Post Top Ad

மகிந்தவின் ஊடக சுதந்திரம்

 - சில மாதங்களுக்கு முன் போராட்டம் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையின் முதல் பந்தி
'எப்படி இருக்கின்றீர்கள் லால்? நல்லது,நாங்கள் நேரடியாக விடயத்திற்கு வருவோம், லீடர் வெளியீட்டு நிறுவனத்தின் விலை என்ன? நாங்கள் பேரத்தை 400 மில்லியனோடு முடித்து விடுவோமா?' 
இடம் அலரிமாளிகை. விலை நிர்ணயத்தவர் வேறு யாருமல்ல, அதிபராக்கிரம சர்வவல்லமை பொருந்திய மேன்மைதங்கிய சனாதிபதி சர்வாதிகாரி மகிந்த ராசபக்ச. சர்வதிகாரத்தையும் தன்னிடம் கொண்டிருக்கும் ஒருவர் யாருடன், எதற்காக பேரம் பேசுகின்றார் என்று அறிய ஆவலாய் இருக்கின்றதல்லவா?. மகிந்தவை தொடர்ச்சியாக அம்பலபடுத்திய லீடர் வெளியீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் லால் விக்ரமதுங்கவுடனேயே இப்பேரம் பேசல் நடைபெற்றது. இப் பேரம் பேசல்
நடப்பதற்கு சற்று முன் ஊடகதுறை பிரதியமைச்சர் பைசர் முத்தப்பாவிற்கு சர்வாதிகார சனாதிபதி மகிந்த, லால் விக்ரமதுங்கவை அழைத்து வரும்படி பணிப்புரை விடுத்தார். லாலை தொலைபேசியில் அழைத்து செய்தி ஒன்றை பிரசுரிக்க லீடர் நிறுவனத்திற்கு வரவேண்டி இருப்பதாக தெரிவித்தார் பைசர். உறுதியளித்தப்படி வந்த பைசர்  காத்திருந்த லாலிடம் வாகனத்தில் பிரயாணித்தவாறு கதைக்கலாம் எனக்கூறினார். வாகனத்தில் ஏறிய லால் சனாதிபதியின் முன் அழைத்து வரப்பட்டார். லால் ஒன்றும் கதைக்கவில்லை. சனாதிபதி பேரம் பேசினார். லால் ஒத்து வரவில்லை. இது நடந்தது போர் தீவிரம் அடைவதற்கு முன்பு. லீடர் நிறுவனத்தின் சண்டே லீடர் பத்திரிக்கை மகிந்தவின் அட்டூழியங்களையும், ஒரளவிற்கு தமிழ் மக்களின் நியாயங்களையும் அம்பலபடுத்திய முதலாளித்துவ பத்திரிகையாகும்.சில காலம் கழித்து சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். தொடர் அழுத்தங்கள் மூலம் லீடர் நிறுவனம் ஒரளவிற்கு அடிபணிய வைக்கப்பட்டது. இதன் காரணமாக தான் சரத் பொன்சேகாவின் வெள்ளை கொடி விவகாரத்தை எழுதிய பெட்ரிகா பீரியிச் சண்டே லீடரிலிருந்து விலக்கப்பட்டார். அண்மையில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் நடந்த ஊழலை வெளிகொண்டு வந்த சண்டே லீடரின் ஊடகவியளாளர் சவுக்கார் பரான் அலி சுடப்பட்டார். மகிந்த சிந்தனையின் ஊடகசுதந்திரம் இந்த நிலையில் தான் இருக்கின்றது.தனக்கு எதிரான ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி விலைக்கு வாங்குதல், ஊடகவியளார்களை அச்சுறுத்துதல், அடிபணியாதவர்களை கொலை செய்தல் என்பன இலங்கையின் கலாசாரமாகிவிட்டன. மகிந்த மாதந்தோறும் ஊடகவியலாளர்களுக்கு அலரிமாளிகையில் வழங்கும் விருந்துபசாரத்திற்கு நன்றிகடன் செலுத்தாத அனைவருக்கும் இதே நிலை தான்.

Post Top Ad

My Instagram