Post Top Ad

இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும்

பேருந்தில் தனியாக ஒரு பெண் சென்றாலே உரசி பார்க்கும் சமூகம் இது. இந்த சமூகத்தில், அதீதமான முறையில் ஆணாதிக்கமும் ஒடுக்கியாளும் மனனோபாவமும் நிலவும் இராணுவத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையை சமானியர்களால் அத்தனை இலகுவாக கற்பனை செய்திட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இராணுவத்தில் பெண்களுக்கு  மட்டுமல்ல ஆண்களுக்கும் இதே நிலை தான்.

சிறிலங்கா பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கெடற் பயிற்சிகள் கூட, தற்போது தமிழ் இணையத்தளங்களில் வெளியிடப்படும் காணொளியில் காண்பிக்கப்படுவதை விட கடினமானதாக
இருக்கும். கப்டன்களாக இருக்கும் உயர்தர வகுப்பு படிக்கும் அண்ணாமார்களுக்கு வணக்கம் சொல்ல சில நொடிகள் தாமதித்தாலும், மைதானத்தை சுற்றி 10 முறை ஒட வேண்டும். இல்லாவிட்டால் 10 அடிகள் பின்புறத்தில் விழும். 

இராணுவ பயிற்சிகள் என்பது இதை விட கொடுமையானவை. எதிரில் யார் எதற்காக நின்றாலும் சரி ஆயுதாரியோ நிராயுதபாணியோ கவலைபடாமல், சுடு என்று உத்தரவிட்டால் சுட வேண்டும். துப்பாக்கி ரவை தசையை துளைக்கும் போது தெறிக்கும் இரத்தத்தை கண்டு வெற்றி பிரமிதம் கொள்ள வேண்டும். சுடப்பட்டவனின் மரண கதறலை வாழ்த்து ஒலியாக ஏற்று மேலும் முன்னேற வேண்டும். அது வெலிவேரியாவில் தண்ணீர் கேட்ட சிங்களவராக இருந்தாலும் சரி வன்னியில் தனிநாடு கேட்பவராக இருந்தாலும் சரி....  இதற்கு தயார் படுத்த வேண்டும் என்றால் பயிற்கள் அதற்கேற்ற வகையில் தான் இருக்கும்.

இப்படியிருந்தும் இராணுவத்திற்கு ஆள்கிடைப்பது குறைவதில்லை. காரணம்... 13 வருட பாடசாலை கல்வி, 4 வருட பட்ட படிப்பின் பின் 2 வருடங்கள் பயிற்சி என்ற பெயரில் 8000 ரூபாவிற்கு நேர காலம் இல்லாமல் குப்பை கொட்டிய பின் கிடைப்பதை விட அதிகமாக குறைந்த கல்வி தகமையுடன் கிடைக்கும் சம்பளம். கல்வி தகைமை குறிக்கப்பட்டாலும்... அது வெறும் கண்துடைப்புக்கு தான் ... அதன் காரணமாக தான் அனுராதபுரம் குருணாகல் மற்றும் சிங்கள சமூகத்தின் கீழ் சாதியினர் என்று  குறிப்பிடப்படும் மக்கள் வாழும் கேகாலை ஆகிய பின்தங்கிய இடங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக இராணுவத்தில் இணைகின்றார்கள். 

சம்பளம் சலுகைக்கு அப்பால் இராணுவ பயிற்சி, கட்டுபாடுகள் ஏற்படுத்தும் விரக்தி தேசப்பற்றின் பெயரால் மூடி மறைக்கப்படும். ஒரு நாளும் படித்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியவர்களோ, பன்னாட்டு தனியார் தனியார் கம்பனிகளில் வேலைசெய்பவர்களோ இந்த இராணுவத்தில் இணைவதில்லை. சிப்பாய்களாக இணைபவர்கள் சமூகத்தில் அடித்தட்டை சேர்ந்தவர்கள்.

தமிழ் சமூகத்திலிருந்து இராணுவத்திற்கு சிலரை இணைத்து கொள்ள அரசு தீர்மானித்த போது, தேசப்பற்று எனும் ஏமாற்று தந்திரம் கைகொடுக்க வில்லை. ஏற்கனவே பொலிஸ் பயிற்சிக்கு இணைத்துகொள்ளப்பட்ட தமிழ் இளைஞர்கள் இடையிலேயே தப்பியோடி அவுஸ்திரேலியாவிற்கு படகேறிய  அனுபவங்கள் அரசிற்கு உண்டு. ஆகவே தான் பெண்களை இலக்கு வைத்தார்கள். இன்றை சூழலில் 30000 சம்பளம் என்பது வறுமையில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிர்பார்க்க முடியாததாகும். முன்பு இவர்களை இலக்கு வைத்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள் படையெடுத்து ஆசை காட்டி கணிசமானவர்களை சுதந்திரவர்த்தக வலயத்திற்கு அழைத்து சென்று விட்டன. 

பண்டிகை கால விடுமுறைகளின்  போது கொழும்பிலிருந்து பளை நோக்கி இரவு 8 மணிக்கு புறப்படும் புகை வண்டியில் பயணித்தீர்கள் என்றால், புறக்கோட்டையில் வாங்கிய ஆப்பிள் ஒரஞ் பழங்கள் தன் தம்பி தங்கையர்க்கு வாங்கி விளையாட்டு பொருட்களுடன் கையில் சீன தயாரிப்பு தொலைபேசி மற்றும் தளும்புகளுடன் பயணிக்கும் இவ்வாறான பெண்களை தாராளமாக காணலாம். ( இவர்கள் வாங்கி செல்லும் விளையாட்டு பொருட்களில் பிரதானமானது விளையாட்டு துப்பாக்கியாகும்). ஆசனம் பதிவு செய்து உறங்களிருக்கையில் பயணிப்பவர்களின் கண்களுக்கு இவர்கள் தென்படுவதில்லை.  

குடும்ப வாழ்வாதாரத்தை  இழந்து தொழில் வாய்ப்புக்கள் இன்றி இருக்கும் இப்பெண்கள் வேறு வழியின்றி இராணுவத்தில் இணைந்திருக்க வேண்டும். இதன் பின்னால் இராணுவத்தின் நிர்ப்பந்தமும் நிச்சயம் இருந்திருக்கும்.

உலகின் எந்த இராணுவமாக இருந்தாலும் சித்திரவதைகள் என்பது இல்லாது இருக்காது. சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் எண்ணிக்கை இதற்கு சாட்சி. பெண்களும் ஆண்களும் அதிக மன அழுத்தங்களுக்கும் பாலியல் சார் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பது எங்கும் நடப்பது தான். இப்படியிருக்கும் போது தான் இராணும் தமிழ் பெண்களை கொடுமை படுத்துகின்றது என்ற குற்றசாட்டு முன் வைக்கப்படுகிறது. இதற்கு சர்வதேச சமூகத்திடம் நீதியும் கோருகின்றார்கள்.

நீதி கோரப்படும், சர்வதேச சமூகத்திற்கஞ தலைமை அரசின் இராணுவம் என்ன செய்தது...? குவாட்டமாலா சிறைசாலையில் பெண்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்தது... குதவாயிலில் பிளாஸ்டிக் குழாயை நுழைத்து அதற்குள் முட்கம்பிகளை செலுத்தி பின் மிளாய் தூளையும் விட்டு குழாயை வெளியே எடுத்துவிடுவார்கள்... முட்டையை அவிய விட்டு யோனிக்குள் விட்டுவிடுவார்கள்.. வீட்டில் முட்டை அவித்திருந்தால் ஒடு உரிக்க படாத முட்டை எவ்வளவு சுடும் என்பதும் எவ்வளவு நேரம் சூடாக இருக்கும் என்றும் தெரிந்திருக்கும்... இப்படி கொடுமை படுத்திய அமெரிக்க அரசின் தலைமையிலான சர்வதேச சமூகம் கண்டுகொள்ளும் என்று எப்படி கணக்கு போடுகின்றார்களோ தெரியவில்லை.

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்து கொள்ளப்பட்டார்கள் என்று செய்தி வெளிவந்த கணத்திலேயே அவர்களை இந்த சமூகமும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மானபங்க படுத்தி விட்டார்கள். வெளிநாட்டு பெண்கள் என்றாலே பலபேருடன் சுற்றி திரிபவர்கள் என்று கணக்கு போடும் சமூகம் தானே இது... இராணுவத்தில் பெண்கள் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஆருடம் கூறும் அல்லது கற்பிதம் செய்யுமளவிற்கு மனவிகாரம் கொண்டவர்கள் இங்கு இருக்கின்றார்கள். விடுதலை புலிகள் குனியவைத்து சுட்டிருக்காவிட்டலால் பெண் போராளிகளை பற்றியும் இப்படி தான் கதைத்திருக்கும் சமூகம். தென்னிலங்கையில் விடுதலை புலிகளின் முகாம்களில் நடந்தவை என ஆபாச பட இறுவெட்டுகள் சிங்கள மொழி குரல் பதிகளுடன் உலாவியும் இருந்தன.

உண்மையில் பெண்கள் இராணுவத்தில் பாலியல் தேவைக்காக வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தி இராணுவ முகாம்களுக்கு முன் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசை அடிப்பணிய வைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விடயம் அல்ல. ஆனால் ஒரு பரபரப்பை கிளப்பி இலாபம் தேட முனையும் ஊடகங்களின் செயற்பாடுகள் கடுமையாக கண்டிக்க தக்கது. வெட்கி தலை குனிய வேண்டியது. ஒரு வேளை அவ்வாறான வன்புணர்வு சம்பவங்கள் நடந்திருக்கா விட்டால் என்ன செய்யும் இந்த ஊடகங்கள். அந்த பெண்களின் நிலை என்ன? இப்படி செய்தி பரப்பி விடுவதால் அந்த பெண்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் மானபங்க படுத்தி வருவதற்கு என்ன தண்டனை? இப்படி ஈனதனமாக போராட வேண்டிய நிலையிலா தமிழ் சமூகம் இருக்கின்றது. 

இன்று குமுறும் இந்த ஊடகங்கள் யுத்தம் முடிந்த காலத்தில் எங்கு இருந்தன.... 2009 காலப்பகுயில் இருந்து இன்று வரை நான் வவுனியா பேருந்து நிலையத்தில் நிற்பதில்லை.

அந்த காலப்பகுதியில் தடுப்பு முகாமகளிலிருந்தும் வேறு இடங்களில் இருந்தும் வவுனியா அநுராதபுர வைத்திய சாலைக்கு வந்து செல்பவர்கள் கணாமல் போனவர்களை தேடி ஜோசப் முகாம்க்கு வருபவர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டவர்களை பார்க்க வருபவர்கள் என வவுனியா பேருந்து நிலையம் நிறைந்திருக்கும். பெரும்பாலும் உறவுகளை தொலைத்துவிட்டு நிர்கதியான நிலையில் இருக்கும் பெண்கள் தான் நிறைந்திருப்பார்கள். இவ்வாறு நலிவடைந்த நிலையில் பலவீனமான பெண்களை குறி வைத்து பல்சர்களில் பேருந்து நிலையத்திற்கு ஆண்கள் கூட்டம் காலை முதல் படையெடுக்கும். வன்னி அயிட்டம் என்பது தான் இந்த பெண்களை குறிக்கும் சொல். பணத்தை காட்டி உதவுவதாக ஏமாற்றி கெஞ்சி என பலவழி முறைகளை கையாண்டு இந்த பெண்களை தங்கள் பாலியல் தேவைக்கு பயன்படுத்த வயது வித்தியாசமின்றி முனைந்தவர்கள் எத்தனை பேர். என்றுமே யுத்த களத்திற்கு சென்றிராத ஞாயிறு வீரகேசரியில் யுத்த செய்தி வாசித்து பெருமிதம் பேசிய இந்த நடுத்தர வர்க்கத்தை யாரும் அன்று கண்டு கொள்ளாதது  ஏன்? இந்த விடயம் வவுனியா நகரத்தில் வசிப்பவர்கள் உட்பட பலருக்கு நன்கு தெரியும்.... வேடிக்கை என்னவென்றால் வன்னி அயிட்டத்தை மடக்குவம் என்ற வெளிமாவட்டங்களிலிருந்து கூட பலர் படையெடுத்திருந்தார்கள். இவ்வாறான விடயத்திற்கு என்றே பல வீடுகள் இருந்தன. பல இசுலாமிய தமிழ் இளைஞர்கள் புலானாய்வாளர்கள் என்ற போர்வையில் பேருந்து நிலையத்தில் பெண்களை அச்சுறுத்தி பாலியல் தேவைக்கு அழைத்து சென்ற போது ஏன் இந்த ஊடகங்கள் வாய் மூடியிருந்தன?

வவுனியா பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னாள் ஏ9 வீதியில் தரனி ரெஸ்ட் என்ற விடுதி இருக்கின்றது. இங்கு தான் முகாம்களில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்பட்டது.அச்சுறுத்தி அழைத்துவரப்பட்டவர்களை விட ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்கள் தான் அதிகம். இந்த ஏமாற்று வேலையை அதிகம் செய்தவர்கள் மறத்தமிழர்கள் தான். பொலிஸ் இராணுவ ஆசிர்வாதம் இன்றி இந்த விடயம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விடயங்கள் சில தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

ஒட்டு மொத்தத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நலிவுற்ற பெண்களை வன்னி அயிட்டங்கள் என்று கொச்சைபடுத்தி தமிழ் சமூகம் மானபங்கபடுத்திய போது யாரும் கண்டு கொள்ளாதது ஏன்? வன்னியில் இருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அந்த சூழலில் வாடகை அறைகளில் தங்கியிருந்த மாணவிகளை அறை உரிமையாளர்களும் சுற்று வட்டாரமும் எண்ணத்தினாலும் பார்வையினாலும் மானபங்க படுத்தியதை யாரும் கண்டு கொள்ளாதது ஏன்?

ஒட்டுமொத்தமாக யுத்தத்திற்கு பின் தமிழ் பெண்களை இராணுவத்தை விட தமிழ் சமூகம் தான் அதிகமாக மானபங்கபடுத்தியது. மிக கேவலமான முறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை மானபங்க படுத்திய தமிழ் சமூகம் அதனை கண்டுகொள்ளாத ஊடகங்கள் அரசியல் தலைமைகள் இன்று மீண்டும் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களை மானபங்கபடுத்தி குறுக்கு வழியில் இலாபம் தேட முனைகின்றார்கள்.

யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது அடித்தட்டு மக்கள் தான். இன்று யுத்தத்திற்கு பிந்திய 5 ஆண்களில் புதிய நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது. இவர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை அதிகம் இருக்கின்றது. ஆனால் அதை மறந்து வெளிநாடுகளில் குடியேறுவது தொடர்பாக தான் அவர்கள் சிந்திக்கின்றார்கள். அவர்களை தட்டியெழுப்பி சமூக கடமையை ஆற்ற நிர்பந்தம் செய்ய வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் உண்டு. அதை செய்வதை விடுத்து அப்பாவி அடிதட்டு மக்களை மானபங்க படுத்தி வெற்றி பெற எத்தணிக்க கூடாது.

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைந்ததிற்கு விசனம் வெளியிடுபவர்கள், இதே இராணுவம் தங்கள் முகாம்களில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் பெண்  மாணவிகளுக்கு பயிற்சி வழங்கும் போதோ அல்லது ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி இராணுவ பதவி வழங்கும் போதோ அல்லது அவர்கள் பயிற்சிகளில் காயமுறும் போதோ மனஉளைச்சலுக்கு ஆளாகும் போதோ இவ்வாறான செய்திகள் வருவதில்லை. ஏனென்றால் இந்த நடுத்தரவர்க்க சிந்தனையாளர்களுக்கு தான் மானமும் கற்பும் உரியது. அடித்தட்டை சேர்ந்தவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. எதை சொல்லியும் அவர்களை கொச்சை படுத்தலாம். 

உண்மையில் இராணுவத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது ஊர்ஜிதம் என்றால் மக்கள் பிரதிநிதிகள் என்று நூற்று கணக்கில் இருப்பவர்கள் நியாயம் கிடைக்கும் வரை சத்தியாகிரக போராட்டம் ஒன்றை இராணுவ முகாமின் முன்னாள் ஆரம்பிக்கட்டும். நீங்கள் தைரியமாக இறங்கினால் மக்கள் பின் தொடர்வார்கள். அதற்குரிய வேலைகளை செய்வதை விடுத்து விட்டு ஊடகங்கள் இவ்வாறு செய்தி பரப்பி இலாபம் தேடும் ஈனபிழைப்பை நடத்த கூடாது. 

Post Top Ad

My Instagram