Post Top Ad

மத்திய மாகாண சபை தேர்தலும் தமிழர்களும்

1985 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக இந்திய வம்சாவழியினரின் பிரசா உரிமைப் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால், இதுகாலமும் நான் கடைப்பிடித்து வந்த கொள்கைகளும், என் தலைமைத்துவமும் தோல்வியடைந்து விட்டன என்றே கருதப்பட வேண்டும். எனவே நான் தலைமைப் பதவியிலிருந்து விலகி, என்னை விட அதிக உத்வேகமும் திறமையும் வாய்ந்த ஒரு தலைமைத்துவத்துக்கு இடமளிக்கப் பின் நிற்க மாட்டேன்' இப்படி கூறியவர் வேறு யாருமல்ல
இந்திய வம்சாவழியினர் என்று அடையாளப்படுத்தப்பட்ட மலையக பகுதி வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கி 1947 ஆம் தேர்தலில் நுவரேலியா தொகுதியில் போட்டியிட்டு பாரளுமன்றத்திற்கு அம்மக்களின் பிரதிநிதியாக சென்ற அமரர் சௌமீய மூர்த்தி தொண்டமான் ஆவார்.  அவர் குறிப்பிட்ட பிரசா உரிமை பிரச்சினை தீர்க்கப்பட்டது என்னவோ உண்மைதான் ஆனால் ஒரு பிரசைக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதைக் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள் மலையக தமிழர்கள். அப்படியான நிலையிலிருக்கும் மலையக தமிழர்கள் பெருமளவில் வாழும் மத்திய மாகாணத்தில் மேலுமொரு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அன்று தொண்டமானுக்கு இருந்த நேர்மையிலும் பற்றிலும் தாரளமயவாத சமூகத்தில் வெகுதூரம் முன்னேறிவிட்ட இன்றைய தலைமைகளிடம் கடுகளவும் இல்லை. எத்தனை கேவலமாக நடத்தப்பட்டாலும் தன் சுயநலன்களிற்காக பதவிகளை பயன்படுத்தி மக்களை அவமானப்படுத்தி கொண்டிருக்கும் தலைமைகள் கைக்காட்டிய வேட்பாளர்களுக்கு மீண்டுமொரு முறை மக்கள் புள்ளடி இட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. 
மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நுவரெலியாவிலேயே அதிகளவான தமிழர்கள் வசிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இந்திய தமிழர் என்று அடையாளப்படுத்தப்பட்ட தமிழர்கள் நுவரெலியா மாவட்டத்தில் 375795 பேரும் கண்டி மாவட்டத்தில் 83,234 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 23,400 பேரும் வசிக்கின்றனர். இவர்களை விட இலங்கை தமிழர் என அடையாளப்படுத்தப்பட்ட தமிழர்கள் நுவரெலியா மாவட்டத்தில் 31,867 பேரும் கண்டி மாவட்டத்தில் 71,640 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 24,756 பேரும் வசிக்கின்றனர். இவர்களை விட இசுலாமிய தமிழர்கள் நுவரெலியா மாவட்டத்தில் 17,422 பேரும் கண்டி மாவட்டத்தில் 1,91,159 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 44,113 பேரும் வசிக்கின்றனர். இதன் படி பார்த்தோமானால் நுவரெலியா மாவட்டத்தில் 425081 பேர், கண்டி மாவட்டத்தில் 346033 பேர், மாத்தளை மாவட்டத்தில் 93 269 பேர் என மொத்தமாக 863383 சிறுபான்மை இனத்தை சேர்ந்த தமிழர்கள் வசிக்கின்றனர். இதன் படி மத்திய மாகாணத்தில் 35 சதவீதமான சிறுபானமை தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்றார்கள். 
நடைமுறையிலிருக்கும் விகிதாசார தேர்தல் முறைப்படி பார்த்தோமேயானால் 56 ஆசனங்களில் 20 ஆசனங்கள் சிறுபான்மை தமிழர்களிற்கு கிடைக்க வேண்டும். இம்முறை தேர்தல் முடிவுகள் படி நுவரெலியாவில் 11 பேர் கண்டியில் 5 பேர் மாத்தளையில் ஒருவர் என மொத்தம் 17 சிறுபான்மையினர் தெரிவாகியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு தேசிய பட்டியலில் ஒரு ஆசனமும் வழங்கப்படவிருக்கிறது. ஒட்டு மொத்தமாக பார்த்தோமானால் தமிழர்கள் தமிழர்களுக்கே வாக்களித்துள்ளனர். வடமாகாணசபையை போலவே இங்கும் கொள்கைகளையோ அபிவிருத்தி நடவடிக்கைகளையோ ஆதரித்து வாக்களிக்கவில்லை. ஆங்காங்கே பிரிந்து நின்று கூட்டுசேர்ந்து நின்றவர்களில் தன்னை கவர்ந்த தனக்கு தெரிந்த தன் இனத்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். இலசங்கள் அள்ளி வழங்கப்பட்டமை தாக்கம் செலுத்தினாலும் தன் மொழி பேசும் வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். பொதுவாக மலையக பகுதி தமிழர்கள் கல்வியில் பின்நிற்பதினை கருத்திற்கொண்டு அவர்கள் அரசியல் ரீதியான அறிவற்றவர்கள் என்று கூறப்பட்டு வந்தது. அரசியல் அறிவு என்பது அந்த மக்கள் அரசியல் உரிமை;க்காக நடத்தும் போராட்டத்தின் மூலம் கிடைப்பதே ஒழிய ஏட்டுக்கல்வியினால் கிடைப்பதில்லை. வட பகுதி தமிழர்களை பொறுத்த வரை நீண்டதொரு போராட்ட சூழல் அவர்களுக்கு ஓரளவு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மலையகத்தில் தலைமைகள் மக்களின் போராட்ட உணர்வுகளை விலைபேசி விற்று அரசியல் அறிவார்ந்த வெற்றிடத்தை உருவாக்கி அதில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படியிருந்தும் மலையக மக்கள் தன் இனத்துவ அடையாளங்களை காப்பதில் தமக்கிருக்கும் அபிலாசைகளை வெளிபடுத்தியுள்ளனர். குறிப்பாக கண்டியில், மாத்தளையில் தமிழ் மக்களுக்கு அதிகமான சேவைகளை பெரும்பான்மை இன கட்சிகள் வழங்கியிருந்தும் ஒரு போது அவர்களிடம் சென்றிராத தமிழ் கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இசுலாமிய தமிழர்கள் அரசாங்க கட்சியை முற்றாக புறகனித்துள்ளதோடு தனக்காக குரல் எழுப்பியவர்களுக்கு வாக்களித்துள்ளனர்.
இவை அனைத்தும் மக்கள் தன் இனத்துவ அடையாளம் சார் உரிமைகளை காப்பதில் கொண்டிருக்கும் அபிலாசைகளை வெளிபடுத்தியிருப்பதோடு தங்கள் மீதான இன அடையாளம் சார் அழுத்தங்களிற்கான எதிர்வினைகளையும் புரிந்துள்ளனர். மக்கள் என்ன தான் அபிலாசைகளை வெளிப்படுத்தினாலும் வெற்றிபெற்றவர்கள் இனி மக்களை மறந்து விட்டு தன் நலன்களிற்காக தான் செயற்படப்போகின்றார்கள். தனித்துவம் தன்மானம் பேசியர்வர்கள் அப்படியென்றால் என்ன என்று கேட்க போகின்றார்கள். காலம் காலமாக ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் சிறுபான்மை தமழ் மக்கள் அதற்கான விடையின்றி தனக்குள்ளே புழுங்கி கொண்டு அமைதியாக இருக்க போகின்றார்கள். என்ன தான் ஏமாற்றம் கிடைத்தாலும் அடுத்த தேர்தலில் ஏதேனும் நடந்துவிடாதா என்ற நப்பாசையில் வாக்களிக்க போகின்றார்கள். மக்கள் நலன் சார்ந்த புரட்சிகர சக்திகள் எழுச்சியுற்று தலைமை வழங்க முன் வரும் வரை இந்த நிலை தொடர தான் போகின்றது. இத்தகைய தலைமைத்துவத்தினை வழங்க கூடிய இடதுசாரிகளின் நிலையோ பரிதாபத்திற்குரியதாகவே காணப்படுகின்றது. இந்த தேர்தலில் ஜக்கிய சோசலிச கட்சி 523 வாக்குகளையும் இடது முன்னணி சோசலிச முனனணி 726 வாக்குகளையும் பெற்றுள்ளது. இதேவேளை 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இடது முன்னனி,; ஜக்கிய சோசலிச கட்சி, சோசலிச சமத்துவ கட்சி என்பன முறையே 178, 1234, 98 வாக்குகளை பெற்றன. மக்கள் விடுதலை முன்னனி (சோசலிசத்திற்கு விரோதமான கொள்கையில் தலைமைத்துவம் சென்றாலும் வாக்களித்தவர்கள் பிழையாக வழிநடத்தப்படும் இடதுசாரி கொள்கை உடையவர்கள் என்றே கருதுகின்றோம்.) கடந்த தேர்தலில் 15, 416 வாக்குகளையும் இம்முறை 13887 வாக்குகளையும் பெற்றுள்ளன. மொத்தமாக இடதுசாரிகள் கடந்த முறை தேர்தலில் 1.55 சதவீத வாக்குகளையும் இம்முறைத் தேர்தலில் 1.27 சதவீத வாக்குகளையும் பெற்றுள்னர். குறைந்தளவிலேனும் நிரந்தர புரட்சிகர ஆதரவு தளம் இடதுசாரிகளுக்கு இருந்தும் இவர்களை சரியாக வழிநடத்தி மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க கூடிய தலைமைகள் இல்லாத காரணத்தினால் புரட்சிகர சக்திகளின் எழுச்சி என்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. சரியான தலைமைத்துவம் சரியான வழியில் மக்களை வழிநடத்தி மக்கள் போராட்டங்கள் முன்னெடுத்து மக்களை அணித்திரட்டாத வரை செக்கிலுக்கும் மாடுகளாகவே மக்கள் வாழ்வார்கள்.

Post Top Ad

My Instagram