Post Top Ad

தேர்தலில் ஜேவிபி தோற்றுவிட்டதா...?

மாகாணசபை தேர்தல்கள் முடிந்து தற்போது ஆரவாரங்கள் முடிந்து விட்டன. நிறைய பேர் விமர்சனங்களை எழுதியிருந்தார்கள். குறிப்பாக முகபுத்தகத்தில் பலர் எழுதி தள்ளியிருந்தார்கள். எல்லா இடங்களிலும் உண்மையை கண்டறியும் ஆழமான பார்வை இழையோடியிருக்கவில்லை. ஒரு வேளை களஅனுபவங்கள் ஆய்வுகள் கற்றல் எதுவுமல்லாது தற்போதைய செல்நெறியில் அகப்பட்டு எழுத முற்பட்டமை காரணமாக இருக்கலாம்.

இதில் எல்லா இடங்களிலும் சொல்லப்பட்ட விடயம் ஜேவிபி எழ முடியாத படு குழிக்குள் விழுந்து விட்டது
என்பதாகும். உண்மையில் அப்படி எதுவும் நிகழவில்லை. ஜேவிபின் வாக்கு வங்கி சரியவில்லை. சில சில இடங்களில் சிறிய அளவில் வீழ்ச்சி இருக்கின்றதுதான். பாரியதொரு பிளவை சந்தித்த கட்சி அதன் வாக்கு வங்கியில் பாரிய தளம்பல்களை சந்திக்காமல் சிறிய சேதாரங்களுடன் களத்தில் நிற்பது முக்கியமான விடயமாகும். 2004 ம் ஆண்டு ஜேவிபி உறுப்பினர்கள் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டால் பாரிய வீழ்ச்சி போன்று தோன்றும். 

ஜேவிபியை பொறுத்தவரை அக்கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் அவர்களின் கொள்கையை ஏற்றுகொண்டவர்கள் விளங்கி கொண்டவர்களின் வாக்குகளாகும். இவற்றில் பெரும்பாலான வாக்குகள் கட்சி கமிட்டிகள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களின் உறவினர்களின் வாக்குகளாகும். உறவினர்களும் ஏதோ ஒரு வழியில் கொள்கை அடிப்படையில் கட்சியுடன் தொடர்புள்ளவர்களாகவே இருப்பார்கள். இந்த வாக்குகளே ஜேவிபிக்கு 94 ம் ஆண்டு முதல் கிடைத்துவருகின்றது. கட்சி போராட்டங்கள் மூலமும் கட்சிக்கு உறுப்பினர்களை திரட்டி கொள்ளும் வேலைத்திட்டங்கள் மூலமும் படிபடியாக வாக்கு எண்க்கையில் ஜேவிபி வளர்ச்சியை கண்டே வந்துள்ளது. 2004 ல் மகிந்தவுடன் கூட்டணி அமைத்த காலத்தில் அக்கட்சியின் உறுப்பினர்கள் பெருமளவு வாக்குகளை பெற்றதோடு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடினார்கள். உண்மையில் இந்த வாக்குகள் ஜேவிபிக்கு கிடைத்த வாக்குகள் இல்லை. இந்த வெற்றிக்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஜேவிபி யினர் கொள்கையை முன்னிறுத்தியே தேர்தலை சந்தித்து வந்தார்கள். ஆகவே அவர்களின் பிரச்சாரங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்தி நடத்தப்படுவதில்லை. பல சமயங்களில் வாக்காளர்கள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்று அறிவதேயில்லை. இலங்கை தேர்தல்கள் வேட்பாளர்களையும் அவர்களின் பிரச்சார பலத்தினையும் அடிப்படையாக கொண்டவை ஆகும். ஆக இந்த இடத்தில் கொள்கை ரீதியாக வாக்களித்து பழக்கப்படாத மக்களிடம் இருந்து தேர்தல்களில் கட்சி அந்நியமாகிவிடுகிறது. இதன்  காரணமாகவே மக்கள் மத்தியில் செல்வாக்கும் நன்மதிப்பும் இருந்தும் அக்கட்சியால் தேர்தல் வெற்றிகளை பெற முடியாதுள்ளது. இந்த நிலை 2004 தேர்தலில் மாறியிருந்தது. மகிந்தவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தேர்தல் பிரச்சாரங்களில் தமது கட்சி வேட்பாளர்களை அடையாள படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அத்துடன் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தத்துவார்த்த ரீதியில் முன்னேறியவர்களாகவும் வசீகரிக்கும் பேச்சாற்றல் கொண்டவர்களாகவும் தொழிற்சங்க போராட்டங்களிலும் ஏனைய போராட்டங்களிலும் அறியபட்டவர்களுமாய் இருந்தமையினால் மக்கள் அவர்களின் பால் ஈர்க்கப்பட்டார்கள். ஆகவே மகிந்தவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேர்தல்களில் மகிந்தவின் பிரபல வேட்பாளர்களை எல்லாம் பின் தள்ளி ஜேவிபியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 
அந்த காலகட்டத்தில் பெருக்கெடுத்து ஒடிய பேரினவாதமும் ஜேவிபியின் தேசியவாத நிலைபாடும் புலியெதிர்ப்பு கொள்கையும் அவர்களுக்கு வாக்குகளை அள்ளி  குவித்தது. ஆக மேற்குறித்த இரண்டு காரணங்களினால் கிடைத்த வாக்குகளே கட்சி 2004 பெற்ற வாக்குகள் ஆகும். அது மகிந்தவுடனான கூட்டணி முறிவுடன் மாறி போனது. அந்த வாக்குகளை மகிந்தவின் வேட்பாளர்கள் பெற்று கொண்டார்கள்.  உண்மையில் ஜேவிபியின் சோசலிச அரசியலுக்கு கிடைத்த வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை. பாரிய பிளவின் பின்னும் வாக்கு வங்கி தக்க வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மிக சிறிய அளவில் வீழ்ச்சி யிருந்தாலும், தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் தம்புள்ளை போன்ற இடங்களில் கிடைத்த வாக்குளின் எண்ணிக்கை அதிகரிப்பும் அவர்கள் நடத்திய தொழிற்சங்க நடவடிக்கைகளும் விலைவாசி உயர்வு மற்றும் ஏனைய போராட்டங்களும் அவர்களுக்கு கைகொடுத்துள்ளதை காணக்கூடியதாயுள்ளது. உண்மையில் கட்சியில் ஏற்பட்ட பாரிய பிளவு ஏற்படுத்தவிருந்த வாக்கு வீழ்ச்சியை இந்த வாக்குகளே இட்டு நிரப்பியிருந்தன. 

வாக்கு எண்ணிக்கையில் வீழ்ச்சி இல்லாவிட்டாலும் கட்சி நான்காவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சரத்பொன்சேகாவின் சனநாயக கட்சியின் வரவே இதற்கு காரணம். பொன்சேகாவிற்கு கிடைத்த வாக்குகளில் பெரும்பலானவை ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கியில் இருந்து பறித்தெடுக்கப்பட்டவையாகும். 
ஆகவே ஜேவிபி எல்லோரும் சொல்வதினை போல் தன் செல்வாக்கை இழந்துவிடவில்லை. ஐக்கிய தேசிய கட்சி இழந்த செல்வாக்கு பொன்சேகாவின் பக்கம் கரை ஒதுங்கியதால் ஜேவிபி நான்காவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஒரு 500 முகங்களும் அவர்களது வாரிசுகளுமே மாறி மாறி நாட்டை ஆண்டுவருகின்றார்கள். இந்த வட்டத்தினுள்ளேயே அதிகாரம் சுழன்று வருகிறது. இதனை மாற்றி ஜேவிபி தன் செல்வாக்கை தேர்தல் வெற்றிகளாக மாற்ற வேண்டுமாயின் தேர்களில் வேட்பாளர்களையும் தனிப்பட்ட பிரச்சாரங்களையும் முதன்மை படுத்த வேண்டும். அல்லது மக்கள் முகங்களுக்கு வாக்களிப்பவர்களாக இல்லாமல் கொள்கைக்கு வாக்களிப்பவர்பகளாக மாற வேண்டும்.

Post Top Ad

My Instagram