Post Top Ad

தன்னிச்சையான போராட்டமா? - தமிழக மாணவர்களின் போராட்டம் 05

தமிழக மாணவர்களின் போராட்டம் தன்னிச்சையானது, அரசியல் சார்பற்றது என்ற அடையாளப்படுத்தல்களுடன் நடத்தப்படுகின்றது. சிலர் அதனை நிருபிக்க கடுஞ்சிரத்தை எடுத்துக்கொள்வதையும் காணக்கூடியாதாக உள்ளது.  மெரீனா கடற்கரையில் நடந்த போராட்டத்தில்  மூக்கை நுழைக்க வந்த எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களையும்  மாணவர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் மாணவர்கள்தங்களின் கூட்டங்கள் போராட்டங்களில் அரசியல் பிரமுகர்களுக்கு உரையாற்ற இடம்
கொடுக்கவில்லை. மேற்சொன்னவற்றைக் கொண்டு மாணவர் போராட்டத்தினை தன்னெழுச்சியான போராட்டமாக அடையாளப்படுத்தும் அதேவேளை அவ்வாறு இனங்காண முயற்சிக்கின்றனர்.
வைகோ, சீமான் வந்து உரையாற்றினால் தான் போராட்டம் அரசியல் சார்பற்றது என்றால் உண்மையில் அரசியல் சார்பற்றது தான். ஆனால் எந்தப் போராட்டமும் அரசியலற்றதாகி விட முடியாது. அரசியல் கட்சி சாராததாகவே அமையவேண்டும். ஓட்டுகட்சிகள் எப்போதும் தன் நலன் சார்ந்தே செயற்படும். மக்கள் நலன் சார்ந்தல்ல. அந்த வகையில் அரசியல் மாற்றம் ஏற்படுத்தாமல் போராட்டத்தில் சாதகமான பலனை அடைந்திட முடியாது. அப்படி முடியுமானால் பல பத்தாண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சுபவர்கள் இதனை தீர்த்திருப்பார்கள். அரசியல் தளத்தில் மக்கள்விரோத சக்திகளுக்கு பதிலாக மக்கள் சக்திகளை இருத்துவதும் வெற்றிதான்.
தமிழக மாணவர்களிடத்தில் இத்தகைய எழுச்சியை உருவாக்கிட வேண்டும் என்பது விடுதலைப் புலிகள் உட்பட பலரின் அவாவாக இருந்தது. பலர் அத்தகைய முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டார்கள். பலர் இவ்வாறான எழுச்சிக்காக பல்வேறு காரணங்களிற்காக ஏங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எதற்கும் மசியாத மாணவர்கள் இறுதியாக பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான படங்கள் வெளியானதுடன் களத்தில் இறங்கினார்கள். சனல்-4 விற்கு இங்கு பெரிய இடமுள்ளது. மனித உரிமை கூட்டங்கள் நடைபெறுவதும் அதனை ஒட்டி யுத்தக் குற்றங்கள் தொடர்பான படங்கள் வெளிவருவதும் இவ்விரண்டு சம்பவங்கள் அல்ல. சனல்-4 விற்கு இத்தனை பிரச்சாரம் கொடுக்கப்படுவதன் நோக்கமே அதனை ஒட்டியதாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது தான். இங்கே விடுதலைப் புலிகள் உருவாக்கி விட்டிருந்த அழுத்தக் குழுக்களின் திறன்களை, விடுதலைப்புலிகளின் தோல்வியைக் கொண்டு இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று புறந்தள்ளிட முடியாது. அவ்வாறான அழுத்தக்குழுக்களின் செயற்பாடுகளும் சிலவற்றை நடத்தி கொண்டு தான் இருக்கின்றன. அத்தோடு தமிழக மாணவர்களின் போராட்டம் தமிழ்நாட்டு முதல்வருக்கு தொடர்ச்சியாக தலையிடியாக இருந்து வந்த ஈழ ஆதரவு போராட்டங்களை ஒரங்கட்டி உதவி செய்துள்ளன. இவை எல்லாம் கலந்த கலவையே தமிழக மாணவர்களின் எழுச்சி. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட திட்டமிடப்படாத எழுச்சியாகும்.

Post Top Ad

My Instagram