Post Top Ad

சூரியனின் உதவும் கரங்கள்


ஸ்ரீலங்காவின் முன்னனி தனியார்  வனொலி சேவையாகிய சூரியன் வானொலி  'உதவும் கரங்கள்" என்ற பெயரில் ஒரு சமூக நலன்புரி  சேவையை நடத்துகின்றன. ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் மனங்களை கொள்ளைக்கொண்ட வனொலியான சூரியன் அப்படி ஒரு சமூக அக்கறையை வெளிக்காட்டி அந்த ஆகாய சூரியன்  போல் பிரகாசிக்க ஆரம்பத்துள்ளது. சிறுவர்  இல்ல சிறார்களுக்கு நத்தார்  தினத்திலே அவர்களுக்கு தேவையான பொருட்களை தன் சொந்தங்களான நேயர்களிடமிருந்து சேகரித்து  பரிசளித்திருந்தது. எத்தனை பெரிய  மனித நேயம். 

இப்படி தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பந்தியை வாசிக்க ஆரம்பித்தவூடனே அர்ச்சிக்க ஆரம்பித்திருப்பீர்கள். இந்த கட்டுரையின் இறுதிவரை என்னை அர்ச்சிக்கும் வாய்ப்பிருக்கின்றது. அர்ச்சிப்புகளுடன் வாசியுங்கள்.அப்படி என்ன சூரியன்  வனொலிக்கு மட்டும் மிக பொய் சமூக அக்கறை. அது என்ன ஒவ்வொரு மார்கழி மாதமும் சிறார்களின் மீது பாச மழை. நீங்கள் சொல்வது புரிகிறது. 'சமூக அக்கறை". சமூகக்கல்வி மற்றும் வணிகக்கல்வி பாடங்களில் கற்று கொடுத்திருக்கின்றாHகள். வியாபார நிறுவனங்களுக்கு சமூக அக்கறை வேண்டும். ஏன் வேண்டும்.
எப்படியூம் இந்த தீபாவளிக்கு வெளியாகிய விக்ரம் நடித்த 'தாண்டவவம்" திரைபடத்தை பார்த்திருப்பீர்கள். அந்த திரைப்படத்தில் சாரா விநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  ஏமி ஜாக்சன் லண்டன் நகர அழகியாக தெரிவு செய்யபடுவார். அடுத்த கணமே அவரை ஒரு விளம்பர நிறுவனம் தன் நிறுவனம் தயாரிக்கும் விளம்பரங்களில் நடிக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துக்கொள்ளும்இ அதை விட அவரை உலக அழகி போட்டியில் வெற்றி பெற செய்து இன்னும் அதிகமாக காசு பார்த்து விட வேண்டும் என அவர்கள் திட்டம் தீட்டுகின்றார்கள். உலக அழகி போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்றால் வெறும் உடலழகு மட்டும் போதாது, சமூக அக்கறையை வெளிக்காட்டி சமூக நன்மதிப்பையும் பெறவேண்டும். அதற்காக சமூக சேவை செய்வது போல் சில காட்சிகளை போலியாக படம் பிடிப்பது போல் 'தாண்டவம்" திரைபடத்திலே காட்டியிருப்பார்கள். சரி அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? இருக்கின்றது.
அதே சமூக நன்மதிப்பு என்றதை இலக்காக கொண்ட வியாபார சமூக அக்கறை தான் சூரியனின் 'உதவும் கரங்கள்" என்ற நாடகமும்.  சூரியன் வானொலியை அதிகமானவர்கள் கேட்க வேண்டும். அப்போது தான் அதிக விளம்பரமும், அதிக வருமானமும் கிடைக்கும் அப்போது தான் தன் கருத்தியலை சமூகத்தினுள் ஆழமாக பரவிட செய்யலாம். கிட்டதட்ட 9 தனியார் மற்றும் அரச வானொலிச் சேவைகள் இயக்கபடும் சூழலில் இதையெல்லாம் செய்து  மக்களை ஏமாற்றி தான் ஆக வேண்டும். 
உங்கள் வானொலி, உங்கள் குடும்ப வானொலி, நீங்கள் எல்லாம் சூரிய சொந்தங்கள் என்றெல்லாம் உங்களை சொந்தம் கொண்டாடுகிறதே அந்த சூரியன் வானொலி உண்மையில் யாருக்கு சொந்தமானது? Asian Broadcasting(pvt) ltd. என்ற ஆசிய ஒலிபரப்பு கூட்டுதாபன நிறுவனத்திற்கு சொந்தமானது. இதே நிறுவனம் தான் Hiru,Gold,Sun ஆகிய வானொலி சேவைகளையூம் ஹிரு தொலைகாட்சியையும் நடாத்துகின்றது. இவ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரெய்னோ சில்வா. இவர் தான் உரிமையாளரும் கூட. இவர் வேறு யாருமல்ல பாரதலக்ஸ்மன்  கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஒரு வருடத்திற்கும் மேலாக சிங்கபூர், மருத்துவமனையில் கோமா நிலையிலிருப்பதாக கூறப்படும் பாராளுமன்ற உறுபினர் துமிந்த சில்வாவின் சகோதரர். சூரியன் வானொலியில் துமிந்த சில்வாவின், 'துமிந்த சில்வா  மன்றம்"; கொப்பி புத்தகம் கொடுத்த சில்லறை செய்திகளெல்லாம், நான்கு வேளை செய்திகளையும், மணித்தியாளச் செய்திகளையும் ஆக்கிரமித்திருந்தமையும் துமிந்த சில்வா துதிபாடும் பாடலொன்று தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டதும் நினைவிற்கு வரும் என்று நம்புகின்றேன். இவர் மேல் மாகாண சபை உறுபினராக இருந்த போது 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சாட்டபட்டவர். சிறுமியை பலாத்காரம் செய்தவன் புகழை நன்கு தெரிந்து கொண்டே பாடிய பாவத்தை துடைப்பதற்காக தான் சிறார்களுக்கு உதவும், 'உதவும்கரங்களோ' தெரியவில்லை.



சூரியன் வானொலி   தடைக்கு ஆளாகியிருந்தமையூம் பின் தடை நீக்கப்பட்டமையும் அனைவரும் அறிந்ததே. ஒரு நாள் சூரியன் செய்தியில் அம்பாந்தோட்டை மாவட்ட பகுதியில் 5 பேர் ஆயூததாரிகளினால் கொலை செய்யப்பட்டதாக செய்தி ஒலி   பரப்பப்பட்டது. அப்படி ஏதும் நடக்கவில்லை என அரசாங்கமும்  அதன் ஊடகங்களும் முந்திக்கொண்டு செய்திவெளியிட்டன. ஆனால் மறுதினம் உண்மையாக 5 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. என்ன நடக்கிறது என்று எல்லோரும் குழம்பிய வேளை சூரியன் வானொலி அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது. அப்போது துமிந்த சில்வா ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுபினராகவிருந்தார். நீதிமன்றங்கள் பல ஏறியிறங்கியும் நீதி கிடைக்கவில்லை. தடை நீக்கப்படவில்லை. இறுதியாக துமிந்த சில்வா ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பக்கம் செல்கிறார், அதனுடன் தடையும் நீக்கப்பட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது. இப்படி பின்னனியாக கொண்டவர்களிடம் எப்படி உண்மையாக சமூக அக்கறையை எதிர்பார்க்க முடியும்???



சூரியன் அலர்ட்  என்று இலவசமாக குறுஞ்செய்தி மூலம் முக்கிய செய்திகளை அறியதரும் சேவை ஒன்றை நடத்துகின்றது சூரியன் வானொலி.   நாட்டில் எங்கேனும் கொலை செய்யப்பட்டால், எங்கேனும் பேருந்து கவிழ்ந்தால், சச்சின்  சதமடித்தால் உடனுக்குடன் குறுஞ்செய்தி அனுப்பி எம்மையெல்லாம் பக்கசார்பின்றி  தெளிவுபடுத்துபவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் மாணவிகளையும்   ஸ்ரீலங்கா இராணுவம் தெருக்களில் ஒடஒட அடித்ததையும் மாணவர்களை பொய் குற்றசாட்டுகளின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதையும் தெளிவாக இருட்டடிப்பு செய்கிறார்கள். இருட்டடிப்பு செய்யாமால், என்ன செய்வாHகள். அரசாங்கத்திற்கு எதிரல்லாத தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் ஊடகதர்மத்தையும் நடுநிலையையும் கொண்ட கொள்கையாய் கொள்வோம் என்று தடைதகர்த்து வந்தவர்களலல்லவா. 



சொந்தங்கள் சொந்தங்கள் என்று பாச மழைபொழிகிறார்களே அந்த சொந்தங்கள் மீது குண்டு மழை பொழிந்த போது 'போட்டு தாக்கு போட்டு.." தாக்கு என்று பாடல் போட்டுக்கொண்டிருந்தார்களே, அப்போது இந்த சமூக அக்கறையும் மனிதநேயமும் சிங்பூர் வைத்தியசாலையில் கோமாவிலிருந்ததா? ஆம்.ஆனால், சிங்கபூர் வைத்தியசாலையில் அல்ல சூரியன் வனொலியின் உரிமையாளரான ரெய்னோ சில்வாவின் சகோதரரான பாராளுமன்ற உறுபினர் துமிந்த சில்வாவின்  நலன்களில். இது மக்களின் வானொலியா? என்று நீங்களே தீர்மானியுங்கள். மக்களுக்காக மக்களின் குரலாக இயங்காத வானொலியின் சமூக அக்கறை சந்தர்ப்பவாதமிக்கதாகவும், போலிதனமானதாகவும் இல்லாமல் வேறெப்படியிருக்கும்?  



சூரியன் வானொலியில் வேலை செய்பவர்களை அவமானப்படுத்துவது எமது நோக்கமல்ல. அவர்கள் சம்பளத்திற்காக வேலை பார்ப்பவர்கள். சொன்னதை மட்டும் செய்வது தான் அவர்ளுக்கு இடப்பட்ட பணி. அவர்களிடம் திறமை இருக்கிறது. எந்த ஊடகத்திலும் வேலை செய்து கொள்வார்கள்.  ஆனால் சமூகம் ஊனமாக்கப்பட்டால் என்னாவது? உண்மையான மக்கள் வானொலியாக, சமூக அக்கறை கொண்ட வானொலியாக இருந்தால் போலித்தனங்களை கைவிட வேண்டும். நத்தார் தினத்தில் பொருள் சேர்த்து கொடுப்பதா ஒரு ஊடகத்தின் சமூக பணி? நாட்டில் ஏன் சிறார்கள் இப்படியானார்கள் என்ற சமூக காரணியை ஆராய்ந்து அதை மக்களிடம் கொண்டு சேHப்பது தானே சமூக பணி. BBC யிடமாவது இதை கற்றுக் கொள்ளளாமல்லவா? இல்லாவிட்டால் நாம் வெறும்  தென்னிந்திய சினிமா பாடல்களை ஒளிபரப்பி மக்களின் நேரங்களை போக்கடிக்கும் பொழுது போக்கு வானொலி என்ற உண்மையை உரக்க சொல்லிய பின் ஊருக்குள் ஊர் வலம் வரவேண்டும். ஊடகங்கள் ஒரு சமூகத்தின் போக்கை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. அந்த ஊடகங்களின் ஆதாரமே மக்கள் தான். ஆகவே ஊடகங்களை சரியான வழிக்கு கொண்டு வரவேண்டியதும் சரி வராதவர்களை சரித்துவிடுவதும் ஆதாரமாக இருக்கும் மக்கள் கைகளில் தான் இருக்கின்றது.

                                                                                                   

Post Top Ad

My Instagram