Post Top Ad

கிழக்கை அபகாிக்கும் சதித்திட்டம்


1997 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் சனாதி பதியாவிருந்த காலத்தில் அவரது பிரத்தியேக விசேட செயலணியினரால் நாட்டிற்கு ஒருதேசிய பௌதீக திட்டம் தேவை என்ற விடயம் பரிந்துரை செய்யப்பட்டதிற்கமைய, 2000 ஆம் ஆண்டு நகர மற்றும் திட்டமிடல் (திருத்த) சட்டத்தின் 49 ஆம் பிரிவிற்கமைய தேசிய பௌதீக திட்டத்தை தயாரிப்பதற்காகவும், அமுல்படுத்துவதற்காகவும் தேசிய பெதீகத் திட்டமிடல் திணைக்களம் உருவாக்கப்பட்டது. 

தொடர்ந்த திட்டமிடல்களின் ஊடாக திட்டம் தயாரிக்கப்பட்டு, 2007 ஆம் ஆண்டு அப்போதைய சனாதிபதி மகிந்தராசபக்சவினால் அங்கீகாரமளிக்கப்பட்டது. அதன் பின் நகர மற்றும் வீடமைப்பு அமைச்சராகவிருந்த விமல் வீரவன்சவின் கீழ் இத்திட்டம் 20 ஆண்டுகளிற்குரிய திட்டமாக விரிவாக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றது. இத்திட்டம் குறித்தும், மலையக பிரதேசத்தில் இத்திட்டம் கொண்டுள்ள உள்நோக்கங்கள் குறித்தும் கடந்த ஏலவே இங்கு பதிந்துள்ளேன். 

2030 ஆம் ஆண்டு இலங்கை எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணக்கருவில் தாயாரிக்கப்பட்ட இத்திட்டத்தில் கிழக்கு பிராந்தியமும் விசேட கவனத்திற்குள்ளாக்கப்பட்டு அதுகுறித்தும் திட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கு கிழக்கு பிராந்திய பௌதீக கட்டமைப்பு திட்டம் என பெயாிட்டுள்ளார்கள். இத்திட்டமானது இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் என பல இடங்களில் மறைமுகமாக குறித்தும் காட்டப்பட்டுள்ளது. 

இலங்கையின் எந்வொரு பாரிய அபிவிருத்தி திட்டமும் அரசின் கொள்கையான சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் சந்தர்ப்பங்களை தவறவிடுவதில்லை. அந்த வகையில் கிழக்கு பிராந்தியம் முன்பு பல முறை சந்தித்தது போல் இன்னுமொரு அரசின் திட்டமிட்ட குடித்தொகை சீர்குழைப்பு சதிதிட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

கிழக்கு மாகாணம் 10,000 சதுர கிலோமீற்றரில் பரந்து காணப்படுவதுடன், அது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 15 சதவீதமானதாகும். அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாவட்டத்தின் சனத்தொகை 15 இலட்சங்களாகும். இது மொத்த சனத்தொகையில் 6.7சதவீதம் ஆகும். 

ஏலவே இம்மாகாணத்தில் 4400 சதுரகிலோமீற்றர் விஸ்தீரனத்தை கொண்ட அம்பாறை மாவட்டமும், 2700 சதுரகிலோமீற்றர் விஸ்தீரனத்தை கொண்ட திருகோணமலை மாவட்டமும் திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றங்களால் நிரம்பி வழிகின்றன. மட்டகளப்பையும் வெலிக்கந்தை ஊடாக ஒரு புறம் நெருக்கினாலும் அம்மாவட்டத்தில் பெரிய அளவிளான குடியேற்றங்கள் சாத்தியமாகிடவில்லை. இலங்கையின் நிர்வாக மாவட்டங்கள் 25 இல் அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல என்று சிங்கள பெயர் கொண்ட தேர்தல் மாவட்டமாக அழைக்கப்படுவதும் சிங்கள பேரினவாத முன்னெடுப்பின் சிறுபிள்ளைத்தனமான ஆவாவே ஆகும். 

திருகோணமலையை வடமத்திய மாகாணத்துடன் இணைத்துக்கொள்ளும் எண்ணமும் ஆசையும் கொழும்பு அரசிற்கு நீண்டகாலமாக உள்ளது. பலசமயங்களில் அதற்கான முயற்சிகளை மாறி மாறி வந்த அரசாங்கங்கள் செய்திருந்தன. அந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டத்தில் திருகோணமலையை வடமத்திய மாகாணத்துடன் இணைத்துள்ளார்கள்.

இந்த திட்ட அணிவகுப்புகளே கொழும்பு அரசு இத்திட்டத்தினூடாக நடைமுறைபடுத்த எத்தனிக்கும் சிங்கள மேலாதிக்க திணிப்பும், தமிழ்பேசும் மக்களின் குடித்தொகை செறிவை சீர்குழைக்கும் நோக்கும் தெரிய வருகிறது. 

கிழக்கு பிராந்திய பௌதீக கட்டமைப்பு என்பதின் கீழ் அம்பாறை, மட்டகளப்பு மாவட்டங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்ததிட்ட அறிக்கையில் பத்துஇலட்சம் பேரை குடியமர்த்தக்கூடிய வகையிலமைந்த கிழக்குபாரிய பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதும் குறிப்பிடதக்கது. இவ்வாறு உருவாக்கப்படும் நகரங்களில் சமூக பல்லினத்தன்மை பேணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் எங்கிருந்து சனத்தொகை இடம்பெயர்க்கப்படும் என்ற குறிப்புக்களும் திட்ட அறிக்கையிலேயே தரப்பட்டுள்ளன. அந்த வகையில் நாட்டின் மத்திய பகுதியில் கூர்உணர்வான பிரதேசங்கள், பாதுகாக்கப்படவேண்டிய பிரதேச ங்கள் என்பன இனங்காணப்பட்டு சனத்தொகை இடம்பெயர்க்கப்படும்.  ஒரு போதும் இந்த பகுதிகளில் தமிழ் பேசும் மக்களை குடியேற செய்ய மாட்டார்கள். எனவே தெட்டத்தெளிவாக , இத்திட்டம் இலக்கு வைக்கும் 10 இலட்சம் என்ற சனத்தொகையை அடைய பெரும்பாலான சிங்களவர்களை குடியமர்த்த போகின்றார்கள். 

கிழக்கு பிராந்தியத்திலேயே கல்லோயா போன்று பல விவாசாய. கைதொழில், நீர்பாசனத்திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. இவையெல்லாம் கடந்தகாலத்தை நினைவுபடுத்தி எதிர்கால ஆபத்தை அறிவிக்கும் சகுனங்களாகவே எமக்கு தென்படுகிறது.

வடகிழக்கு மாகண இணைப்பை ரத்துசெய்து, கிழக்கில் இசுலாமிய மக்களை பிரித்து, திருகோணமலையை வடமத்தியமாகணத்துடன் இணைக்க முயற்சித்து, சேருவிலாவில் சிங்கள குடியேற்றத்தை அமைத்து, சீனன் குடாவை சிங்களவர்களை கொண்ட பிரதானநகரமாக்கிட முயற்சித்து, அம்பாறையில் குடியேற்றங்களை ஏற்படுத்தி என சிறிலங்கா அரசு இது வரை எதனை செய்ய முற்பட்டதோ அதெற்கெல்லாம் இறுதி வடிவம் கொடுக்கும் பேராசையில் அபிவிருத்தியின் பேரில் தீட்டியிருக்கும் திட்டமே தேசிய பௌதீக கட்டமைப்பு கொள்கையாகும். 

ஈழவர்களிடையே முரன்பாடுகளை தோற்றுவிப்பதன் மூலமும், ஈழவர்களின் குடித்தொகை அமைவை சீர்குலைத்து சிங்கள குடியேற்றங்களால் சுற்றி வளைத்து சிங்கள மேலாதிக்க வலைப்பின்னலினுள் சிறைப்பிடிப்பதன் மூலமும் ஈழவர்களின் தேசிய அந்தஸ்த்தை இல்லாதொழித்து ஈழவர்களின் உடமைப்பாட்டிற்கான முன்னெடுப்புக்களை தோற்கடிப்பதுவே அரசின் கபட திட்டம். 

ஈழவர்களின் உடமைப்பாட்டை வென்றெடுப்பதற்காக செயற்படும் இயக்கங்கள் அமைப்புக்கள் கட்சிகள் இவ்வாறான சதித்திட்டங்களை தக்க சமயத்தில் இனங்கண்டு தோற்கடிக்க செயல்பாட்டில் இறங்கவேண்டியது அவசியமானதாகும். வெறும் புள்ளிவிபர கணக்கிற்கு தகவல்களை சேகரித்து வைத்திருந்தால் வேடிக்கை பார்த்து கோட்டை விடும் நிலையே ஏற்படும். அனைவரும் ஒரு தடவை மாவிலாறு பகுதி குடியேற்றம் ஏற்படுத்தி தாக்கம் என்ன என்பதை சிந்தித்து பார்த்தால் என்ன செய்ய வேண்டும் என்பது இலகுவாக புலனாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram