Post Top Ad

ஈரோஸ் பாடம் பயின்ற கண்ணாட்டி பொதுவுடமை விவசாய பண்ணை


மார்க்சிய லெனினிய தத்துவார்த்தத்தை தனது கொள்கையா கொண்ட ஈரோஸ் அமைப்பு  அதன் 
மாதிரி வடிவத்தை வவுனியாவிற்கு அருகில் கண்ணாட்டி எனுமிடத்தில் பொதுவுடமை விவசாய பண்ணையை நிறுவி நடைமுறையில் பரீட்சித்து பார்த்தது.  இம்முயற்சியே ஈரோசின் முதலாவது குறிப்பிட்டுச் சொல்லும் படியான அரசியற் பணியாகும். 

1976 ஆம் ஆண்டு மத்திய பகுதியில் இளைப்பாறிய ஆசிரியர் யோ.அருளப்புவின் உதவியுடன் தொடங்கப்பட்டது. 1977 ம் ஆண்டு ஆகஸ்டில் இத்திட்டம் 30 இளைஞர்களையும், 30 குடும்பங்களையும் கொண்டு கூட்டுறவு முறையில் வரிவுப்படுத்தப்பட்டது. வட மத்திய மாகாணத்தின் கெக்கிராவ, தம்புள்ள, போன்ற பகுதிகளில் இருந்து அகதிகளாக்கப்பட்ட குடும்பங்களில் ஐந்து குடும்பங்கள் எழுபத்தேழாம் ஆண்டு ஓக்டோபர் ஐந்தாம் திகதி பண்ணையில் சேர்க்கப்பட்டனர். அதன் பின்பு மேலும் பலர் பண்ணையில் சேர்க்கப்பட்டார்கள். சகலருக்கும் இளைஞர்களின் உதவியுடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

104 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இப்பண்ணையில் 30 ஏக்கர் நெல்வயல்களாகும். மிகுதி மேட்டு நிலம். ஒருபக்கம் குளமும், மிகுதி மூன்று பக்கங்கள் காடுகளாலும் சூழப்பட்டிருந்தது. இக்குளம் மருக்காரம்பளை என்று அழைக்கப்பட்டது. பண்ணையில் இளைஞர்களிலிருந்து மூன்று நல்வர், குடும்பங்களில் இருந்து மூவர் என ஏழுபேர்க் கொண்ட கமிட்டியினால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அடிக்கடி இளைஞர்களும், குடும்பங்களும் கூடி பண்ணையில் எழும் பல்வேறு பிரச்சனைகளையும் ஆராய்ந்து தெளிவுப்படுத்தி கொண்டார்கள். அத்துடன் அயல் கிராமங்களு டனும் நல்உறவு பேணப்பட்டது.

பண்ணையில் சுமார் 22 ஏக்கரில் நெல் விதைக்கப்பட்டது. காடுவெட்டப்பட்டிருந்த ஆறு ஏக்கர் நிலத்தில் மேட்டுநிலத்தில் காடு வெட்டப்பட்ட ஆறு ஏக்கர் மட்டப்படுத்தப்பட்டு மிளகாய். கௌப்பி என்பன பயிர் செய்யப்பட்டன. அத்துடன் கிணறும் தோண்டப்பட்டது. பண்ணையிலிருக்கும் குளத்தில் கணையன், விரால், வாழை போன்ற மீன்கள் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மீன் பிடிப்பதற்காக ஐந்தைந்து பேர் கொண்ட குழுக்கள் பிரிக்கப் பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நாள் மீன்பிடிக்க அனுப்பட்டது. பிடிக்கப்படும் மீன்கள் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். நிர்வாகம் மீனை சமமாக விநியோகம் செய்யும். எனினும் மீன்பிடித்தவர்கள் நல்ல மீன்களை எடுத்த கீறி கருவாடு போட்டு கொண்டதால், இந்த முறை நிறுத்தப்பட்டு மீன்பிடிக்கும் பொறுப்பு முற்றாக இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பண்ணையில் உள்ள மாட்டு பண்ணையில் மாடுகள் வளர்க்கப்பட்டன. காலையில் பாண் விநியோகம் செய்யப்படும். குழந்தைகள் உள்ள குடும்பங்களிற்கு அதிகமாக பால் விநியோகம் செய்யப்படும். மேலும் கோழிகளும் வளர்க்கப்பட்டதுடன் மா, வாழை போன்ற பயன்தரும் மரங்களும் நாட்டப்பட்டன. ஆரம்பத்தில் பண்ணையில் 1200 புசல் நெல்லும், 1500 இறாத்தல் மீனும் உற்பத்தி செய்யப்பட்டன. பண்ணையில் மிருகசக்தியை பயன்படுத்தி  குடிசை கைத்தொழில்களை விருத்தி செய்யும் நோக்கில், 'எருதி" என பெயரிடப்பட்ட இயந்திரம் திட்ட அளவில் பரீட்சிக்கப்பட்டு செயல் வடிவத்திற்கு வந்தது. 

காணியை வாங்கிக்கொள்வது என்ற அபிப்பிராயம் நிலவிய போதும் சில காரணங்களின் நிமித்தம் காணியை தனியாரின் பெயரில் வைத்துக்கொள்வது எனவும் பின்னர் செயற்குழுவின் பொதுவுடமையாக உரிமைப்படுத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. காணிக்கு குத்தகையாக சிறு தொகை கொடுக்கப்படல் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அப்படி எந்த தொகையும் வழங்கப்படவில்லை. ஆசிரியர் அருளப்புவும் பண்ணையில் இருந்து தன் அனுபவங்களை மக்களுடன் நீண்ட காலமாக பகிர்ந்துகொண்டார்.

பண்ணையில் வேலை செய்யும் ஆண்களுக்கு மாதம் 150 ரூபாவும், பெண்களுக்கு 100 ரூபாவும், இளைஞர்களுக்கு 150 ருபாவும் மாத பொருட்படி வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலை செய்தால் மாதம் 250 ரூபாய்க்கு பண்ணையில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கலாம். அத்துடன் ஊக்க பணமாக நாளொன்றுக்கு வேலை செய்யும் ஆண்களுக்கு ஒன்றரை ரூபாயும், பெண்களுக்கு ஒரு ரூபாயும் வழங்கப்பட்டது. அத்துடன் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை இலாபம் சமமாக பகிரப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. சிறு தேவைகள் ஏற்படும் போது கடனும் வழங்கப்பட்டது. பொருட்படியின் படிபொருட்கள் வாங்காமல் விடப்பட்ட தொகை கையளிக்கப்பட்டது. சிறுவர்கள் கண்ணாட்டியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்றார்கள். இளைஞர்களும் சிறுவர்களுக்கு பாடம் புகட்டினார்கள். இந்த பண்ணையிலிருந்து இளைஞர்கள் பேராதனை, யாழ் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகினார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. 

பண்ணையில் இருந்தவர்கள் அநேகர் சொந்த நிலம் வைத்திருந்தவர்கள். எனவே தனிப்பட்ட போக்கில் பல காலம் வாழ்ந்த அவர்களுக்கு இத்திட்டத்தில் ஈடுபடுவது கடினமாகவே இருந்தது. முதலில் நிலம் தனிதனியாக பகிர்ந்து கொடுக்கப்படல் வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது. வீடுகள் கட்டுவதற்கு தனித்தனியாக நிலம் தரவேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது.  பின்னர் இவ்வாறான கேள்விகள் மறைந்ததோடு, அனைவரும் ஒன்றாக இருக்க பழகிக்கொண்டதுடன் அவ்வாறே தொடர விரும்புவதாகவும் தெரிவித்தனர். இரண்டொரு குடும்பங்கள் தனித்து காடுவெட்டி இருக்க விரும்புவதாக கூறி பண்ணையை விட்டு வெளியேறி போனாலும், சில நாட்களின் பின் பண்ணைக்கே திரும்பினார்கள்.

பண்ணையில் பிரச்சினை ஏற்ப்பட்டால் அவை உடன் தீர்த்து வைக்கப்பட்டது. பாதகமான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட்டன. ஒரு முறை காவல் நேரத்தில் வேட்டையாடப்பட்ட பன்றி ஒன்றை வெளியிடத்திற்கு கொண்டு போய் விற்று விட்டதாக பிரச்சினை எழுந்தது. உடன் அப்பிரச்சினை விசாரணை செய்யப்பட்டு உண்மையென்று கண்டதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மீன் விநியோகம் நிறுத்தப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பிழையை உணர்ந்து மன்னிப்பு கோரியதால் மீண்டும் மீன் விநியோகிக்கப்பட்டது. 

பண்ணை காவல் துறையினரின் நெருக்குவாரங்களையும் எதிர்க் கொண்டது. இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்கள். சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்றன. பண்ணையின் வளர்ச்சிக்கு இது தடையாக அமைந்தது. 

பண்ணை அகதிகள் புனர்வாழ் கழகத்தினர் வழங்கிய கடனை முதலீடாக கொண்டே இயங்கியது. ஆரம்பத்தில் இக்கடனை திருப்பி செலுத்துவதும் கடினமானதாக இருந்தது. எனினும் பின்னர் பலர் உதவி செய்ய முன்வந்தார்கள். பண்;ணையில் பொதுமை மனப்பான்மை, பண்பாடு ஊக்குவிக்கப்பட்டது. உழவர் திருநாளாகிய பொங்கள் நாளன்று பெரும் கலைவிழா இடம்பெறும். தொழிலாளர் தினமாகிய மேதினத்தன்று சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. குடும்பங்கள் கூட்டுறவு இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வதால் அவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மை மறைந்தது. இளைஞர்களும் குடும்பங்களும் அன்புடன் பழகிக்கொண்டார்கள். விவசாய நடவடிக்கைகளில் அனுபவம் கொண்டவர்களிடம் இருந்து எப்போதும்  ஆலோசனைகள் பெறப்பட்டன. பண்ணையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக , தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி அனைவரும் கூடிக் கலந்துரையாடினார்கள். அத்துடன் கருத்தரங்குகளும் நடைப்பெற்றன. வெறும் பேச்சுடன்  நிற்காமல் கலந்துரையாடும் விடயங்களை அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் நடைமுறைப்படுத்தவும் விழைந்தார்கள். இத்தகைய செயற்பாடுகளினால் அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒரு சமூகம்பண்ணையில் உரு பெற ஆரம்பித்திருந்தது. எனினும் அப்போதைய அரசியல் நெருக்குவாரங்கள், அமைப்பின் இயக்கம் நிறுத்திக் கொள்ளப்பட்டமை என்பன போன்ற பலக்காரணங்களால் பண்ணை அதன் இறுதி இலக்கை பரீட்சித்து பார்ப்பதில் வெற்றி பெறவில்லை. எனினும் பல அனுபவங்களையும், படிப்பினைகளையும் தரக்கூடியதாகவும், எதிர்கால பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நடை முறையில் தீர்வுகளை அமுல்படுத்தி   பார்க்க எனபலவகையில் இவ் பொதுவுடமை விவாசாய பண்ணை முன்னெடுப்புக்களை வழங்கியிருந்தமையை யாரும் மறுக்க முடியாது. இவ்அனுபவத்தை ஆழமான ஆய்விற்கு உட்படுத்துவதானது எமக்கும் எதிர்காலத்திற்கும் பல வழிக்காட்டல்களை வழங்கி நின்று வழிக்காட்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram