சித்த, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களும், இதர சமுதாய சுகாதார பணியாளர்களும் தேவை அதிகமாக உள்ள பின்தங்கிய பிரதேசங்களில் கூட அதிகபடியான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதை எதிர்த்தும், மட்டுப்படுத்தியும் வருகின்றார்கள்.

நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் , தொலைதூரப் பின்தங்கிய பிரதேசங்களில் கடுமையான மருத்துவர்; பற்றாக்குறை காணபடுகின்ற நிலையில் கூட, சட்டங்கள் வாயிலாக மருந்தாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற சுகாதார தன்னார்வலர்கள் மருத்துவர்களின் மேற்பார்வை இன்றி அத்தியாவசிய ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குவதிலிருந்து தடுக்கப்படுகின்றார்கள்.

விமர்சன ரீதியான கண்ணோட்டம்
மருத்துவ தொழில்முறை மயமாக்கலான சமூக முன்னேற்றமாகவும், அதிகார பொறிமுறையாகவும் காணப்படுகின்றது. இதன் காரணமாக நிபுணத்துவ வளர்ச்சியும், நம்பகத்தன்மையையும் ஏற்படுகின்றது. அதேவேளை, இதன் காரணமாக அதிகார மையப் போக்கும் ஏற்படுகின்றது. மாற்றுக் கருத்துகளும், சமூக பங்களிப்பும் புறக்கணிக்கப்படுகின்றது.

முரண்பாட்டுவாத கோட்பாட்டுப் பார்வையில் நோக்கும் போது, மருத்துவ தொழில்முறை மயமாக்கல் காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ ஆதிக்கம் சுகாதார முறைமைக்குள் சமத்துவமின்மைக்கு வழிவகுத்துள்ளது. அதாவது சுகாதார பராமரிப்பு சேவை முறைமைக்குள் மருத்துவரின்; அறிவும், வகிப்பாகமும் மாத்திரமே மதிப்புடையதாக அல்லது உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

பெண்நிலைவாத நோக்கில், தொழில்முறைமயமாக்கமானது வரலாற்று ரீதியாக ஆண்மையவாத மருத்துவ நிறுவன கட்டமைப்பிலிருந்து, மருத்துவச்சி போன்ற பெண்களின் வகிபாகத்தை நீக்கம் செய்துள்ளமையை விமர்சனத்திற்கு உள்ளாக்கப் படுகின்றது.

தொழில்முறை மயமாக்கல் வரலாற்று ரீதியாகப் பெண்களை, குறிப்பாக மருத்துவச்சி போன்ற பாத்திரங்களில், ஆண் ஆதிக்கம் செலுத்தும் மருத்துவ நிறுவனங்களுக்கு ஆதரவாக எவ்வாறு விலக்கியுள்ளது என்பதையும் பெண்ணிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முடிவுரை
சுகாதாரப் பராமரிப்பு சேவையில் தொழில்முறை மயமாக்கலானது, சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கும், சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது. அதேவேளை சுகாதாரத்துறையில் அதிகார அசமத்துவம் ஏற்படுவதற்கும், தொழில்ரீதியான படிநிலைகளை உருவாக்குவதற்கும், மருத்துவம் சாராத சுகாதார பணியாளர்களை ஓரங்கட்டப்படுவதற்கும் காரணமாகவும் அமைந்து விடுகின்றது. எனவே, பாரம்பரியமாகவே பல நோய் சிகிச்சை முறைமைகளைக் கொண்ட சமூக கட்டமைப்பில், குறிப்பாகத் தெற்காசியா போன்ற சமூகங்களில், தொழில்முறை வரம்புகளையும், எல்லைகளையும் கடந்து பல்வேறு நோய் சிகிச்சை முறைமைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சுகாதார பராமரிப்பு சேவைகளை வளர்த்தெடுப்பது முன்னேற்றமான சுகாதார பாரமரிப்பு சேவையை வளர்த்தெடுக்கத் துணை செய்யும். அவ்வகையில் சுகாதார பராமரிப்பு சேவை கட்டமைப்பினுள் உண்மையான சமத்துவம் ஒட்டுமொத்த பணியாளர்களையும் அங்கீகரித்து, கூட்டுப்பொறுப்பை நிலைநாட்டுவதினூடாக ஏற்படுத்த இயலும்.




5:22 PM

மருத்துவர் - நோயாளர் உறவின் சமூகவியல் முக்கியத்துவம்

by , in
கேள்வி 8: மருத்துவர் - நோயாளர் உறவின் சமூகவியல் முக்கியத்துவத்தை ஆராய்க.


அறிமுகம்
மருத்துவர்-நோயாளி உறவானது சுகாதாரத் துறையில் காணப்படுகின்ற மிக மையமான இடைத் தொடர்புகளில் ஒன்றாகும். இது பொதுவான முறையில் அறிவார்ந்த மருத்துவருக்கும் நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளருக்கும் இடையிலான மருத்துவ ரீதியிலான பரிமாற்றமாக நோக்கப்படுகின்றது. எனினும், சமூகவியலில் இவ் உறவானது அதிகாரம், தொடர்பாடல், நம்பகத்தன்மை, கலாச்சார நெறிமுறைகள் என்பவற்றால்; ஆளப்படும், சமூக இடைத்தொடர்பாக நோக்கப்படுகின்றது. மருத்துவர்களும் நோயாளர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதமானது நோயைக் கண்டறிதல், சிகிச்சை தொடர்பில்hன தீர்மானமெடுத்தல், நோயாளரின் சேவை திருப்தி,; சுகாதார பிரதி பலன்கள் என்பவற்றில் தாக்கம் செலுத்துகிறது. எனவே, இவ் உறவினை சமூகவியல் நோக்கில் விளங்கிக்கொள்வதானது, சுகாதார பராமரிப்பு சேவையில் நிலவும் பரந்துபட்ட அதிகாரத்தின் இயங்கியலையும், அதனால் வெவ்வேறு சமூகக் குழுக்கள் பாதிக்கப்படும் விதத்தினையும் புரிந்துக் கொள்வதற்கு வழிவகுப்பதாக அமையும்.

மருத்துவர்-நோயாளர் உறவின் தன்மை
மருத்துவருக்கும் நோயாளருக்கும் இடையிலான உறவானது பாரம்பரிய ரீதியாகவே சமனிலை தன்மையற்ற, ஒருபக்க சார்பு கொண்டதாகவே காணப்படுகின்றது. அதாவது, மருத்துவரானவர் சிறப்பான அறிவையும், அதிகாரத்தையும் கொண்டிருப்பவராகவும், நோயாளர் வெறுமனே எதிர்வினையற்ற, சுகாதார பாரமரிப்பை பெற்றுக் கொள்ளும் சார்புத்தன்மை கொண்டவராகவும் இருக்கின்றார்கள். இங்கு மருத்துவர் அறிவுறுத்தல்களை வழங்குபவராகவும், நோயாளர் கேள்விகள் இன்றி அவற்றைப் பின்பற்றுபவராகவும் இருப்பர்.

எனினும், அண்மைய காலங்களில், இந்நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது. நோயாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நோக்கி மருத்துவர் - நோயாளர் உறவுமுறை நகர்ந்து வருகின்றது. இதன் காரணமாக நோயாளர்கள் சிகிச்சை தொடர்பான முடிவெடுத்தல்களில் பங்கெடுக்கவும், அது தொடர்பான கேள்விகளை கேட்கவும், தமது கரிசனைகளை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இவ்வாறானதொரு சாதகமான மாற்றம் நிகழ்ந்து வருகின்ற போதிலும், சமூக ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார நெறிமுறைகள், நிறுவன கட்டமைப்புகளின் தாக்கம் என்பன காரணமாக போதுமான முன்னேற்றத்தை அடையவில்லை.

மருத்துவர் - நோயாளர் உறவு தொடர்பான சமூகவியல் கண்ணோட்டங்கள்
1. குறியீட்டு இடைத்தொடர்புவாதம்

இந்தக் கண்ணோட்டம் மருத்துவருக்கும் நோயாளருக்கும் இடையிலான இடைத்தொடர்பை மிக நுணுக்கமாகக் கவனம் செலுத்தி வடிவமைக்கின்றது. நோயாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் நிலையை சரிவர புரிந்துக்கொள்வதானது, அவர்களுடனான தொடர்பாடலின் போது மருத்துவர்களள் பயன்படுத்தும் வார்த்தைகள், கைக்கொள்ளும் தொனி, வெளிப்படுத்தும் சைகைகள், முகபாவனைகள்; என்பவற்றினால் தாக்கத்திற்கு உள்ளாகின்றது.

மரியாதையாக உரையாடுதல், கவனத்தை வெளிப்படுத்திச் செவிமடுத்தல் என்பவற்றின் மூலமாக மருத்துவரால், நோயாளரை தன்மதிப்பும், சுயகௌரவமும் கொண்டவராக உணரச் செய்ய இயலும். அவ்வாறில்லாத, அவசரகதியிலான, சிரத்தையற்ற தொடர்பாடல் முறையினால் தவறான புரிதல்கள் ஏற்படலும், நோயாளர் உணர்வு ரீதியாகப் பாதிக்கப்படுதலும் நிகழும்.

2. (மிக்கேல் ஃபூக்கோவின்) பின்நவீனத்துவ கோட்பாடு
பின்நவீனத்துவ கோட்பாடானது மருத்துவர்களை வெறுமனே நோய்நிலையை குணப்படுத்துபவர்களாக மாத்திரம் கருதாது, மனித வாழ்க்கை மீதும், மனிதர்களின் உடல்கள் மீதும் அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பவர்களாகவும் பார்க்கின்றது.; ஒருவர் சுகாதார ரீதியாகச் சாதாரணமான நிலையில் இருக்கின்றாரா அல்லது அசாதாரணமான நிலையில் இருக்கின்றாரா என்பதை வரையறுப்பது மூலம் மனித உடல்கள் மீது தமது அதிகாரத்தை நடைமுறைப்படுத்துகின்றார்கள். மேலும், பரிசோதித்தல், தொடர்ச்சியான கண்காணித்தல், மருத்துவ அறிக்கைகளை ஆராய்தல் மூலமாக நோயாளர்களைக் கவனித்து ஒழுங்குபடுத்துவது காரணமாக, மருத்துவர் – நோயாளர் உறவானது விஞ்ஞான ரீதியானதாகவும், குறியீட்டு ரீதியானதாகவும் அமைகின்றது.

3. பெண்ணிய மற்றும் முரண்பாட்டுவாத கோட்பாடுகள்
இக் கண்ணோட்டங்கள் பாலினம், வர்க்கம், சாதி,; இனம் ஆகியவை மருத்துவர் - நோயாளர் இடைத்தொடர்புகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக, பெண்கள் ஆண் மருத்துவர்களுடன் இனப்பெருக்கம் தொடர்புபட்ட சுகாதார விடயங்களை உரையாடுவதற்குச் சங்கடமாக உணரலாம். அதேபோல் பொதுத்துறை சுகாதார சேவைகளில் ஒடுக்கப்பட்ட சாதிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நோயாளிகள் குறைவான கவனிப்பைப் பெறலாம்;.

மருத்துவர் - நோயாளர் உறவில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
1. தொடர்பாடல்
நம்பகத் தன்மையையும், புரிந்துணர்வையும் வளர்ப்பதற்கு வினைத்திறனான தொடர்பாடலில் ஈடுபடுவது முக்கியமானதாகும். நிலைமைகளைத் தெளிவாக விளக்குதல்;, மிக எளிமையான மொழிநடையைப் பயன்படுத்தல், தீர்மானம் எடுப்பதில் நோயாளர்களையும் பங்கெடுக்கச் செய்தல் மூலமாகச் சிகிச்சை நோக்கில் வலுவான மருத்துவர் – நோயாளர் உறவினை ஏற்படுத்த இயலும்.

2. கலாச்சார உணர்திறன்
சிறந்த மருத்துவர் - நோயாளர் உறவினை ஏற்படுத்த நோயாளரின் மதம், நம்பிக்கைகள், மொழி, பாலினம் சார்ந்த நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு அவசியமானதாகும். உதாரணமாக, தெற்காசியக் கலாச்சாரங்களை சேர்ந்த பெண் நோயாளர்கள் கலாச்சார அல்லது மத காரணங்களுக்காகப் பெண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதை விரும்பலாம்.

3. நம்பகத்தன்மையும் மரியாதையும்
அநேகமான நோயாளர்கள் தற்போதும் கூட மருத்துவர்களை அதிகாரம் படைத்த பிரமுகர்களாகவே பார்க்கிறார்கள், இதன் காரணமாக அவர்களிடம் கேள்விகளை எழுப்பத் தயக்கம் கொள்கின்றார்கள். இதனால் நோயாளரின் எண்ணங்கள் கேட்கப்படாது, அதிகார சமனிலையற்ற தன்மை உருவாக்கக்கூடும். அதேவேளை, பரஸ்பர மரியாதையும், சமத்துவமும் சிறந்த ஒத்துழைப்பிற்கு வழிவகுத்து சாதகமான நல்; விளைவுகளை ஏற்படுத்தும்.

4. நிறுவன கட்டமைப்புக்குள் உருவாகும் அழுத்தங்கள்
அதிக நோயாளர்கள், நிதி மற்றும் வளப் பற்றாக்குறையுடைய மருத்துவமனைகள், அதிக வேலைப்பளு போன்ற நிறுவன கட்டமைப்புக்குள் தோன்றும் அழுத்தங்கள் காரணமாக அர்த்தமுள்ள மருத்துவர் - நோயாளர் உறவை உருவாக்க மருத்துவர்களுக்கு நேரமோ வளமோ இல்லாமல் போகலாம். இது சுகாதார பராமரிப்பு சேவையின் தரத்தைக் குறைத்து, நோயாளர்களுக்குத் தாம புறக்கணிக்கப்பட்டதாக அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதான உணர்வை ஏற்படுத்திவிடலாம்.

இலங்கை சூழல் மருத்துவர் – நோயாளர் உறவு பாதிக்கப்படும் முறைகள்
இலங்கையில், மருத்துவர்-நோயாளர் உறவு பின்வருவனவற்றினால் பாதிக்கப்படுகிறது:

• மருத்துவமனைகளை அதிக நோயாளர்கள் அணுகுவதால், மருத்துவர்களுக்கு அதிகப்படியான நோயாளர்களைப் பார்வையிட நேர்கின்றது. இதன் காரணமாக அவசரமான சிகிச்சைகளும், வரையறுக்கப்பட்ட ரீதியான விளக்கங்களும் வழங்கப்படும் நிலைமை ஏற்படுகின்றது.

• மருத்துவர்கள் மருத்துவ கலைச்சொற்களைப் பயன்படுத்துவதனால் அல்லது கேள்விகளைத் தவிர்ப்பதால் நோயாளர்கள் தாம் அவமரியாதை செய்யப்பட்டதாக உணரும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

• பின்தங்கிய பிரதேசங்களில் மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகள் காரணமாகத் தொடர்பாடல் இடைவெளிகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

• தனியார் மருத்துவமனைகளில் தொடர்பாடல் முறைகளும், பராமரிப்பு சேவையின் தரமும் மேம்பாடுடையதாகக் காணப்பட்டாலும், அவை அதற்கான கொடுப்பனவுகளை செய்யக் கூடியவர்களுக்கே கிடைக்கக் கூடியதாகக் காணப்படுகின்றது.

மருத்துவர் - நோயாளர் உறவின் முக்கியத்துவம்

மருத்துவர் நோயாளர் உறவில் ஏற்படும் சிறு முன்னேற்றமும் மிகபரந்தளவிலான நன்மைகளை விளைவிக்கக் கூடியதாகும். ஏனெனில், இவ் உறவானது வினைத்திறனான சுகாதார பராமரிப்பு சேவைக்கான அடித்தளமாக அமைகின்றது. நோயாளர்கள் தமது பிரச்சினைகளைச் செவிமடுக்கப்படுவதையும், தாம் கௌரவமாக நடத்தப்படுவதையும் உணரும் போதே, மருத்துவர் மீதான நம்பகத்தன்மை உருவாகி, சிகிச்சைகளை செயலூக்கத்துடன் பின் தொடர்வார்கள். எனவே, வலுவான மருத்துவர் – நோயாளர் உறவானது கீழ்வரும் வகையில் முக்கியத்துத்துடையதாகின்றது.

• நோயாளர்கள் சிகிச்சைகளைப் பின்பற்றுவதையும், நோயாளரின் திருப்திகர நிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது.

• சரியான தகவல்களைத் துல்லியமாகப் பெற்றுக் கொள்ள இயலுமானதாக இருப்பதால், மருத்துவர்களால் மிகவும் சரியாக நோய்களை இனங்கண்டறிய முடியும்.

• கடுமையான அல்லது நீண்டகால நோய் நிலைமைகளுக்கு ஆளாகும் போது ஏற்படக்கூடிய மனபதற்றம்ஃபதகளிப்பு( யுnஒநைவல) மற்றும் பயத்தைக் குறைவடையச் செய்கின்றது.

• நோயாளர் வலுவூட்டலும், சுகாதாரம் தொடர்பான அறிவூட்டலும் ஊக்குவிக்கப் படுகின்றது.

மேற்கூறியதற்கு நேர்மாறாக, மோசமான மருத்துவர் – நோயாளர் உறவானது தவறான நோயறிதல், சிகிச்சை முறைகளில் இணக்கமின்மை மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைத்துறையில் நம்பிக்கையின்மை என்பவற்றுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாகச் சுகாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமான நிலையை அடையலாம். குறிப்பாக விளிம்பு நிலை சமூகங்களில் இதன் பாதகமான தாக்கம் அதிகரிக்கும்.

முடிவுரை
மருத்துவர் - நோயாளர் உறவானது வெறுமனே மருத்துவ ரீதியான பரிமாற்றம்(சுஒஉhயபெந) மாத்திரமாக அல்லாது, தொடர்பாடல், கலாச்சாரம், நம்பகத்தன்மை, அதிகாரம் என்பவற்றால் வடிவமைக்கப்பட்ட சமூகரீதியாகக் கட்டமைக்கப்பட்ட இடைத்தொடர்பாகவும் காணப்படுகின்றது. இவ் இடைத்தொடர்பின் தன்மையில் மொழி, பாலினம், வர்க்கம், ஸ்தாபன சூழல்கள் போன்ற காரணிகள் தாக்கம் செலுத்தும் விதத்தினை புரிந்து கொள்வதற்கு சமூகவியல் கண்ணோட்டங்கள் துணை புரிகின்றன. இதன் பிரகாரம் மருத்துவர் – நோயாளர் உறவை மேம்படுத்துவதற்கு, மருத்து திறன்கள் மாத்திரமல்லாது, கலாச்சார உணர்திறன், பரிந்துணர்வு (Empathy), சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான புரிதல் என்பனவும் அவசியமாகின்றது. அவ்வகையில் வினைத்திறனானதும், மனிதநேயமிக்கதுமான சுகாதார பாரமரிப்பு சேவையைக் கட்டியெழுப்புவதற்கு, கௌரமானதும், நோயாளர் மையநோக்குடையதுமான மருத்துவர் – நோயாளர் உறவு இன்றியமையாததாக காணப்படுகின்றது.

5:11 PM

நோய் சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டது

by , in
கேள்வி 7: ‘நோய் சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டது’ என்பதினை உதாரணங்கள் மூலமாக விளக்குக.


அறிமுகம்
‘நோய் சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டது’ என் கருத்தானது, சமூகவியல் கோட்பாடுகளிலொன்றான சமூக கட்டுமானவாத கோட்பாட்டிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இந்த கோட்பாடு, ஆரோக்கியம் மற்றும் நோய் நிலையானது உயிரியல் அடிப்படையானதோ, இயற்கையானதோ மாத்திரமானது அல்ல, அவை சமூகத்தின் செல்வாக்கிற்கும் உட்டபட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதாவது,மக்கள் எதனை ;நோய்’ என நோக்குகின்றார்கள் என்பது அவர்களின் நம்பிக்கைகள், கலாச்சாரம், மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் சூழல், அதிகார கட்டமைப்பு என்பவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டதாகும் என்பதினை விளக்குகின்றது. எனவே, ‘நோய் சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்டது’ எனக் கூறும் போது, நோயானது உடல் வெளிப்படுத்தும்; அறிகுறிகளுக்கு இடப்படும் நாமம் மாத்திரம் அல்ல, அவ் அறிகுறிகள் ஒரு சமூகத்தின் மக்களால் எவ்வாறு புரிந்துக் கொள்ளப்படுகின்றது, எவ்வாறு வரையறுக்கப் படுகின்றது, அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றப்படுகின்றது என்பதினாலும் வரையறுக்கப் படுகின்றது எனப் பொருள்படும். இத்தகைய கண்ணோட்டமானது ஒரு நோய் நிலை வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு விதமாகப் புரிந்துக் கொள்ளப்படுவதற்கும், நோக்கப்படுவதற்குமான காரணத்தை விளங்கப்படுத்துவதாக அமைகின்றது.

நோயை சமூக கட்டுமானமாக இனங்காணல்
நோயை வரையறுப்பதில் மனித உடல் வெளிப்படுத்தும் நோயறிகுறிகள் வகிப்பாகத்தை கொண்டிருப்பினும், சமூகமே எது நோய் என்பதை வரையறுக்கின்றது என சமூககட்டுமானவாதமும், குறியீட்டு இடைவினைவாதமும் எடுத்துக்காட்டுகின்றது. அதாவது, மனித உடல் நோயறிகுறிகளை வெளிக்காட்டினால் மாத்திரம் ‘நோய்’ ஏற்பட்டுள்ளதாக அடையாளப்படுத்தப் படுவதில்லை. குடும்பம், சமூகம், மருத்துவர் எனப் பிறரால் அவ் அறிகுறிகள் நோய்நிலையாக பார்க்கப்பட்டு, நோய் என அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே ஒருநபர் நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக அங்Pகரிக்கப்படுகின்றது. அதாவது மக்கள் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை எவ்வாறு புரிந்துக் கொள்கின்றார்கள், அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பதால் தீர்மானிக்கப்படுகின்றது. மக்களின் புரிதலும், எதிர்வினையும் கலாச்சாரம், மொழி, அரசியல் போன்ற சமூக காரணிகளின் செல்வாக்கினால் வடிவமைக்கப்படுகின்றது.

எனவே, சமூக கட்டுமானவாதத்தின் பிரகாரம், நோய் எனப்படுவது அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படுவது மாத்திரமல்ல, சமூகத்தால் அர்த்தப்படுத்தப்படுவதும் ஆகும். ஆகவே, ஒரு சமூகத்தில் நோய் என அங்கீகரிக்கப்படுவது, பிறிதொரு சமூகத்தில் நோயாக அங்கீகரிக்கப்படாது காணப்படலாம். மேலும், மருத்துவ அறிவானது சமூக நெறிமுறைகள் மற்றும் வரலாற்று அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது.

உதாரணமாக, 1970கள் வரை பல மேற்கத்திய நாடுகளின் மனநல மருத்துவர்களால் ஓரினச்சேர்க்கை ஒரு மனநோயாகக் கருதப்பட்டது. இன்று, இது மனித பாலுணர்வின் இயல்பான மாறுபாடாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த மாற்றமானது மருத்துவ வரையறைகள் காலத்துடனும்; கலாச்சார மாறுதல்களுடனும் மாற்றமடைவதைக் காட்டுகிறது.

சமூகம் நோயைக் கட்டமைக்கும் விதம்
1. கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகள்
மக்கள் கொண்டுள்ள கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகள் ஒரு நிலைமையை நோயாக வரையறுப்பதைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக சில கலாச்சாரங்களில் கால் - கை வலிப்பு, மனக்கோளாறுகள் போன்ற நிலைமைகள் ஆன்மீக ரீதியாக ஏற்பட்டுள்ள சிக்கல்களாக நோக்கப்படுகின்றன. எனவே, இவை நோயாக அங்கீகரிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவர் நாடபடாமல், ஆன்மீகவாதிகள் அல்லது மதகுருமார்களிடம் தீர்வு தேடப்படுகின்றது.

2. மொழியும் குறியீடுகளும்
மக்கள் மத்தியில் ஒரூ நோய் நிலையைப் பற்றி எவ்வாறான உரையாடல்கள் வலம் வருகின்றன என்பதும், அவை சமூகத்தில் எவ்வாறான அர்த்தப்பாடுகளை கொள்கிறது என்பதை தீர்மானிக்கின்றது. உதாரணமாக மனகோளாறு அல்லது எச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளானவர்கள், சமூக வழக்கில் “பைத்தியக்காரர்கள்”, “அருவருப்பானவர்கள்” போன்ற வார்த்தைகளால் விளிக்கப்படுவதானது, அது குறித்த சமூக இழிவை உருவாக்கவும், சமூக பாகுபாட்டை ஏற்படுத்தவும் வழிவகுக்கும். இவ்வாறான அடையாளப்படுத்தல்கள் பாதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் குறித்து எப்படியான எண்ணங்களைக் கொள்கின்றார்கள் என்பதனையும், மற்றவர்கள் அவர்களை நடத்தும் விதத்தினையும் பாதிப்பதாகவும் , தீர்மானிப்பதாகவும் அமையும்.

3. மருத்துவர்களின் அதிகாரம்
எதனை நோயாகக் கருதுவது என்பதிலும், நோய்வாய்ப்பட்ட நிலைமையைத் தீர்மானிப்பதிலும் மருத்துவர்கள் மிக முக்கியமான வகிப்பாகத்தை கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முன்பு நோயாகக் கருதப்படாத நிலைமைகள் கூட மருத்துவர்களால் நோய் என வரையறுக்கப்படலாம். உதாரணமாகப் பிரசவம், மாதவிடாய் நிறுத்தம், மனச்சோர்வு போன்ற நிலைமைகள் முன்னர் நோய் நிலையாகக் கருதப்படா விட்டாலும், தற்காலத்தில் நோய் நிலைமையாகக் கருதப்பட்டு மருத்துவச் சிகிச்சைகள் முன்மொழியப் படுகின்றமையைக் குறிப்பிடலாம்.

4. ஊடகங்களின் தாக்கம்
ஒரு நோய் நிலைமையை சமூகம் எவ்வாறு பார்க்கிறது என்பது தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்றவற்றின் தாக்கத்தினால் மாறுபடலாம். உதாரணமாக கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், ஊடகங்கள் வாயிலாக வைரசைப் பற்றிய பயத்தையும் தவறான புரிதல்கள் பரப்பப்பட்டமையானது, சில மத சமூகங்கள் மீதான பாகுபாட்டிற்கு வழிவகுத்தமையை குறிப்பிடலாம்.

‘நோய் ஒரு சமூகக் கட்டுமானம்’ என்பதற்கான எடுத்துக்காட்டுகள்
1. இலங்கை சூழலில் மனநல பிரச்சினைகள்
இலங்கை சமூகத்தில், மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மனநல நிலைமைகள் பெரும்பாலும் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை. அவை சில நேரங்களில் பலவீனம் அல்லது அவமானத்துடன் கூட தொடர்புடையவை. சமூக விலக்கு பயம் மக்கள் மத்தியில் இருக்கலாம், எனவே அவர்கள் தங்கள் அறிகுறிகளை மறைக்கிறார்கள் அல்லது உதவி தேடுவதைத் தவிர்க்கிறார்கள். இதன் விளைவாக, இந்த நோய் உயிரியல் ரீதியாக உள்ளது, ஆனால் சமூக ரீதியாகக் கண்ணுக்குத் தெரியாதது அல்லது மறுக்கப்படுகிறது.

2. தொழுநோய் மற்றும் எச்.ஐ.வி
தொழுநோயும், எச்.ஜ.வியும் உயிரியல் ரீதியாக ஏற்படும் நோய்கள் ஆயினும், அவை சமூக இழிவாக நோக்கப்படுகின்றன. சில சமூகங்களில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்களாக அல்லது தூய்மையற்றவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருந்துகளால் குணப்படுத்தவோ, நோயை கட்டுப்படுத்தவோ இயலுமானதாக இருப்பினும் கூட, சமூகம் கொண்டுள்ள பார்வை காரணமாகத் தனிமைப்படுத்தப்படுவதும், வெறுப்புடன் நடத்தப்படுவதும் நடைபெறுகின்றது.

3. மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நிறுத்தம்
சில சமூகங்களில், மாதவிடாய் என்பது தூய்மையற்ற தன்மையாகக் கருதப்பட்டு, பெண்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் அல்லது மத தளங்கள் போன்ற சில இடங்களுக்குள் செல்வதிலிருந்து தடுக்கப்படுகின்றார்கள். இங்கு, மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான உயிரியல் செயல்முறையாகக் காணப்பட்டாலும், அது சமூக விலக்காக கட்டமைக்கப்படுகின்றது. இது சமூக விதிமுறைகளால் ஒரு நிலைமை எதிர்மறையான கட்டமைக்கப்படுவதற்கு எடுத்துக் காட்டாகும்.

4. மாற்றுத்திறனாளிகள் மீது சுமத்தப்படும் சமூக அடையாளம்
உடல் குறைபாடுகள் உள்ள சிலர் தங்களை நோய்வாய்ப்பட்டவர்களாகக் கருதாமல் இருக்கலாம், ஆனால் சமூகத்தால் அவர்கள் பிறரில் தங்கி வாழ்பவர்கள் அல்லது இயலாமையுடையவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். இங்கு அவர்களின் "நோய்" பற்றிய சமூக அனுபவமானது, அவர்களது உண்மையான ஆரோக்கிய நிலைமைகளால் அல்லாது, ஏனையோரின் எதிர்வினைகளால் திணிக்கப்படுவதாக அமைகின்றது.

‘நோய் ஒரு சமூகக் கட்டுமானம்’ எனும் கருத்தின் முக்கியத்துவம்
நோயை ஒரு சமூகக் கட்டுமானமாகப் புரிந்துகொள்வது பல முக்கியமான தாக்கங்களையும், விளைவையும் ஏற்படுத்துவதாகும்.

• சுகாதார விடயங்கள் ஏற்படுத்தும் அனுபவங்கள் கலாச்சாரம், மொழி, நம்பிக்கைகள் என்பவற்றினால் ஆளப்படும் விதத்தினை விளங்கப்படுத்துகின்றது. அவற்றினை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

• நோய்கள் தொடர்பில் சமூக இழிவு கற்பிக்கப்படுவதையும், மக்கள் சிகிச்சை பெறுவதைத் தவிர்ப்பதற்கான பின்னணி காரணங்களையும் எடுத்துக்காட்டுகின்றது.

• மருத்துவ நிபுணர்களைச் சுகாதாரம் சார் விடயங்களை உணர்வு ரீதியாகவும், பரந்துபட்ட வகையிலும் அணுகுவதையும் ஊக்குவிக்கின்றது.

• சுகாதார கொள்கைகளை வகுக்கும் போது கலாச்சார மற்றும் சமூக காரணிகளையும் யதார்த்தங்களையும் கருத்திலெடுப்பதினை சாத்தியமாகின்றது.

முடிவுரை
நோய் எனப்படுவது மனித உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளைக் கொண்டு வரையறுக்கப்படுவது மாத்திரமல்ல, மக்கள் தமது கலாச்சார மற்றும் சமூகச் சூழலின் அடிப்படையில் அவ் அறிகுறிகளை எவ்வாறு புரிந்துக் கொள்கின்றார்கள், விளங்கிக் கொள்கின்றார்கள், அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பதாலும் வரையறுக்கப்படுவதும் ஆகும். சமூகக் கட்டுமானக் கண்ணோட்டத்தின் மூலம், ஆரோக்கியமும் நோய் நிலையும் மனித இடைத்தொடர்புகள், வரலாற்று மாற்றங்கள் மற்றும் அதிகார கட்டமைப்புகளால் வடிவமைக்கப்படுகின்றது என்பது எடுத்துக் காட்டப்படுகின்றது. இவ்வண்ணம், நோய் சமூக ரீதியாக கட்டமைக்கப் படுவதினை புரிந்துகொள்வதானது, நோய் நிலைமைகள் எவ்வாறு சமூக இழிவாக நோக்கப்படுவது நிகழ்கின்றது, சில நோய் நிலைமைகள் சில சமூகங்களில் நோயாகக் கருதப்படாமலிருப்பது எதனால், ஏன் சுகவாழ்வு வெவ்வேறு சமூகங்களால் வெவ்வேறுவிதமாக நோக்கப்படுகின்றது போன்ற விடயங்களை விளங்கிக் கொள்ளத் துணைசெய்யும். கலாச்சார பன்முகத்தன்மையையும், தனிநபர் எண்ணப்பாடுகளையும் மதிக்கும், பரிபூரணமானதும், மனிதநேயமிக்கதுமான சுகாதார முறைமையை உருவாக்க இப்புரிதல் மிகவும் இன்றியமையாததாகும்.

5:01 PM

சுகாதாரமும் குறியீட்டு இடைவினைவாதமும்

by , in
கேள்வி 6: ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை குறித்த குறியீட்டு இடைவினைவாதக் கண்ணோட்டத்தை விவரித்து, அக்கண்ணோட்டம் நோய்வாய்ப்பட்ட நிலையின் போதான வாழ்வியல் அனுபவத்தை எவ்வாறு விளக்குகிறது எனக் கூறுக.



அறிமுகம்
குறியீட்டு இடைவிமனைவாதக் கோட்பாடு என்பது மனிதர்கள் வார்த்தைகள், சைகைகள், பொருட்கள், செயல்கள் போன்ற குறியீடுகளுக்கு பொருளும் அர்த்தப்பாடும் கொடுத்து ஒருவரோடு ஒருவர் எவ்வாறு; இடைத்தொடர்பு கொள்கின்றார்கள் என்பதை ஆராயும் சமூகவியல் கோட்பாடாகும். எனவே, இக்கோட்பாடு மனிதர்களின் நாளாந்த வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட அனுபவங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக காணப்படுகின்றது. அவ்வகையில் குறியீட்டு இடைவினைவாத கோட்பாடானது, ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை எனும் விடய நோக்கில், மக்கள் நோய்நிலையின் போது எவ்வாறான அனுபவங்களைப் பெறுகின்றார்கள், நோய் நிலையை எவ்வாறு புரிந்துக் கொள்கின்றார்கள், நோய் நிலை அவர்களில் எவ்வாறான அடையாளம் சார் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என ஆராய்கின்றது. இக்கோட்பாட்டின் பிரகாரம் நோய்நிலை என்பது உடல் சார்ந்த விடயமாக மாத்திரம் நோக்கப்படாமல், நபரொருவரின் சுயத்தையும், ஏனையோருடனான உறவுகளையும் பாதிக்கும் சமூக மற்றும் குறியீட்டு அனுபவமாகவும் பார்க்கப்படுகின்றது.

சுகாதாரம் தொடர்பிலான குறியீட்டு இடைவினைவாதத்தின் முக்கிய கருத்துக்கள்
1. நோய் எனப்படுவது சமூகத்தால் அடையாளமிடப்படுவதாகும்.
குறியீட்டு இடைவினைவாத கருத்தாளர்கள் நோய்நிலையானது, உயிரியல் நிகழ்வாக அமைந்து விடுவதன் காரணமாக மாத்திரம் நோய் எனக் குறிக்கப்படுவதில்லை, அந்நிலையை சமூகம் நோய் என வரையறுத்தால் மாத்திரமே நோய் எனப்படும் என்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, மனநலன் சார்ந்த பிரச்சினைகள் மருத்துவரால் நோய் நிலை குறிக்கப்படாத பட்சத்தில் அது சாமானிய வாழ்வியல் உணர்வாகவே கொள்ளப்படுகின்றது.

2. நோய்வாய்ப்பட்ட போது ஆள்சார் அடையாள மாற்றம் ஏற்படல்
நபரொருவர் நோய்நிலைக்கு ஆளாகி இருப்பது இனங்காணப்படும் போது, அந்நபர் தன்னை தானே நோக்கும் விதமும், ஏனையோர் அவரை நோக்கும் விதமும் மாற்றமடைகின்றது. இம்மாற்றமானது அந்நபரின் அடையாளம்சார் மாற்றத்துக்க வழிகோலுகின்றது. இதனை ‘ நோய்வாய்ப்பட்ட போதான அடையாளம் (sick identity)’ என்பர். இதன் போது நோய் நிலைக்கு ஆளானவர் பொதுச் சமூகத்தில் எந்தளவிற்கு ஊடாட இயலும், அல்லது தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற பல விடயங்களை எதிர்கொண்டு கையாள வேண்டிய சூழலும் ஏற்படும்.

3. சமூக இழிவுபடுத்தலுக்கு ஆளாதல்
எச்.ஐ.வி, தொழுநோய், மனநலன் பிரச்சினைகள் போன்ற சமூகத்தால் இழிவுபடுத்தப்படும் நோய்கள் ஏற்படும் போது, நோயாளர் மீது எதிர்மறையான முத்திரை சுமத்தப்படல் நடந்து விடுகின்றது. இதன் காரணமாகக் குறித்த நோய்கள் தொற்றக் கூடியதாக இல்லாத போதும், உடல்ரீதியான ஊனங்களை ஏற்படுத்தியிராத போதும் கூட, நோயாளரை தனிமைப்படுத்தலுக்கும் அவமானப்படுத்தலுக்கும் ஆளாகலாம்.

4. சுகாதார நிபுணர்களுடனான தொடர்புகள்
குறியீட்டு இடைத்தொடர்புகளில் மருத்துவர் - நோயாளர் உறவு முக்கியமானதொன்றாகும். நோயாளர் தனது நோய்நிலையை விளங்கிக் கொள்வதில், மருத்துவர் அவரிடம் தொடர்பாடும் விதம், மருத்துவம் சார்ந்த சொற்களைப் பயன்படுத்தும் விதம், ஆலோசனைகள் கூறும் போது வெளிப்படுத்தும் உடல் மொழி போன்ற விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. எனவே, தவறான தொடர்பாடல்கள் நோயாளருக்கு நம்பிக்கையின்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்திவிடும். அதேவேளை இரக்க உணர்வு, தெளிவாக விளக்கமளித்தல் போன்றன சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

5. கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள்
மக்களின் நோய்களைப் பற்றிய புரிதல் அவர்களின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளாலும் வடிவமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சில சமூகங்களில், நோய் என்பது கர்மாவின் பலன், தெய்வத்தின் தண்டனை அல்லது துர் ஆவிகளால் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றது. எனவே, மக்களின் கலாச்சார, மத நம்பிக்கைகள் அவர்கள் நோய் அறிகுறிகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றார்கள், சிகிச்சைகளை எவ்வாறு எதிர் கொள்கின்றார்கள் என்பதில் தாக்கம் செலுத்துகின்றது.

நோய்வாய்ப்பட்டிருக்கும் போதான வாழ்க்கை அனுபவம்
குறியீட்டு இடைவினைவாதமான நோய் நிலையை, நோய் அறிகுறிகளின் ஊடாக மாத்திரம் நோக்காமல், நோய்வாய்ப்பட்டிருக்கும் போது மனிதர்கள் எவ்வாறான உணர்வைக் கொண்டிருக்கின்றார்கள், எவ்வாறு சிந்திக்கின்றார்கள், எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பதைக் கவனத்தில் எடுத்து விளங்கப்படுத்துகின்றது. ஒவ்வொருவரின் நோய் நிலை தொடர்பிலான அனுபவங்கள், அவர்களின் நோய் பற்றிய கடந்த கால அனுபவங்கள், கலாச்சார பின்புலம், சமூக அந்தஸ்து, அவர்களுக்குக் கிட்டும் ஆதரவுகள் என்பவற்றின் காரணமாக வேறுபடுகின்றன.

உதாரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வாழ்வதற்கு முற்படலாம், அதேவேளை மற்றொருவர் தோல்வி மனப்பான்மையில் தான் தனிமைப்படுத்தப் பட்டதாக உணரலாம். மேலும், நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது நிலை மற்றவர்களுக்குப் புரியவில்லை, அதனை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என விரக்தியடைந்தவராகக் காணப்படலாம். இவ் மனவுணர்வுகளும் அதன் சமூக பரிமாணங்கள் நோயுற்ற போதான வாழ்க்கை அனுபவங்களில் முக்கியமானதாகும்.

எனினும், ஒருவர் தன்மீது சுமத்தப்படும் ‘நோய்’ முத்திரையை நிராகரிக்கவோ, எதிர்க்கவோ இயலும். உதாரணமாக, மனநல பிரச்சினை கொண்டவராக குறிப்பிடப்படும் ஒருவர், தன்மீது சுமத்தப்படும் ‘மன நோயாளர்’ என்ற அடையாளத்தை மறுத்து, தன்னை வித்தியாசமான சிந்தனை அல்லது நடத்தை கொண்டவர் என அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

இலங்கை சூழலிலிருந்தான எடுத்துக்காட்டுகள்
1. மன நலன்சார் பிரச்சினைகள் சமூகத்தால் இழிவாக நோக்கப்படல்
இலங்கையில், பெரும்பாலும் மனநலன் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசுவதில்லை. மனநலன் பிரச்சினைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் போது, தாம் இழிவு படுத்தப்படலாம், ‘பைத்தியக்காரர்;’ என முத்திரை குத்தப்படலாம், தொழிலிலிருந்து நீக்கப்படலாம், திருமண வாழ்வு சீர்குலையலாம் போன்ற பல காரணங்களால் அவ்வாறு மறைத்துக் கொள்கின்றார்கள். இது சிகிச்சையை நாடுவதைத் தாமதப்படுத்தி, மனவுணர்வு சார் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.

2. மருத்துவர் - நோயாளர் இடைத்தொடர்பு
பொதுத்துறை மருத்துவமனைகளில், நோயாளர்களுக்கான சிகிச்சைகள் அவசரகதியில், மருத்துவ சொற்களை போதியளவில் விளக்கமாகக் கூறாது, மிககுறைந்த அளவிலான உரையாடல்களுடன் , முடிகின்றது. இது நோயாளர்கள் தாம் மரியாதையாக நடத்தப்படவில்லை எண்ணி விடவோ, குழப்பமான மனநிலையை அடையவோ வழிவகுக்கும். அதே வேளை மருத்துவர்கள், நோயாளர்களின் நிலை மற்றும் சிகிச்சை தொடர்பாகத் தெளிவாகவும், மரியாதையாகவும் விளக்கி கூறும் போது, நோயாளர்கள் தமது நிலையை சரிவர புரிந்துக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் சிகிச்சையில் பங்கெடுப்பர்.

3. நோய்கள் தொடர்பான கலாச்சார ரீதியான பார்வைகள்
சில நேரங்களில் நோய் நிலைமைகள் ஏற்படும் போது மருத்துவ ரீதியாக எதிர்கொள்ளாமல், அதனை மத அல்லது ஆன்மீக நம்பிக்கைகள் ரீதியாக விளக்க முற்படுகின்றார்கள். உதாரணமாக, உடல் வலிப்புகள் அல்லது மனப்பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை மருத்துவ பிரச்சினையாக அணுகாமல், ஆன்மீக ரீதியான சிக்கல்களாக நோக்கி, மருத்துவரிடம் செல்லாமல், மதக்குருக்களிடம் தீர்வு நாடிச் செல்வதினை குறிப்பிடலாம்.

4. அங்கயீனம் தொடர்பான சமூகத்தின் பார்வை
பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்கள் தங்களை "நோய்வாய்ப்பட்டவர்களாக" உணராமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் சமூகத்தால் பிறரில் தங்கியிருப்பவர்களாகவோ, ஆற்றல் குறைந்தவர்களாகவோ நடத்தப்படுகிறார்கள். இது ஒரு நபர் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும்போது கூட, சமூகம் பார்க்கும் விதம் காரணமாகத் தாம் நோய் நிலையில் இருப்பவராகவா அல்லது வேறு விதமாகவா உணர்கின்றார் என்பது மாறுகின்றமைக்கு எடுத்துக் காட்டாகும்.

குறியீட்டு இடைவினைவாதத்தின் சாதக, பாதக அம்சங்கள்
சாதக அம்சங்கள்
• நோயாளர்களின் நிஜவாழ்க்கை அனுபவங்களில் கவனம் செலுத்துகிறமை.
• தொடர்பாடலையும் நோயாளர் நேய சுகாதார பராமரிப்பையும் மேம்படுத்த உதவுகிறது.
• உயிர் மருத்துவ கண்ணோட்டங்கள் பெரும்பாலும் புறக்கணித்துவிடும் சமூகத்தால் இழிவுபடுத்தப்படும் விடயத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றமை.

பாதக அம்சங்கள்
• சமூக ஏற்றத்தாழ்வுகளை (எ.கா., வறுமை, வர்க்கம் அல்லது பராமரிப்புக்கான அணுகல்) முழுமையாக விளங்கப் படுத்தாமை.
• தனிநபர் ரீதியாக அதிக கவனத்தைக் குவிப்பதனால், சமூக ரீதியான முறைசார் காரணிகளை எடுத்துக்காட்டாமை.

முடிவுரை
குறியீட்டு இடைவினைவாதமானது, மனிதர்கள் நோய்வாய்ப்படும் போதான அகவுணர்வு மற்றும் அதன் சமூக பரிமாணம் தொடர்பாக ஆராய்வதன் வாயிலாகச் சுகாதாரத் துறையில் ஆரோக்கியமானதொரு கருத்தோட்டத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வகையில் இக் கண்ணோட்டம் நோய்வாய்ப்பட்ட போதான மனிதர்களின் அனுபவங்களைப் புரிந்துக் கொள்ள உதவுகின்றது. மேலும், மனிதர்கள் நோய் நிலையை எவ்வாறு புரிந்துக் கொள்கின்றார்கள், எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கு இக்கண்ணோட்டம் முக்கியமானதாக காணப்படுகின்றது. எனவே, பிறக் கண்ணோட்டங்களுடனும் இணைந்து பிரயோகிக்கும் போது குறியீட்டு இடைவினைவாதமானது ஆரோக்கியம் மற்றும் நோய்நிலை தொடர்பான முழுழமையானதொரு பார்வையைத் தருவதாக அமைகின்றது.
3:40 PM

சுகாதாரம் பற்றிய அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டம்

by , in
கேள்வி 5: ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை குறித்த அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டத்தை விளக்கி, இக் கண்ணோட்டம் சுகாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு நிவர்த்தி செய்கிறது எனக் கூறுக.



அறிமுகம்
மருத்துவ சமூகவியலில் அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டமானது, ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை தொடர்பில் பொருளாதார முறைமைகள், சமூக வர்க்க அமைவுகள், அரசியல் கட்டமைப்புகள் என்பன எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதை ஆராய்கிறது. அரசியல்-பொருளாதார அணுகுமுறையானது சுகாதாரத்தை அதிகாரம், செல்வம், தொழில் நிலைமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ள ஒன்றாக நோக்குகின்றது. மார்க்சிய சிந்தனைகளிலிருந்து தோற்றம் கொண்ட இக் கண்ணோட்டமானது, முதலாளித்துவ முறைமையின் கீழ் நோய் நிலையானது சமூகம் முழுவதும் பரவிய ஒன்றாக இல்லாத போதும் கூட, ஒட்டுமொத்த பொருளாதார ஒழுங்கமைப்பையும் பாதிக்கக் கூடியதாக காணப்படுகின்றமையை எடுத்துக் காட்டுகின்றது. அவ்வகையில் இக்கண்ணோட்டமானது சுகாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைப்பதற்கும், அதற்கமைந்த சமூக சீர்திருத்தங்களைக் கோருவதற்குமான சிறப்பானதொரு அணுகுமுறையாகக் காணப்படுகின்றது.

அரசியல்-பொருளாதாரக் கண்ணோட்டத்தின் மைய உள்ளடக்கம்
1. ஆரோக்கியம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உருவாக்கப் படுகிறது
இக் கண்ணோட்டம், சுகாதாரத்தைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் அல்லது உடலின் உயிரியல் நிலைமைகளின் விளைவாக அமைவதாக மாத்திரம் நோக்காது, ஒருவர் சார்ந்துள்ள வர்க்க நிலை, பணிச்சூழல், வாழ்வியல் நிலைமைகள் என்பவற்றின் விளைவாகவும் நோக்குகின்றது. எடுத்துக் காட்டாக, பித்தளை பொருள் தயாரிப்பு தொழில் செய்யும் ஒருவர் அல்லது இராசாயண புகை வெளிவரும் தொழிற்சாலையில் பணி செய்யும் ஒருவர், அலுவலக பணியில் ஈடுபடும் ஒருவரை விடவும் அதிக உடல்நல அபாயங்களை எதிர்கொள்பவராகக் காணப்படுவார்.

2. முதலாளித்துவ முறைமையில் சுகாதார சேவைகள் வர்த்தக பண்டமாக்கப்படல்
முதலாளித்துவ சமூக அமைப்பில் ஏனைய பண்டங்களைப் போலவே, சுகாதார சேவைகளும் பணத்திற்காகப் பரிவர்தனை செய்யப்படும் வர்த்தக பண்டமாக்கப்படுவதால், பணக்காரர்களால் சிறந்த சுகாதாரப் பராமரிப்பு சேவைகளைப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள இயலும். ஆனால், ஏழைகளால் அநேகமான சந்தர்ப்பங்களில் தரமான சுகாதார பராமரிப்பு சேவைகளை பெற இயலாது போகின்றது, அல்லது, அவை கிடைக்காமலேயே போய் விடுகின்றது. மேலும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும், தனியார் வைத்தியசாலைகளும் இலாபமீட்டுவதனையே முதன்மையானதாகக் கொண்டு செயற்படுகின்றன.

3. தொழிலாளர் நிலைமைகள் மற்றும் வர்க்க சமத்துவமின்மை
கீழ்வர்க்க அடுக்கினை சேர்ந்தவர்கள் ஈடுபடும் தொழில்கள் அநேகமாக நீண்ட நேர உடல் உழைப்பு, மனஅழுத்தம், பாதுகாப்பற்ற பணிச்சூழல் போன்ற மோசமான தொழில் நிலைமைகளைக் கொண்டிருக்கின்றன. இந்நிலைமைகள் அவர்கள்; நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்படுவதால், காயங்களுக்கும் மனவழுத்தத்துக்கும் ஆளாதல் போன்ற பாதிப்புகளை அதிகளவில் ஏற்படுத்துகின்றன. மேலும், முறைசாரா தொழில்களில் ஈடுபடுவார்கள் தொழில் பாதுகாப்பையோ, காப்பீடுகளையோ பெறுவதும் இல்லை.

4. உலகளாவிய சுகாதார சமத்துவமின்மை
சர்வதேச அளவில் வறுமையான நாடுகள் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையோ, நிதிவசதிகளையோ கொண்டிருப்பதில்லை. பணக்கார நாடுகள் மருத்துவ ஆய்வுகள், நோய்த்தடுப்பு மருந்துகள், மருத்துவம் சார் வர்த்தக பரிவர்த்தனை என்பவற்றில் மேலாதிக்கம் செலுத்துகின்றமையால்;, வறுமையான நாடுகள் அந்நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

சுகாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளும் அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டமும்
அரசியல்-பொருளாதாரக் கண்ணோட்டம் சுகாதார சேவைகளும் அதன் பலாபலன்களும் சமூகத்தில் அனைவருக்கும் போதுமான அளவில் கிடைக்காமைக்கும், அவை சமத்துவமற்ற முறையில் பரவிக் காணப்படுவதற்குமான தெளிவான விளக்கங்களைத் தருகிறது.

1. போதுமான வளங்கள் கிடைக்காமை
பின்தங்கிய சமூகப் பொருளாதார வகுப்பைச் சேர்ந்த மக்களுக்குப் போசாக்கான உணவு, சுத்தமான நீர், பாதுகாப்பான வீடு என்பனவும், தரமான சுகாதார சேவைகளும் கிடைப்பது சவாலானதாகக் காணப்படுகின்றது.. இந்தக் குறைபாடுகள் நோய் நிலை ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகின்றது.

2. சுகாதார பராமரிப்பு சேவைகள் அனைத்து இடங்களிலும் சமமான அளவில் காணப்படாமை
பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைகள் காணப்படுகின்றன. பின்தங்கிய பிரதேசங்களில் அடிப்படை சுகாதார வசதிகளுக்குக் கூட பற்றாக்குறை காணப்படுகின்றது. இல்லை. இதனால், மக்கள் தாம் சார்ந்துள்ள வர்க்கம் மற்றும் புவியியல் வசிப்பிடம் அடிப்படையில் அச்சமத்துவத்தை எதிர்கொள்கின்றார்கள்.

3. தனியார்மயமாக்கல்
பல நாடுகளில் தனியார் மருத்துவமனைகளின் தோற்றம் காரணமாக, பணக்காரர்களுக்கு உயர்தரமான சுகாதார பராமரிப்பு சேவைகளும், ஏனையவர்களுக்கு நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கும் பொதுத்துறை சுகாதார சேவைகள் என அமைந்த இரட்டை முறைமை ஏற்பட்டுள்ளது. இது சமூகத்தில் சுகாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகப்படுத்துகின்றது.

4. பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான இரட்டைச் சுமை
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்கள், வீட்டுப்பணி மற்றும் கூலி உழைப்பு என இரட்டைச் சுமையை எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. அதேபோல் இன சிறுபான்மையினரும் மீதும் சுகாதார அமைப்பில் பாகுபாடு அல்லது புறக்கணிப்பு நிகழ்த்தப்படும் போது இரட்டை சுமையை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

இலங்கை மற்றும் தெற்காசியா சூழலிலிருந்து எடுத்துக்காட்டுகள்
1. இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
பெரும்பாலும் விளிம்புநிலை சமூகங்களாக அடையாளப்படுத்தப்படும் இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளின் பெருந்தோட்டங்களை வசிப்பிடமாகக் கொண்ட மக்கள், ஏனைய பிரதேச மக்களை விட, நெரிசலான வீடுகளிலும், மருத்துவ சேவைகளை அணுகும் வசதிகள் குறைவாகக் கொண்ட நிலைமைகளிலுமே வாழ்கின்றார்கள். மேலும், அவர்களது பணியிலும் உடல் ரீதியான பாதிப்புக்கள், பூச்சிக் கடிகளுக்கு ஆளாகுதல் மற்றும் மோசமான ஊட்டச்சத்து போன்ற நிலைமைகளை எதிர்கொள்கின்றார்கள். இது நாட்பட்ட சுகாதார பிரச்சினைகள் ஏற்படக் காரணமாகின்றது.

2. சுகாதாரத் துறையை தனியார்மயமாக்குதல்
மருத்துவ சேவை தனியார் மயமாக்கப்படுவதால், இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலர், அதிக செலவீனங்களை எதிர்கொள்ள இயலாமல் மருத்துவச் சிகிச்சைகளைத் தவிர்க்கின்றனர் அல்லது தாமதப் படுத்துகின்றனர், மேலும், பொதுத்துறை மருத்துவமனைகள் அதிக சனநெரிசலும், வளப்பற்றாக்குறையும் கொண்டதாக இயங்குகின்றன. இதன் காரணமாகச் சமமானதும் , போதுமானதுமான சுகாதார பராமரிப்பு சேவைகள் பணவசதி அற்றவர்களுக்குக் கிட்டாமல் போகின்றது.

3. கோவிட்-19 பெருந்தொற்று நிலைமை
கொவிட் பெருந்தொற்று காலம் வர்க்க ஏற்றத்தாழ்வுகள் சுகாதார விடயங்களில் ஏற்படுத்தியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அம்பலத்திற்குக் கொண்டுவந்து எடுத்துக்காட்டியது. ஊரடங்கு காலங்களில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்தனர் எனினும், தினசரி கூலி பெறும் உழைப்பாளர்கள் தமது வருமான மார்க்கங்களை இழந்தார்கள். இவ் பொருளாதார நெருக்கடியின் காரணமாக முகக்கவசம், கிருமிநாசினி போன்ற நோய்த் தடுப்புப் சாதனங்களைக் கொள்வனவு செய்ய இயலாத நிலையை எதிர்நோக்கினார்கள்.

4. மருந்து உற்பத்தியாளர்களின் ஆதிக்கம்
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் விலையுயர்ந்த மருந்து உற்பத்திகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கின்றன. டெங்கு அல்லது காசநோய் போன்ற நோய்களுக்கான குறைவான இலாபத்தைப் பெற்றுத் தரக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நோய்கள் பெரும்பாலும் பின்தங்கிய வறிய மக்களைத் தாக்குவதால் அவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.

அரசியல்-பொருளாதாரக் கண்ணோட்டத்தின் சாதகமான அம்சங்கள்
• சுகாதார பிரச்சினைகளை அரசியல் பிரச்சினையாக நோக்குதல்
அரசியல் - பொருளாதார கண்ணோட்டமானது சுகாதாரத்தைத் தனிநபர்கள் சார்ந்த பிரச்சினையாக நோக்குவதை எதிர்த்து, அதனை அரசியல் தீர்மானங்களால் ஏற்படும் பிரச்சினையாக நோக்குகின்றது.

• சமூக முறைமை மாற்றத்தைக் கோருகின்றமை
பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்;டு தனிநபர் நடத்தை மாற்றத்தை மாத்திரம் முன்மொழியாது, நியாயமான ஊதியம், தொழில் நிலைமைகளில் மேம்பாடு, சுகாதார வசதிகளின் அதிகரிப்பு போன்ற பரந்தளவிலான சமூக மாற்றத்தையும் கோருகின்றது.

• பிரச்சினைகளுக்கான அடிப்படை மூல காரணத்தை இனங் காண்கின்றமை
மோசமான சுகாதார நிலைமைகளுக்குத் தனிநபர்களின் நடத்தைகளைக் காரணமாகக் குறிப்பிடாமல், வறுமை, மோசமான வாழ்விட நிலைமைகள், பாதுகாப்பற்ற பணிச்சூழல், சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்ற சமூக காரணிகளை மூலகாரணமாக இனங்கண்டு, அவற்றைச் சரி செய்வதை அரசியல் - பொருளாதார கண்ணோட்டம் முன்வைக்கின்றது.

• நியாயமானதும் சமமானதுமான சுகாதார சேவை கொள்கைகளை ஊக்குவிக்கின்றமை
உலகளாவிய ரீதியில் சுகாதார பராமரிப்பு கொள்கைகள், தொழிலாளர்களின் மேம்பட்ட பாதுகாப்பு, நியாயமான வகையில் சுகாதார சேவைகள் கிடைக்கின்றமை என்பவற்றை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக வருமானம், அந்தஸ்து என்பவற்றைக் கடந்து நியாயமான சுகாதார சேவைகளைப் பெற இயலும்.

முடிவுரை
அரசியல்-பொருளாதாரக் கண்ணோட்டமானது, சுகாதாரத்தை வெறும் உயிரியல் சார்ந்த விடயமாக அல்லாமல், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினையாகப் புரிந்துகொள்ளுவதற்கான அடிப்படையைத் தருகின்றது. அதாவது முதலாளித்துவம், வர்க்க அமைவு, ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றை கருத்திலெடுத்து, குறிப்பிட்ட தரப்பு மக்கள் மோசமான சுகாதார பராமரிப்பு சேவைகளை அனுபவிப்பதற்கான காரணங்களை விளக்குகின்றது. அவ்வகையில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படையாகத் தெரியக் கூடிய இலங்கை போன்ற நாடுகளில், ஏழைகள், பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரதேச மக்கள் அதிகளவில் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கான காரணங்களை இக்கண்ணோட்டம் வெளிப்படுத்துகின்றது. அவ்வாறாக, சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கு, சிறந்த மருத்துவமனைகளுடன், நியாயமான பொருளாதார அமைப்புகள், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் சுகாதாரத் துறையில் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான அரசியல் முன்னெடுப்பு ஆகியவற்றின் அவசியப்பாட்டை அரசியல் - பொருளாதாரக் கண்ணோட்டம் கோடிட்டுக் காட்டுகின்றது.
3:04 PM

டால்காட் பார்சன்ஸின் "நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல் (Sick Role) "

by , in
கேள்வி 4: டால்காட் பார்சன்ஸின் "நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல் (Sick Role) " என்ற கருத்து நோய் நிலையின் சமூக பரிமாணத்தை எவ்வாறு விளக்கி, இலங்கை சூழலுக்குள் அக் கருத்து எதிர்கொள்ளும் சவால்களை/வரம்புகளை கூறுக.



அறிமுகம்
தொழில்பாட்டுவாத சமூகவியலின் முக்கியமானதொரு அறிஞரான டால்காட் பார்சன்ஸ், ‘நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல்" என்ற கருத்தைத் தனது ‘தி சோசியல் சிஸ்டம் (1951)’ எனும் படைப்பில் அறிமுகப்படுத்தினார். அதில் அவர் நோய் நிலையை மருத்துவம் சார்ந்த விடயமாக மாத்திரம் பார்க்காமல், சமூகத்தால் நெறிப்படுத்தப்படும், சமூக ஒழுங்கிலிருந்தான விலகலாகவும் நோக்கினார். அவ்வகையில் “நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல்’ எனும் கருத்தானது, சமூகமானது தனது ஒழுங்கையும் உறுதித்தன்மையையும் தொடர்ந்து நிலைநாட்டிக் கொள்ளும் வகையில் நோய்வாய்ப்பட்ட நிலையை எவ்வாறு கையாள்கின்றது என்பதை விளக்குகின்றது. பார்சனின் கருத்துப்படி நபரொருவர் நோய்வாய்ப்படும் போது, அந்நபர் பிரத்தியேகமான கடமைகளையும் பொறுப்புகளையும் கொண்ட சமூக வகி பாத்திரத்தை ஆற்ற வேண்டியவராகின்றார். இக்கருத்தானது உலகளாவிய செல்வாக்கைப் பெற்றிருப்பினும், இலங்கை போன்ற சூழல்களில் சமூக, பொருளாதார, கலாச்சார காரணிகள் நோய்வாய்ப்பட்ட போதான நடத்தைகளில் செல்வாக்கு செலுத்து காரணிகளாக அமைவதால் தன்னளவில் சவால்களை எதிர் கொள்வதாகக் காணப்படுகின்றது (வரம்புகளைக் கொண்டுள்ளது).

பார்சனின் ‘நோய்வாய்ப்பட்ட நிலையில் வினையாற்றல்’ (Sick Role)  கருத்தின் முக்கிய கூறுகள்
பார்சனின் கருத்துப்படி நோய்வாய்ப்பட்டவரால் வழக்கமான தமது சமூக பாத்திரத்தை ஆற்ற முடியாது, இதன் காரணமாக, சமூகத்தின் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகிச் சீர்குலைகின்றது. இந்நிலைமையைச் சீர்செய்ய நோய்வாய்ப்பட்டவர்; எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சமூகம் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் நோய்வாய்ப்பட்ட நிலையிலுள்ள நபர் நடத்தை தொடர்பான வரையறைகளை விதித்து அவருக்குத் தற்காலிகமான சமூக கதாபாத்திரம் ஒன்றை வழங்குகின்றது. அவ்வரையறைகளை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

01. வழக்கமான கடமைகளிலிருந்து விலக்களிப்பு
நோய்வாய்ப்பட்ட நபர் அவரது வழக்கமான அன்றாட கடமைகளை ஆற்றும் இயல்பை கொண்டிராமையால், அவற்றிலிருந்து தற்காலிகமாக (எ.கா.- தொழில் செய்தல், பெற்றோர் கடமைகள்) விடுவிக்கப்படுகிறார்.

02. நோயாளர் மீது பொறுப்பு கூறல் சுமத்தப்படாமை
தனிநபர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதற்காகக் குற்றம் சாட்டப்படுவதோ, பொறுப்புக் கூற கோரப்படுவதோ இல்லை. நோய்வாய்ப்படலானது தனிநபர் ஒருவரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகக் கருதப்படுகிறது, இதன் மூலம் எந்தவொரு நபரும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாவதோ, அல்லது சமூக புறக்கணிப்புக்கு ஆளாவதோ தவிர்க்கப்படுகிறது.

03. நோயாளர் நலமடைவதில் விருப்பு கொள்ளல்
நோய்வாய்ப்பட்ட நபர் குணமடைவதை விரும்ப வேண்டும் எனவும், நோய்வாய்ப்பட்ட நிலையில் நீடிக்கவோ, அந்நிலைமையைத் தொடர்ந்து அனுபவிக்கவோ கூடாது என எதிர்பார்க்கப்படுகிறது.

04. சுகாதார உதவியை நாடுவதைக் கடப்பாடாகக் கொள்ளல்
நோய்வாய்ப்பட்ட நபர் மருத்துவ ஆலோசனையைப் பெற்று, மருத்துவ நிபுணர்களின் பங்களிப்புடன் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும்

மேலும், மருத்துவர் இங்கு வாயிற்காப்பாளர் போன்றதொரு பணியை ஆற்றுவதையும் எடுத்துக் காட்டுகின்றார். அதாவது நபர்ரொருவர் உண்மையாகவே நோய்வாய்ப்பட்டுள்ளாரா என்பதைத் தீர்மானித்து, அவர் குணமடைந்து ஆரோக்கியமான நிலைக்கு மீள்வதற்கு வழிகாட்டுகின்றார். இதன் மூலம் சமூகத்தில் நீண்ட கால அடிப்படையிலான சீர்க்குலைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், சமூக சமநிலையை மீளமைக்கவும் இயலுமானதாக உள்ளது.

‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல்’ மாதிரியின் சாதகமான அம்சங்கள்
01. நோய்வாய்ப்பட்ட போதான நடத்தையை ஒரு சமூக செயல்முறையாக விளக்குகிறது
மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படும் சமூகம் அதனை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதினையும், நோய்வாய்ப்பட்டவர்களிடம் சமூகம் எவ்வாறான நடத்தைசார் எதிர்பார்ப்புகளை முன்வைக்கின்றது என்பதினையும் விளக்கமாக முன்வைக்கின்றமை இதன் முக்கியமான சாதக அம்சமாகும்.

02. சமூக ஒழுங்கைப் பராமரிக்கிறது
நோய்வாய்ப்பட்ட போது நடந்து கொள்ள வேண்டிய விதம் மற்றும் குணமடைவதற்காகச் செய்ய வேண்டியவை பற்றியதுமான விதிமுறைகளை வகுப்பது மூலமாக, நோய்வாய்ப்பட்டவர் அந்நோய்க்குப் பலியாவதைத் தடுத்து, அவர் மீண்டும் தமது வழக்கமான சமூக வகிபாகத்தை ஆற்றும் நிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்கின்றது. இதன் மூலம் சமூக ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றது.

03. தீவிரமான நோய் நிலைமைகளில் பயனுள்ளதாக இருக்கின்றமை
தீதுண்மி காய்ச்சல், காயங்கள் போன்ற குறுகிய கால கடுமையான நோய்வாய்ப்பட்ட நிலைமைகளில் குறித்த நபர்கள் தற்காலிகமாக தமது சமூக வகிபாகத்திலிருந்து விடுப்பு பெற்று, குணமடைந்த பின்னர் வழமைக்குத் திரும்புவதற்கு ஏதுவானதாக ‘நோயுற்ற போதான வினையாற்றல்’ மாதிரி அமைவதால் பயனுடையதாகக் காணப்படுகின்றது.

‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல்’ மாதிரியின் பாதகமான அம்சங்கள்
01. தீவிரமான நோய்(Acute Illness) நிலையின் போது மாத்திரமே பிரயோகிக்கலாம்
‘நோய்வாய்ப்பட்ட போதனா வினையாற்றல்’ மாதிரியானது நோய்கள் குணமடையக் கூடிய குறுகிய காலத்து நிலைமை என அனுமானிக்கின்றது. எனவே, இதனைப் பாதிக்கப்பட்ட நபர்கள் முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்ப இயலாத நீரிழிவு, புற்று நோய் போன்ற நாட்பட்ட நோய் நிலைகளுக்குப் பிரயோகிக்க முடியாது.

02. மனநலனையும், சமூக இழிவுபடுத்தலையும் புறக்கணிக்கின்றமை
பல சமூகங்களில் மனநலன் சார் பிரச்சினைகள் , உடல்ரீதியான நோய்களைப் போன்றதொரு பிரச்சினையாகக் கருதப்படுவதில்லை. மனவழுத்தம், மனக்கோளாறு போன்ற நிலைமைகளை அனுபவிப்பவர்கள் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்களது நிலைமைக்காக குற்றம் சாட்ட படுகின்றமையானது, நோய்வாய்ப்பட்ட போது சமூக ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எனும்; நோக்கிற்கு முரணாக அமைகின்றது.

03. சகலரும் சுகாதார பராமரிப்பு சேவைகளை அணுகும் வாய்ப்பை கொண்டிருக்கின்றார்கள் எனக் கருதுகின்றமை
பார்சன் அவர்கள் சகலரும் மருத்துவரை நாடி சிகிச்சைகளை பெற இயலுமானதாக இருப்பர் என அனுமானிக்கின்றார். குறைவான வளங்கள் காணப்படும் இடங்களிலும், வறுமையில் இருப்பவர்களுக்கும் உரிய மருத்துவ வசதிகளை நாடி பெறுவது சாத்தியமற்றதாக காணப்படலாம்.

04. கலாச்சார வேற்றுமைகளையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கருத்திலெடுக்காமை
பார்சன் அவர்கள் மேலைத்தேய, மத்திய வர்க்கத்தினரை அடிப்படையாகக் கொண்டு தனது கோட்பாட்டை முன்வைத்துள்ளார். எனவே, நோய்வாய்ப்பட்ட போதான நடத்தைகளில் கலாச்சாரம், வர்க்க நிலை, பாலினம் என்பன ஏற்படுத்தும் தாக்கங்கள் கருத்திலெடுக்க தவறிவிட்டார். இதன் காரணமாக பார்சனின் மாதிரியானது, நோயாளர்களைத் தனிப்பட்ட எதிர்வினைகளையும், பிரத்தியேமான பின்னணிகளையும் கொண்டவர்களாக அணுகாமல், வெறுமனே பராமரிப்பை மட்டும் பெறும் நிலையிலிருப்பவர்களாகக் கருதுவதாக அமைவது பாதகமான அம்சமாகும்.

இலங்கை சூழலில் எதிர்கொள்ளும் சவால்கள்
01. பாலினம் சார் கலாச்சார நிர்ப்பந்தங்கள்
இலங்கை சமூகங்களில் பெண்கள் மீதிருக்கும் கலாச்சார ரீதியிலான அழுத்தங்களும், சுமத்தப்பட்டுள்ள கடமைகளும் காரணமாக அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்தாலும், அக்கடமைகளிலிருந்து விடுப்பு பெறும் வாய்ப்பை பெறுவதில்லை. அநேகமான சந்தர்ப்பங்களில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தாலும் கூட தங்களது வீட்டு பராமரிப்பு பணிகளைத் தொடர்கின்றார்கள்.

02. மனநல பிரச்சினைகள் சமூக இழிவாக நோக்கப்படல்
மனச்சோர்வு அல்லது மனப்பதற்றம்; போன்ற நிலைமைகள் பெரும்பாலும் முறையான நோய்களாக அங்கீகரிக்கப்படுவதில்லை. இவ்வாறான நிலைமைகளின் சமூகத்தால் அவமானப்படுத்தப்படல், அல்லது சமூகத்தை எதிர்கொள்ளத் தயக்கம் கொள்ளல் போன்ற காரணங்களால் சிகிச்சை பெறுவது தவிர்க்கின்றார்கள் அல்லது மதகுருமார்களிடம் தீர்வு தேடிச் செல்கின்றார்கள்.

03. பொருளாதார ரீதியான மட்டுப்பாடுகள்
முறைசாரா தொழில்களில் ஈடுபடுவார்கள், நாட் கூலித் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு, நோய்வாய்ப்பட்ட போது வேலையிலிருந்து விடுப்பு பெறவோ அல்லது மருத்துவ சேவையை நாடிச் செல்லவோ முடியாத நிலைமை ஏற்படலாம். இது ஓய்வெடுத்தல் மற்றும் உரிய நேரத்தில் மருத்துவ உதவியை நாடுதல் என பார்சனின் மாதிரி மூலம் நோயாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் விடயங்களைச் சாத்தியமற்றதாக்கி விடுகின்றது.

04. சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகுவதற்கான சமவாய்ப்பின்மை
பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் உரிய வகையில் மருத்துவமனை வசதிகளை அணுகுவதும், சிகிச்சைகளைப் பெறுவதும் இயலாததாக அமையலாம். எனவே, உண்மையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் கூட, மருத்துவரின் உறுதிப்படுத்தல் இன்மையால் சமூகத்தால் அவர்களின் நோய் நிலைமை ஏற்றுக் கொள்ளப்படாமல் தவிர்க்கப்படலாம்.

05. சமூகத்தால் பழி சொல்லப்படல்
மது தொடர்பான கல்லீரல் நோய் அல்லது காசநோய் போன்ற சந்தர்ப்பங்களில், நோயாளி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்காக அவர்களே குற்றம் சாட்டப்படுகின்றார்கள். எனவே, நோயாளர்கள் இங்கு சமூக ஆதரவைப் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். இது ‘நோயுற்ற போதான வினையாற்றல்’ மாதிரி கூறும், நோயுற்ற நிலைமைக்குத் தனிநபர்கள் பொறுப்பாக மாட்டார்கள் எனும் கருத்தாக்கத்துக்கு முரண்பாடானதாகும்.

முடிவுரை
மனிதர்கள் நோய்வாய்ப்படும் போது அதனை சமூகங்கள் எவ்வாறு கையாண்டு சமூக ஒழுங்கை பராமரிக்கின்றன என்பதைப் விள்ங்கபடுத்துவதில் டால்காட் பார்சன்ஸின் முன்வைத்த;த ‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல் (Sick Role)’ எனும் கோட்பாடானது பயன்மிக்கதாக காணப்படுகின்றது. இதன் மூலம் நோய் நிலை என்பது; வெறும் உயிரியல் சார்ந்த விடயம் மாத்திரமல்ல, அது சமூக பரிமாணம் கொண்ட நிலையாகவும் காணப்படுகின்றது என்பது எடுத்துக் காட்டப்படுகின்றது. எனினும், இக் கோட்பாடு அதன் அனுமானங்களிலும் நடைமுறை பொருத்தப்பாட்டிலும் வரம்புகளைக் கொண்டதாகவே உள்ளது. குறிப்பாக இலங்கை போன்ற பன்மைத்துவ சமூகங்களில், நோய்கால நடத்தையானது பொருளாதார நிலைமைகள், கலாச்சார நம்பிக்கைகள், பாலினம் சார்ந்த நெறிமுறைகள், சிடிக்மா என்பவற்றின் செல்வாக்கிற்கும், தாக்கத்திற்கும் உட்பட்டதாகக் காணப்படுகின்றது. எனவே, ஆரோக்கியம் மற்றும் நோய் நிலையின் சிக்கல் தன்மையைச் சரியாகப் பிரதிபலிக்கும் வகையில், ‘நோய்வாய்ப்பட்ட போதான வினையாற்றல் (Sick Role)’ மாதிரியானது, ஏனைய சமூகவியல் கண்ணோட்டங்களுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுவதோ அல்லது விமர்சன ரீதியாக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதோ அவசியமானதாகின்றது.


Post Top Ad

My Instagram