Post Top Ad

ஐதேக - சர்வதேசத்தின் நலன்காக்கும் கட்சி #பகுதி 02


2015 இல் மைத்ரிபால  வெற்றிபெற்றதை ‘சனநாயக புரட்சி’, ‘சனவரி 8 புரட்சி’ என்றெல்லாம் அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையாக நடந்தது என்னவென்றால், சீனாவின் பக்கம் சென்று கொண்டிருந்த இராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாக வேலை  செய்யக் கூடிய  மைத்ரிபாலவை ஆட்சியில் அமர்த்தியதாகும்.

‘ஒரு சோற்றுப் பானைக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். மைத்ரிபால வெற்றியின் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்காக்கும் அரசியல் இருந்ததுக்கு நான் சொல்லப்போகும் ஒரு உதாரணமே நல்ல சாட்சி. இங்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் எனப்படுவது ஐரோப்பாவின் பலவான்கள், பிராந்திய சண்டியர் இந்தியா மற்றும் ஜப்பானும் சேர்ந்த கூட்டுதான். 

இராஜபக்ச சீனாவின் மறைமுக உதவியுடன், திருகோணமலையில் பாரிய கைத்தொழில் வலயம் ஒன்றை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்திருந்தார். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால் திருகோணமலை சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருக்கும்.  

ஐதேக ஆதரவில் மைத்ரிபால  சனாதிபதியான பின் முதல் வேலையாக , திருமலை திட்டத்தைத் தடுத்து நிறுத்தி அமெரிக்க ஏஜமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டினார்.
2012 ஆம் ஆண்டு கைத்தொழில் வலயத்துக்குத் தேவையான காணிப்பிரதேசம் சம்பூர், மூதூர் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது. 2015 இல் மைத்ரிபால இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக அறிவித்தார். இதனால், ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த நிறுவனத்தால் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.

திருகோணமலையின் முக்கியத்துவம் என்ன?
திருகோணமலையில் அமைந்திருக்கும் இயற்கை துறைமுகத்திற்குள், ராடார் அவதானிப்பு கருவிகளில் சிக்காமல் நீர்மூழ்கிக் கப்பல்களைக்  கொண்டு வரவும், பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் முடியும்.  உயரமான மலைகள் சூழ்ந்து துறைமுகத்துக்கு பாதுகாப்பு அரணாக இருக்கின்றது. துறைமுகத்துடன் தொடர்பு பட்டதாக நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட  எண்ணெய் குத தொகுதியும் உள்ளது. இந்த வசதிகளை கொண்டு இந்து சமுத்திர பிரதேசத்தில் நடக்கும் கடற்சண்டைகளில், எதிரியின் கண்காணிப்பில் மண்ணைத்தூவிவிட்டு, பாதுகாப்பாக இருந்துகொண்டு தாக்குதல்களை நடத்தலாம்.

இவ்வாறு, போரியல் முக்கியத்துவம்வாய்ந்த திருகோணமலை பிரதேசத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் இந்தியா மிகத் தீவிரமாக இருந்து வருகின்றது. போருக்குப் பின் சம்பூரில் அனல் மின்சார நிலையம் அமைக்கும் திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட இருந்தது. திருகோணமலை எண்ணெய் குத தொகுதி இப்போதம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது.

திருகோணமலையின் ஆதிக்கம் சீனாவுக்குச் செல்லவிருந்தது எப்படி?
திருகோணமலை கைத்தொழில் வலயத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒப்பந்தம் சிறிலங்கா கேட்வே இன்டஸ்டிரிஸ் எனும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் கம்பனிக்கு வழங்கப்பட்டிருந்தது. இராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களும், உறவினர்களும் இக் கம்பனியின் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். இந்த திட்டத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவிருந்தது. இந்தளவு நிதியைக் கையாளும் வலு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பனிக்கு இருக்கவில்லை. ஆனால், கேட்வே கம்பனி அவுஸ்திரேலியாவில் இயங்கும் மிச்சல் கொன்சோட்ரியம் எனும் கம்பனி ஒன்றுடன் உதவி பெறுவதற்கான உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தது. குறித்த அவுஸ்திரேலியா கம்பனி சீன அரசின் பினாமி கம்பனியாகும்.

கம்பனி வலையமைப்பை உருவாக்கி, அபிவிருத்தி திட்டங்களுக்கு மறைமுகமான அல்லது நேரடியான வழிகளில் கடன் கொடுப்பதும், பின்னர் கடனை காட்டி நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கையகப்படுத்துவதும் சீன அரசின் வழிமுறையாகும். இந்த வழிமுறையிலேயே சீனா திருகோணமலையில் ஆதிக்கத்தை நிலை நாட்ட முனைந்தது.

இராஜபக்ச சீன உறவு
இராஜபக்சவின் சீனாவுடனான உறவு 2005 ஆம் ஆண்டே ஆரம்பித்துவிட்டது. மகிந்தவுக்கு முன்னதாக சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் , பந்துல வீரரட்ண என்ற வர்த்தகரே தனிநபராகச் சீனாவுடனான வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்து வந்தார். பஹாமவில் இயங்கும் அவரது செல்வீரா டிரெடிங் கம்பனி மூலமே மேற்படி வர்த்தக உறவுகள் கையாளப்பட்டன. 

இராஜபக்ச அதிகாரத்துக்கு வந்த பின்னர் பந்துல வீரரட்ன அவருடன் கைகோர்த்துக் கொண்டார். எனினும், சீனாவுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் பந்துல வீரரட்ண தனி ஆதிக்கம் செலுத்துவதிலிருந்து படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு இராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களும் இணைக்கப்பட்டார்கள். பந்துல வீரரட்ண மகிந்த தரப்புடன் முரண்படாமல் அவர்களுடன் இணைந்து வேலை செய்தார். இதற்குப் பிரதிபலனாக தொலைக்காட்சி நடத்தும் உரிமம் உட்படப் பல வர்த்தக சலுகைகள் வீரரட்ணவுக்கு கிடைத்திருந்தது. இந்த தொலைக்காட்சி உரிமம் மூலமே, மகிந்தவின் புதல்வர்களுக்குச் சொந்தமான சிஎஸ்என் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பந்துல வீரரட்ணவுடன், சீனாவுடனான கொடுக்கல் வாங்கல்களைக் கையாண்டவர்களில் பிரபாத் நாணயக்கார, டில்சான் விக்ரமசிங்க ஆகிய இராஜபக்சவுக்கு நெருக்கமான நபர்கள் முக்கியமானவர்கள். பிரபாத் நாணயக்கார சிறிலங்கா கேட்வே இன்டஸ்ரிஸ் கம்பனியின் தவைராவார். எசட் இன்டநெசனல், அசட் நெட்வேர்க் ஆகிய கம்பனிகளின் தாய்க் கம்பனியான அசட் ஹொல்டிங் கம்பனியும் பிரபாத் நாணயக்காரவுக்கு சொந்தமானதாகும். இந்த கம்பனி, திருகோணமலை கைத்தொழில் வலய திட்டத்துக்கு உதவி பெறப்பட்ட மிச்சல் கன்சோட்ரியம் அவுஸ்திரேலிய கம்பனியின் பங்குதார கம்பனியாகும்.  மிச்சல் கன்சோர்டியம் கம்பனி அசட்  ஹால்டிங்கை தவிர, மிச்சல் குருப்ஸ், சலாவா கோர்பரேன் எனும் இரு கம்பனிகளுக்கும், பெயர் குறிப்பிடப்படாத பிரேசில் நாட்டவருக்கும் சொந்தமானதாகும். பங்குதார கம்பனிகளில் சீன கம்பனிகளும் பங்குகளை வைத்திருக்கின்றன.

டில்சான் விக்ரமசிங்க, மகிந்தவின் மைத்துனரான நிசாந்த விக்ரமசிங்கவின் (முன்னாள் சிறிலங்கன் எயார்லைன்ஸ் தலைவர்) மகனாவார். இவர் பிரபாத் நாணயக்கார தலைவராக இருக்கும் அசட் ஹொல்டிங் கம்பனிக்கு சொந்தமான அசட் நெட்வொர்க், அசட் இன்டர்நெசனல் ஆகிய கம்பனிகளின் தலைவராவார்.

சீனா இலங்கையில் முன்னெடுத்த சகல அபிவிருத்தி திட்டங்களும் இப்படியான 5 கம்பனி வலையமைப்புகள் மூலம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்தின் பின்னாலும் இராஜபக்சவின் குடும்பத்தினர் இருந்தார்கள். சீனாவுக்குத் தேவையான காணிகள் கையகப்படுத்திக் கொடுப்பதிலிருந்து அனைத்து வசதிகளையும் மகிந்த அரசாங்கம் செய்து கொடுத்தது. இதற்குக் கைமாறாக மகிந்த குடும்பத்தினர் தரகு பணம் பெற்றுக் கொண்டார்கள்.

2005 இலிருந்து 2010 வரை இவ்வாறு 1.2 முதல் 1.8 வரையிலான பில்லியன் அமெரிக்க டொலார்கள் இராஜபக்சவுக்கு கிடைத்துள்ளது. பதிலுக்கு சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் காலப்போக்கில் சீனாவின் கைகளுக்கு செல்வதைப் கண்டுக் கொள்ளாமல் விட்டார்கள்..

இவ்வாறே அம்பாந்தோட்டை துறைமுகம் தற்போத சீனாவின் வசமாகியுள்ளது. சீனாவின் பெரும்பாலான கம்பனிகளில் சீன அரசும் பங்குதாரராக இருக்கின்றது. கொழும்பு நகருக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர் திட்டத்தை முன்னெடுக்கும் கம்பனியிலும் சீன அரசின் சார்பில் சீன அதிபர் பங்குதாரராக இருக்கின்றார்.

நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்த அமெரிக்காவும் - சீனாவும்

இராஜபக்சவின் அனுசரணையில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வருவதையும், திருகோணமலையில் சீனாவின் கை ஓங்கப் போவதின் ஆபத்தையும் உணர்ந்த அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டு, மகிந்தவுக்கு எதிரான அலையை உருவாக்கும் வேலைகளில் இறங்கியது.

ஒருபக்கம் போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எனச் சர்வதேச ஸ்தாபனங்கள் மூலம் நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்டது. மறுபக்கம் ஐதேக, சந்திரிக்கா அம்மையார், மகிந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்பான அரச சார்பற்ற நிறுவனங்களையும் இணைத்து ஊடகங்கள் மூலம் மகிந்தவுக்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது.

தனது செல்வாக்கு வீழ்ந்து வருவதையும்,. நிலைமை கைமீறிப் போகப் போவதையும் உணர்ந்த மகிந்த முன்கூட்டியே தேர்தலை நடத்தத் தீர்மானித்தார். சீனாவும் இதே ஆலோசனையைக் கொடுத்திருந்தது. கடந்த தேர்தலின் போது மகிந்தவுக்கு சீனா நிதி உதவி வழங்கியதைச் சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருந்தன. இதை மகிந்த தரப்பு இதுவரை மறுக்கவில்லை.

எனினும், முன்கூட்டி நடத்தப்பட்ட தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் காரணமாக மகிந்த சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

அமெரிக்கா கலால் சொல்லியதைத் தலையால் செய்த மைத்திரி – ரணில் கூட்டாட்சி

மைத்திரி சனாதிபதியானதும் திருகோணமலை கைத்தொழில் வலயம் அமைக்கக் காணி கையகப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்ததன் மூலம் சீனாவின் திட்டத்துக்கு ஆப்பு வைத்தார். கேட்வே இன்டஸ்ரிஸ் கம்பனி இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இது போல் அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டின் நலனுக்குத் தேவையான சகல விடயங்களையும் மைத்திரி-ரணில் கூட்டாட்சி செய்து கொடுத்தது. அமெரிக்கா இலங்கையைப் போர் நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் ஒப்பந்தம் உட்பட நாட்டின் பிரதான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குத் தாரைவார்த்த பல விடயங்களைத் தொடரும் பகுதிகளில் பார்க்கலாம்.

ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து வெற்றிப்பெற்றால் மேல் கூறியது போல் முழு நாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுவதே நடக்கும். மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து வராத வகையில் மக்களின் சிந்தனையிலும், பண்பாட்டிலும் மாற்றங்கள் உருவாக்கப்படும். இது எமது சமூகத்தின் கலை,கலாசார, பண்பாட்டு அம்சங்களிலும், சமூக வாழ்க்கையிலும் பாரிய சிதைவை உருவாக்கி, மேலைத்தேய பண்பாட்டின் பக்கம் எம்மை தள்ளி செல்லும்.

மேலும்., இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைகள் நிறைவேறும் போது போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமை மீறல் விடயங்களை சர்வதேசம் கைவிட்டு காலஅவகாசம் கொடுக்கும் நாடகத்தை ஆடி வருகின்றது.

எனவே, ஐதேக வுக்கு ஆதரவளிப்பதானது நாட்டுக்கும், தமிழ் சமூகத்துக்கும் விரும்ப தகாத விளைளவுனயை தரும் விடயமாகும். தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஏகாதிபத்திய சார்பு ஐதேக வேட்பாளர் சஜித் பிரேமதாசா வெற்றி அடைந்தால், சர்வதேச ஸ்தாபனங்கள் போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமை மீறல் போன்ற விடயங்களுக்கு கால அவகாசம் வழங்கி பிரச்சினையை மழுங்கடிக்கும் வேலையையே செய்யும்.

சஜீத்துக்கு ஏன் வாக்களிக்க கூடாது - பகுதி 01

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram