Post Top Ad

தமிழ் புத்தாண்டு தை மாதமா? சித்திரை மாதமா?



மலரும்  வள்ளுர் ஆண்டு  2044  உயர்வாகை வருட பிறப்பையும்   உழவர் திருநாளையும்  உலக  தமிழர்கள் கொண்டாடும்,  கொண்டாட வேண்டிய சம வேளையில் தமிழரின் இவ் தேசிய விழாவை ஒரு மத விழாவாக கொண்டாடும் கைங்கரியம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருகிறது. ஓருபக்கம் கலாசாரம் சீரழிகிறது என்று கொக்கரித்துக் கொண்டே மறுபுறம் மரபுகளுக்கு மரணச்சடங்கு நடத்திக் கொண்டிருக்கின்றோம். தமிழரின் இவ் தேசிய விழாவை இந்து மதத்தை பின்பற்றும் தமிழர்கள் இந்து மதத்துக்குரிய பொங்கல் 

விழாவாகவாக கொண்டாடும் அதேவேளை இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை பின்பற்றும் தமிழர்கள் கொண்டாடுவதை தவிர்த்தும் வருகின்றனர்.இந்துக்கள் தமது புதுவருட பிறப்பை ஆரியரின் முறைப்படி சித்திரை முதலாம் திகதியும் முஸ்லிம்கள் அரபு முறைப்படியும், கிறிஸ்தவர்கள் ஆங்கில முறைப்படியும் கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் தமது வழக்கங்களை துறந்து இவ்வாறு மதத்திற்கு தமிழின் பாரம்பரியத்தை விற்பது கவலைக்குரியதே.

பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல. உண்மையில் இது சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும். மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட 'கதை' ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல. அது வான் சார்ந்து, மண் சார்ந்து முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்;.
இந்து மதம் சித்திரை புத்தாண்டு தொடர்பாக ஒரு புராண கதையை சொல்கிறது. புராண காலத்தில் நாரத முனிவருக்கு காம இச்சை ஏற்பட்டதாம் அந்த இச்சை தாங்காமல் கிருஷ்னரோடு உறவு வைத்துக்கொண்டாராம் .அதன் மூலம் அறுபது ஆண் குழந்தைகள் பெற்றேடுத்தாராம். பிரபவ முதல் அட்சய என பெயர் இடப்பட்ட அந்த அறுபது ஆண் குழந்தைகளின் பெயர்களால் தான் ஆண்டுகள் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான புராணகதையை பின்னணியாக வைத்து தான் சித்திரை புத்தாண்டு கொண்டாடபடுகிறது. இந்த கதையை சொல்லியா எம் தமிழ் குழந்தைகளை வளர்ப்பது? இது அறிவியலுக்கு பொருந்துமா? இல்லை எம் மரபிற்கு தான் பொருந்துமா?.இப்படியாக இந்து மதத்திற்காய் எம் இன பெருமைகளை புறக்கனித்திடலமா?
"மூவகைக் காலமும் நெறியினாற்றும்" என்று தொல்காப்பியர் கூறி இருக்கும் 'அறிவர்கள்' என்று அழைக்கப்பட்ட சுயமரியாதையை தன்னகத்தே கொண்டிருந்த தமிழ் வானியல் அறிஞர்கள் தமிழரின் நாட் காட்டியை தெளிவாக வகுத்து வைத்துள்ளார்கள். தமிழரின் நாட்காட்டியை 60 வருடங்களை கொண்ட காலச்சக்கரமாக பெயரிட்டுள்ளார்கள் அதன் படி மலரும் வருடம் நந்தன வருடம் என்று பெயரிடப்பட்டிருகிறது. இதைவிட ஒவ்வொரு வருடமும் இளவேனில்,முதுவேனில்,கார,கூதிர்,முன்பனி,பின்பனி என 6 பருவங்களாக வகுக்கப்பட்டது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். 'வைகறை,காலை,நண்பகல், ஏற்பாடு,மாலை,யாமம்' என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வைஇ தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சுரியர்களும் என பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

 "
பொங்கல்" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?
பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய் முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள்,கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும் தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.
'சு+ரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சு+ரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா'-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல். வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது.
அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் 'காணும் பொங்கல்' என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும், புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட, தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன.
இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.
தை 1ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 1ம் நாளில்  'FONKARA - FONKARA'  - என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.
தை 2ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.
பருப்புத் தவிடு பொங்க - பொங்க அரிசித் தவிடு பொங்க - பொங்க -என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் 'பொங்க-பொங்க' என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில்'HONGA-HONGA'   என்றே பாடுகிறார்கள்.
இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான். ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.
எனவே தமிழர்களிடையே தொன்று தொட்டு வராது ஆரியர்களால் திணிக்கப்பட்ட சித்திரை வருடபிறப்பை புது வருடம் என கொண்டாடுவதை தவிர்க்க வேண்டியதும் எம் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம் ஆகும்.இன்று எம் தமிழ் பற்றாளர்கள் கனியும் அவசரத்தில் வெம்பிடும் இளவயது கர்ப்பங்களை மரபு மீறல் என்று கொதிக்கிறார்கள். இதை விட பெரிய மீறல்களை இந்து மதத்திடம் நாம் தாரைவார்துக்கொண்டிருக்கின்றம்  . இந்த மரபு மீறல்கள் நடந்திருக்காவிட்டால்  வெம்பி பழுத்தல்கள் நடந்திருக்காது. மரபையும் பராம்பரியத்தையும் தொலைத்துவிட்டு மரபை எங்கு தேடுவது?    

Post Top Ad

My Instagram